உறுதியான தலைமைத்துவமும் மக்களின் துணிவுமே சதிப் புரட்சியை தோற்கடித்தன
இலங்கையின் சமகால விவகாரங்களில் அக்கறையுடன் உள்ளோம் : இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்கா ஒஸ்சுஹதார்
துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கையாள்வதில் முஸ்லிம் நாடுகளின் நகர்வுகள் குறித்தும் இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்கா ஒஸ்துஹதார் விடிவெ ள்ளிக்கு வழங்கி செவ்வி:
நேர்காணல்:
எம்.பி.எம். பைறூஸ்
Qதுருக்கியில் 2016 இல் இடம்பெற்ற சதிப் புரட்சியின் பின்னணியை சற்று விளக்க முடியுமா?
துருக்கியில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக 2016 ஜூலை 15 ஆம் திகதி சதிப் புரட்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த சதிப் புரட்சியின் பின்னால் இருப்பது FETO என்றழைக்கப்படும் தீவிரவாத குலான் இயக்கமாகும். கடந்த 20 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் துருக்கிய பிரசாரகரான பத்ஹுல்லா குலான் என்பவரே இதன் பின்னணியில் உள்ளார். இராணுவத்தினுள்ளும் அரச இயந்திரத்தினுள்ளும் இரகசியமாக ஊடுருவியிருந்த குலான் இயக்கத்தின் உறுப்பினர்களே இந்த சதிப் புரட்சியை முன்னெடுத்தனர். இந்தப் புரட்சியிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடினர். புரட்சியை மேற்கொண்டவர்களின் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 251 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு பாராளுமன்றம், ஜனாதிபதி கட்டிடத் தொகுதி, பொலிஸ் தலைமையகம் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. அரச ஊடகங்களையும் ஆயுத முனையில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
துருக்கி குடியரசை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சி செய்வதும் அதன் ஊடாக உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதுமே அவர்களது நோக்கமாகும். இந்த இயக்கத்தின் பின்னணியில் துருக்கியின் எழுச்சியை விரும்பாத வேறு சில நாடுகளின் மறைகரங்களும் உள்ளன.
Qஇந்த சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது எவ்வாறு? இந்த சதிப் புரட்சியை வெற்றி கொண்டதில் துருக்கி ஜனாதிபதி அர்துகானின் பங்களிப்பு என்ன?
ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானின் உறுதியான தலைமைத்துவம், சமயோசிதமான செயற்பாடு மற்றும் எமது நாட்டு மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான துணிவு, அர்ப்பணிப்பு ஆகியனவே இந்த சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட பிரதான காரணமாகும். சதிப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டவுடனேயே நேரடித் தொலைபேசி அழைப்பின் ஊடாக தொலைக்காட்சி சேவை ஒன்றில் தோன்றிய ஜனாதிபதி அர்துகான், உடனடியாகவே இந்த சதிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுமாறு மக்களிடம் அழைப்புவிடுத்தார். அவரது அழைப்பையேற்று மக்கள் வீதியில் இறங்கினர். சதிகாரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு மக்கள் அஞ்சவில்லை. இராணுவ தாங்கிகளுக்கு முன்னால் படுத்து தமது வீரத்தை மக்கள் நிரூபித்தனர். வீதிக்கு இறங்கிய ஆயிரக் கணக்கான மக்களை எதிர்த்து நிற்க குலான் ஆதரவு இராணுவத்தால் முடியவில்லை. இவ்வாறு மக்கள் வீதிக்கு வருவார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவுமில்லை.
உண்மையில் இந்த சதிப் புரட்சியில் பங்கேற்றது இராணுவத்தினுள் இருந்த ஒரு சிறு குழுவினரேயாவர். இதன் காரணமாக பெரும்பான்மையான இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அவர்களை மடக்கிப் பிடித்து தோற்கடிக்க முடிந்தது.
Qஇந்த குலான் இயக்கம் எவ்வாறு செயற்படுகிறது? நாட்டின் அரச இயந்திரத்துக்குள் இலட்சக் கணக்கான அதன் உறுப்பினர்களால் ஊடுருவ முடிந்தது எவ்வாறு? அதனை சற்று விளக்க முடியுமா?
இது எடுத்த எடுப்பிலேயே ஆட்சிக்கு வருகின்ற திட்டமல்ல. மாறாக சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வரையப்பட்ட திட்டமாகும். தமது ஆதரவாளர்களை சிறு வயதிலிருந்தே உருவாக்கி அவர்களை அரச இந்திரத்தினுள் நுழையச் செய்வது வரையான மிகப் பெரிய திட்டம். இதற்காக அவர்கள் கையாண்டது கவர்ச்சிகரமான கல்வித் திட்டத்தையாகும். இதற்காக துருக்கி முழுவதும் ஆயிரக்கணக்கான பாடசாலைகளை நிறுவினார்கள். அதாவது பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி வழங்கி தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். கல்வி கற்கும் காலத்தில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களையும் வழங்கினார்கள். இதனூடாக மாணவர்களுக்கு கல்வி என்ற போர்வையில் பயிற்சிகளை வழங்கினார்கள். இதனால் அவர்களது பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் எந்தவிதக் கேள்விகளையும் கேட்காது பத்ஹுல்லா குலானின் கட்டளைக்கு அடிபணிகின்றவர்களாகவே செயற்பட்டார்கள். துருக்கியில் மாத்திரமன்றி சுமார் 160 நாடுகளில் அவர்களால் பாடசாலைகள் நடாத்தப்பட்டன.
தமது கொள்கைகளை பரப்புவதற்கு குலான் மதத்தை ஒரு போர்வையாக பயன்படுத்தினார். இஸ்லாமிய மதகுருவாக தன்னை அடையாளப்படுத்தினாலும் அவர் இஸ்லாமியப் பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. எதேச்சாதிகார அரசாங்கம் ஒன்றை துருக்கியில் நிறுவுவதே அவரது நோக்கமாகவிருந்தது. அதற்கான பொருளாதாரப் பலத்தையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவர்களது சொத்து மதிப்பு 50 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Qதுருக்கியில் சதிப்புரட்சி நடந்த அன்றைய இரவு, அதன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஒரு குழுவினர் இலங்கையில் தயாராகவிருந்ததாக சில தகவல்கள் வெளிவந்தன. இது உண்மையா?
இருக்கலாம். நாம் அதுபற்றி அறியவில்லை. ஆனால் இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் உள்ள அவர்களது ஆதரவாளர்கள் சதிப்புரட்சி வெற்றி பெற்ற தகவலைக் கொண்டாட காத்திருந்தனர். எனினும் அது நடக்கவில்லை.
இலங்கையிலும் இந்த FETO இயக்கம் செயற்பட்டு வந்தது. பிரபலமான தனியார் கல்வி நிறுவனங்களை நிறுவியும் மதங்களுக்கிடையிலான உரையாடல் என்ற போர்வையிலும் அவர்கள் செயற்பட்டு வந்தனர். இவர்களது செயற்பாடுகள் பற்றி நாம் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். ஏனைய நாடுகளிலும் இந்த அமைப்பினரின் செயற்பாடுகளை முடக்குவதற்காக நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
Qதுருக்கி சதிப்புரட்சியின் பின்னர் இடம்பெற்ற கைதுகளின்போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றனவே?
அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவை ஆதாரமற்றவை. ஆரம்பத்தில் கைதுகள் சந்தேகத்தின் பேரிலேயே இடம்பெறுகின்றன. பின்னர் உரிய சட்ட நிறுவனங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றமற்றோர் விடுதலை செய்யப்படுகின்றனர். FETO அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டவர்களே தண்டிக்கப்படுகின்றனர்.
Qஇந்த இடத்தில் இலங்கையுடன் தொடர்புபட்ட சில விடயங்களையும் உங்களோடு பேச வேண்டியுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கையிலுள்ள ஓ.ஐ.சி. அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
தாக்குதல் நடந்தவுடனேயே நாம் முதலில் கத்தோலிக்கப் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களைச் சந்தித்து எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தோம். இதன்போது அவர் இந்தத் தாக்குதலுடன் இஸ்லாத்திற்கோ இலங்கை முஸ்லிம்களுக்கோ எந்தவித சம்பந்தமுமில்லை. இது வேறு ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழேயே நடத்தப்பட்டுள்ளது என அவர் எம்மிடம் கூறினார். அவரது இந்தக் கருத்து மிகவும் விவேகமானதாகும்.
பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இலங்கையிலுள்ள சகல வெளிநாட்டுத் தூதுவர்களையும் அழைத்து நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் அறிவுறுத்தினார்கள். இதன்போது நாம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
மே 13 இல் கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்ட பின்னர், ஓ.ஐ.சி. நாடுகளின் தூதுவர்களாக நாம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைச் சந்தித்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரினோம். இந்த வன்முறைகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்துகிறோம் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறினோம். நாம் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாது என்ற போதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துமாறும் வெறுப்புப் பேச்சை கட்டுப்படுத்துமாறும் கோரினோம்.
இதன் பிற்பாடு இலங்கையிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன் ஜித்தாவிலுள்ள ஓ.ஐ.சி. தலைமையகமும் பிறிதொரு அறிக்கையை வெளியிட்டது. பின்னர் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் இது குறித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டன.
Qநீங்கள் இவ்வளவு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினாலும், இனவாதத்தையும் வன்முறையையும் கட்டுப்படுத்துவதில் இஸ்லாமிய நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய அழுத்தம் போதாது என முஸ்லிம்கள் கருதுகிறார்களே?
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அவ்வாறானதொரு அபிப்பிராயம் உள்ளது என்பதை நாம் அறிவோம். இலங்கையில் நடக்கின்ற விடயங்களை நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். ஆனாலும் இது அவசரப்பட்டு பிரம்பை எடுத்து அடிப்பது போன்ற விவகாரம் அல்ல. மாறாக சர்வதேச அரசியல், நாடுகளுக்கிடையிலான உறவுகள், இராஜதந்திரம் என்பவற்றுடன் தொடர்புபட்டது. அதனை மிகவும் கவனமாகவே கையாள வேண்டும்.
இந்த விடயத்தில் ஓ.ஐ.சி. தலையிட்டமை என்பது சாதாரணமானதல்ல. மொத்தமாக 1.5 பில்லியன் முஸ்லிம்களை சனத்தொகையாகக் கொண்ட 57 இஸ்லாமிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பு அது. அதன் அக்கறை இதுவிடயத்தில் நிச்சயமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்கியிருக்கும் என நம்புகிறேன்.
Qஇலங்கையில் அடிப்படைவாதத்தை வளர்க்கவும் ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் துருக்கிய அரசாங்கம் 40 மில்லியன் டொலர் நிதியை செலவிட்டுள்ளதாக அண்மையில் ஞானசார தேரர் குற்றம்சாட்டியிருந்தாரே?
இது உண்மைக்குப் புறம்பமான குற்றச்சாட்டாகும். இது குறித்து உடனடியாகவே ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு நாம் தெளிவுகளை வழங்கியிருந்தோம்.
துருக்கி இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடாகும். அந்த வகையில் 2006 முதல் இன்று வரை சுமார் 20 க்கும் மேற்பட்ட திட்டங்களை இலங்கையில் மனிதாபிமான அடிப்படையில் நடைமுறைப்படுத்தியுள்ளோம். தெற்கிலே வெலிகம பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் 450 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தமை, மன்னாரில் 100 வீடுகளை நிர்மாணித்து துருக்கி- – இலங்கை நட்புறவு கிராமத்தை தோற்றுவித்தமை, யாழ்ப்பாணத்தில் வறிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியமை, திருகோணமலையில் ஏழை மீனவர்களுக்கான தோணிகள், வலைகள், நீர் பம்பிகள் போன்றவற்றை அன்பளித்தமை, அம்பாறையில் 3780 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பாரிய நீர்த்தாங்கியை நிர்மாணிக்க உதவியமை, ஊடகவியலாளர்களை வலுவூட்ட மடிக்கணினிகள் மற்றும் கமராக்கள் வழங்கியமை, 20 க்கு மேற்பட்ட மும்மொழி ஊடகவியலாளர்களை துருக்கிக்கு அனுப்பி பயிற்சிகளை வழங்கியமை போன்றவற்றை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
இந்த உதவிகள் அனைத்தும் இலங்கையில் வாழ்கின்ற சகல இன மக்களையும் சென்றடையும் வகையிலேயே வழங்கப்பட்டுள்ளன. தனியாக ஓர் இனத்துக்கு மாத்திரம் நாம் உதவி செய்வதில்லை. உலகின் ஏனைய நாடுகளுக்கும் நாம் அவ்வாறுதான் உதவுகிறோம்.
Qஉலகளாவிய ரீதியில் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படுகின்ற போது முந்திக் கொண்டு உதவி செய்கின்ற நாடாக துருக்கி விளங்குகிறது. இந்த உதவிகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன?
உண்மைதான். 2018 ஆம் ஆண்டு மாத்திரம் துருக்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவிகளுக்காகச் செலவிட்டுள்ளது. துருக்கியில் 4 மில்லியன் வெளிநாட்டு அகதிகள் வாழ்கிறார்கள். இவர்களில் 3.5 மில்லியன் பேர் சிரிய அகதிகள். எஞ்சியோர் ஈராக், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்குத் தேவையான உணவு, கல்வி, சுகாதாரம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் துருக்கி இலவசமாக வழங்குகிறது.
அதேபோன்றுதான் வறுமையில் வாடுகின்ற ஆபிரிக்க நாடுகள் முதல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யா மக்கள் வரை உலகின் சகல மூலைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துருக்கி தனது மனிதாபிமானக் கதவுகளை திறந்து கொடுத்துள்ளது. நாம் முஸ்லிம் நாடுகளுக்கு மாத்திரம் உதவி செய்வதில்லை. தேவையுள்ள மக்களுக்கு உரிய நேரத்தில் உரிய உதவிகளை வழங்குவதே எமது கொள்கையாகும்.
vidvelli