அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். ஆனால் அவசரப்பட மாட்டார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர். இதன்போது, அ.இ.ம.கா. ஒரு அமைச்சரவை அமைச்சையும் ஒரு இராஜாங்க அமைச்சையும் மற்றும் ஒரு பிரதி அமைச்சுப் பதவியையும் துறந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் அமைச்சுப்பொறுப்பை மீள ஏற்றல் மற்றும் சமகாலப் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றில் கலந்தாலோசித்தனர். இதன் பின்னர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதாக தீர்மானம் மேன்கொள்ளப்பட்டது.
இவ்வாறு மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது தொடர்பில் அ.இ.ம.கா. செயலாளரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் “இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. கலந்தாலோசிக்கப்படுகிறது. ஆனால் எப்போது அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை” என்றார்.
vidivelli