ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவரான முன்னாள் அமைச்சரான எம்.எச்.எம்.அஷ்ரபினால் இலங்கை வாழ் முஸ்லிம்களின் முகவெற்றிலை எனவும், தென்கிழக்கு அலகின் தலைநகரமும் என அழைக்கப்பட்ட கல்முனை நகர், அண்மைக் காலமாக நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள விடயங்களில் ஒன்றாகவுள்ளது.
இதற்கு பிரதான காரணம் கல்முனை உப பிரதேச செயலக விடயமாகும். இது தொடர்பாக கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்திலும் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
எவ்வாறாயினும் இந்த உப பிரதேச செயலகம் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றினை பலர் இன்று மறந்துபோயுள்ளனர்.
இன்றுவரை உப பிரதேச செயலகமாக செயற்படும் இதனை, கல்முனை தமிழ் பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என அழைக்கப்படுகின்றமை சட்டரீதியற்ற ஒரு செயற்பாடாகும்.
வரவு – செலவுத் திட்டம் அல்லது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை போன்ற சந்தர்ப்பங்களிலேயே இந்த சட்ட ரீதியற்ற உப பிரதேச செயலக விடயம் பேசுபொருளாக மாறும்.
தமது அரசியல் எதிர்காலத்தினை அடிப்படையாகக் கொண்டு குறித்த சந்தர்ப்பங்களிலேயே இந்த விடயத்தினை தமிழ் அரசியல்வாதிகள் கையிலெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கு கல்முனை வாழ் முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் இதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
இதற்கு முன்னர் நிந்தவூரிலிருந்து காரைதீவும், அக்கரைப்பற்றிலிருந்து ஆலையடிவேம்பும், சம்மாந்துறையிலிருந்து நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்கள் பிரிந்து சென்று தனியான பிரதேச செயலகங்கள், தனியான உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டன.
இதன்போது, குறித்த பிரதேசங்களினைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. மாறாக ஆதரவினையே வழங்கினர். அவ்வாறு அப்பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்த்திருந்தால் இன்று தனிப் பிரதேச செயலகங்களோ, தனியான உள்ளூராட்சி மன்றங்களோ உருவாக்கப்பட்டிருக்கமாட்டாது. அத்துடன் அதன் ஆட்சி அதிகாரங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அலங்கரித்திருக்கவுமாட்டாது.
கல்முனையில் தமிழர்களுக்கென்று தனியான பிரதேச செயலகம் கோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் –- முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் தோப்பூரிற்கு தனியான பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.
அத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல் தோப்பூர் பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கடிதமும் எழுதியமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், கடந்த 30 வருடங்களாக செயற்படும் இந்த உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாக தரமுயர்த்தி கொடுப்பதுடன் தமிழ் மக்களுக்கான நகரசபை ஒன்றையும் உருவாக்கி கொடுக்க முஸ்லிம்கள் தயாராகவுள்ளனர். இது தொடர்பில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம்.ஹரீஸ் பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, தற்போது செயற்படும் கல்முனை உப பிரதேச செயலக கட்டிடம், குவைத் நாட்டின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது என்ற உண்மையினை யாரும் கூறுவதில்லை.
இவ்வாறான நிலையில், கல்முனை பிரதேச செயலகம் நிரந்தரக் கட்டிடமொன்றில்லாமல் கடந்த பல தசாப்தங்களாக கல்முனை மாநரக சபை கட்டிடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான விடயங்களை மூடி மறைத்துவிட்டு, கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த முஸ்லிம்கள் எதிர்ப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் கூறி வருவதுடன் மாத்திரம் நின்றுவிடாது, கல்முனையில் முஸ்லிம்கள் நிலத் தொடர்பற்ற நிலையிலும், தமிழர்கள் நிலத் தொடர்புள்ள ரீதியிலும் வாழ்ந்து வருகின்றனர் என்ற பொய்யான தகவல்களை முன்வைக்கின்றனர்.
கல்முனை பிரதேச செயலகம் மற்றும் உப பிரதேச செயலகம் ஆகிய இரண்டும் தற்போது நிலத் தொடர்பற்ற ரீதியிலேயே செயற்படுகின்றன.
இவ்வாறான நிலையில் கடந்த பல தசாப்தமாக கல்முனை பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் வியாபாரம், மருத்துவம், பொதுச்சேவை உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் இரு சமூகமும் பின்னிப் பிணைந்தே வாழ்ந்து வருகின்றன.
இவ்வாறுள்ள மக்களை பிரிக்கும் நோக்கில் சில அரசியல்வாதிகளினால் இந்த கல்முனை விவகாரம் இன்று கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கல்முனை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் கடந்த பல தசாப்தமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கையிலுள்ளது.
இதனை பறிக்க வேண்டுமென்ற அடிப்படையில் பலர் இன்று கல்முனையில் களமிறங்கியுள்ளனர். அதில் ஒருவர்தான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமல் என செல்லமாக அழைக்கப்படும் எஸ். வியாழேந்திரன்.
இதற்கு ஒரு உதாரணம் தான், கடந்த ஜூன் மாதம் கல்முனையில் இடம்பெற்ற உண்ணாவிரதத்திற்கு அமைச்சர்களான தயா கமகே, மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வருகை தந்தபோது, கூச்சலிடப்பட்டு வெளியேற்றப்பட்டமையாகும். அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் இந்த விடயத்தில் அமைதிப் போக்கினை கடைப்பிடிப்பதனையே அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இதேவேளை, நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் தேவைகள் பல உள்ள நிலையில் அவற்றினை கவனிக்காது பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கல்முனை விவகாரத்தில் மூக்கு நுழைத்துள்ளமை பாரிய சந்தேகமொன்றை தோற்றுவித்துள்ளது.
அத்துடன் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எஸ்.வியாழேந்திரன் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் இந்த உப பிரதேச செயலகத்தினை எவ்வாறாவது தரமுயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் தரப்பினரால் இறுதியாக கையிலேடுத்த விடயமே கல்முனை விகாராதிபதியின் பங்குபற்றலுடனான உண்ணாவிரதமாகும்.
இந்த உண்ணாவிரதத்தினை அடுத்தே இந்த விடயம் நாட்டின் பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் ஆகியோர் கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது, முஸ்லிம் தரப்பினர் – குறித்த இரு தேரர்களையும் சந்தித்து தம்பக்க நியாயங்களை முன்வைத்தனர். இதனை இரு தேரர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களினாலும்; விடுதலைப் புலிகளினாலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம் மக்கள் ஒருபோதும், பௌத்த தேரர்களை நாடிச் சென்ற வரலாறில்லை. இவ்வாறு செல்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் அமையப் பெற்றன. எனினும் எமது சகோதர இனமான தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படக் கூடாது என்பதில் முஸ்லிம்கள் கண்ணும் கருத்துமாக செயற்பட்டனர்.
எனினும், ஈஸ்டர் தற்கொலை தாக்குதலினை சாதகமாகக் கொண்டு உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயத்தில் சில தனிநபர்களின் நிகழ்ச்சி நிரலுக்காக முஸ்லிம் சமூகத்தினை பௌத்த தேரர்களிடம் காட்டிக்கொடுக்க முயற்சித்தமையினால் இன்று முழு தமிழ் சமூகமுமே தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயத்தில் கல்முனை வாழ் முஸ்லிம் மக்கள் தம்பக்க நியாகங்களை மக்கள் மயப்படுத்த தவறிவிட்டனர். இதுவொரு கவலையான செயற்பாடாகும்.
அதாவது, இந்த விடயத்தில் தமிழ் தரப்பு மற்றும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் ஏதாவதொரு விடயத்தினை முன்வைத்தால் அதற்கு எதிராக கல்முனை வாழ் முஸ்லிம் புத்திஜீவிகள் செயற்படுவதும் பின்னர் இந்த விவகாரத்தினை மறந்துவிடுவதும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் செயற்பட்டனர்.
எவ்வாறாயினும் கடந்த மாதம் இடம்பெற்ற உண்ணாவிரத செயற்பாட்டினை அடுத்து கல்முனை வாழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து, தம்பக்க நியாயங்களை மக்கள் மயப்படுத்தி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே சம்மாந்துறை, பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேச மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை அண்மையில் வழங்கியமையாகும். இதுவொரு காலங்கடந்த செயற்பாடென்றாலும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
இந்த விடயத்தில் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். கல்முனை வர்த்தக சங்கம், கல்முனை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் கல்முனை வாழ் முஸ்லிம் புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸுடன் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இந்த உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும். இதற்கு இரு சமூகத்தினரும் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் மீண்டுமொரு போராட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் ஆளும் அரசாங்கமும் நல்லதொரு தீர்மானமொன்றை எடுத்து இரு சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வழியமைக்க வேண்டும்.
றிப்தி அலி
vidivelli