பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி வழங்கப்பட்டால் அவருக்கெதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை யொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப்பதவிகளைப் பொறுப்பேற்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட மற்றும் பல கட்சிகளின் ஒத்துழைப்புடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்புகளைப் பேணினார் என குற்றம் சுமத்தி இணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்தார்கள். இதனையடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வகித்த அமைச்சுப் பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துகொண்டார்.
பின்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாசிமும், எம். எச். ஏ. ஹலீமும் தங்களது முன்னைய அமைச்சுப்பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஏனையவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் பொறுப்பேற்கத் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் மீண்டும் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேராணை கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி வழங்கப்படுவதற்கு ஐக்கியக் தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ரிசாத் பதியுதீனுக்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். ரிசாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்படும் வரை அவருக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம் என அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்கள் அனைத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டால் அவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படுவதை நாம் எதிர்க்கமாட்டோம் என்றும் கூறினார்.
vidivelli