‘கல்வி, திறந்த தன்மை மற்றும் அனைவருக்கும் சந்தர்ப்பத்தினை வழங்குதல் என்பவற்றினை வலியுறுத்துவதுடன் அறிவினை மையப்படுத்திய பொருளாதாரம்; நெகிழ்திறன் (Resilient) மற்றும் மனித மூலவளம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பினை நமது (கட்டார் மற்றும் அமெரிக்கா) நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன. துரதிஷ்டவசமாக எனது பிராந்தியத்தில் சிலர் எமது நம்பிக்கைகளை பகிர்ந்து கொண்டவர்களாக இல்லை! இன்றைய உலகில் தற்போதைக்கு அவசியமான சில கூட்டமைப்புகள்; நேசஅணிகள் மற்றும் பங்குதாரர்கள் உண்மையில் நண்பர்களாக இல்லை!! எனினும் அமெரிக்காவும் கட்டாரும் பங்குதாரர்களாகவும் நேச அணியாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றன. இராணுவ மற்றும் பாதுகாப்பு முதலீடுகளில் நெறுங்கிய உறவினைப் பேணுவதற்காக நமது பரஸ்பர கடப்பாட்டினைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம்’ என அமெரிக்காவிற்கான தனது அண்மைய விஜயத்தின் போது கட்டார் அமீர் ஷேய்க் தமீம் பின் ஹமட் அல்-தானி, அறிவித்திருந்தார். கடந்த செவ்வாயன்று வொஷிங்டனில் ‘போயிங் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையினைக் கைச்சாத்திடல் மற்றும் பிற விடயங்களைக் கலந்தாலோசிக்கும் பொருட்டாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு அறிவித்திருந்தார்.
ஷேய்க் தமீம் குறித்து, ட்ரம்ப் கூறுகையில், “நான் அமெரிக்க ஜனாதிபதியாக வரமுன்னர் இருந்தே நாம் இருவரும் நல்ல நண்பர்கள். அமெரிக்காவில் தமீம் மேற்கொண்டுள்ள முதலீடு மிகவும் மெச்சத்தக்கது என்பதுடன் உலகிலே பெரிய முதலீடுகளில் ஒன்று” என்றார். ஷேய்க் தமீமுடைய அமெரிக்க விஜயமானது, தற்போதைய பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலின் தட்ப வெப்பத்தினைத் துல்லியமாகக் கணித்துத் தனது மூலோபாய ரீதியான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ராஜதந்திரமான நகர்வாகும்.
அரசியல் இஸ்லாம்; அதனைப் போஷிக்கும் இஸ்லாமியவாதிகளின் எழுச்சி மற்றும் அதனை ஆதரிக்கும் பின்புலத்துடன் கூடிய துருக்கியின் பிராந்திய அரசியலின் வகிபாகம்; பிராந்திய மேலோங்குகையினை இலக்காகக் கொண்டு நகரும் ஈரானுடைய பலப் பரம்பல் ஆகியன ஏற்கனவே அரேபிய நாடுகளுடனான கூட்டுறவினை எதிர்பார்த்திருந்த இஸ்ரேலுடன் மூலோபாய கூட்டமைப்பினை நோக்கி அழுத்தம் கொடுப்பதில் செல்வாக்கு செலுத்தின. மறுதலையாக எழுந்துவரும் புதிய சூழலுடன் சர்வதேச மேலோங்குகையின் பங்கினைத் தக்க வைக்கும்; நிச்சயிக்கும் பொருட்டாக ரஷ்ய- சீன அணியும் முன்னெடுப்புகளைத் தொடர்ந்தன. அதனடியாக அவை மத்திய கிழக்கில் நிலவும் சூழலினைத் தமது மூலோபாய இலக்குகளை அடையும் பொருட்டாகக் கையாளும் என்பது திண்ணம்.
ஆக, பிராந்தியத்தில் தொழிற்படும் உள்ளக, வெளியக அச்சுறுத்தல்களுக்கேற்ப அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளடங்களாகத் தனது நேச அணிகளை இணைத்து மத்திய கிழக்கிற்கான விரிவான கூட்டமைப்பு வியூகத்தினை வகுத்தது. வரலாற்றில் ‘ப்ளக் ஹோக் டவுன்’ நிகழ்வு உட்பட வழி நெடுகிலும் அமெரிக்க மூலோபாயம், குறிப்பாக இராணுவ மூலோபாயமும் அதனைப் போஷிக்கும் வெளியுறவுக் கொள்கையும் கண்ட பின்னடைவுகள், என்பன 21ஆம் நூற்றாண்டுக்கான போரியலினை புதிய பரிணாமத்திற்கு முன்னகர்த்தின. இதுகுறித்து மிகவும் விரிவான விடயங்களை முப்பரிமாணம், பிற சந்தர்ப்பங்களில் அதன் வாசகர்களுக்கு வழங்கியிருந்தது என்பதனை இங்கு குறிப்பிடுதல் தகும். ஏனெனில், இதுவரை காலமும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து வழமையாக ஊகம், சுய நம்பிக்கை சார்ந்த மற்றும் தத்துவார்த்த ரீதியாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்த விடயங்களுக்கு அப்பால் சென்று, யதார்த்தத்தில் உலக நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் மூலோபாய விடயங்களையே நாம் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
இதனடியாகவே எப்போதும் போல் வெளியக உள்ளக அரசியல் மற்றும் பாதுகாப்பு குறித்த எதிர்வுகூறல்கள் உட்பட மேற்படி வெளிக் கொணர்தல் எமக்கு சாத்தியமானதாக இருக்கின்றன. நாம் விடயத்திற்கு வருவோம். பரந்த அணுகுமுறையினை உள்வாங்கிய அமெரிக்க கூட்டமைப்பு மூலோபாயத்தின் ஒரு வெளிப்பாடாகவே சவூதி அரேபியா, தனது அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சமூகரீதியான அதிரடி மாற்றங்களை அறிவித்த ‘விஷன் 2030’ இனை வெளியிட்டது. அதேபோன்று மூலோபாயத் தளத்தில் பாதாளப் போரியல் உளவுத்தகவல் பரிமாறல் மட்டத்திலிருந்த இஸ்ரேலுடனான சவூதி மற்றும் ஐக்கிய அரேபிய இராச்சிய உறவுகள் மேலும் வலுவானது. மேலும் தத்தமது நலன்களின் பொருட்டான அதே நேரம் அமெரிக்க மேற்கத்தேய நலன்களின் பொருட்டான மற்றும் அதனூடாக நேச நாடுகளின் கூட்டமைப்பு நலன்களின் (Coalition Interests) பொருட்டாக ஒத்துழைப்பு வழங்கும் அரசாங்கங்களை அகற்ற முற்படும் இஸ்லாமியவாதிகளின் ஆட்சியை நோக்கிய எழுச்சியானது அச்சுறுத்தலாக கூட்டமைப்பு மூலோபாயம் (Coalition Strategy) கருதுகின்றது.
சவூதி தலைமைய அரேபிய நாடுகளின் அரச குடும்பங்களானது, தமது இருப்பினை உறுதி செய்து தத்தமது அரசாட்சியினை (Monarchy) தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு பிரதான கொள்கைவாத அச்சுறுத்தல்களில் ஒன்றாக அரசியல் இஸ்லாத்தினைக் (Political Islam) கருதுகின்றது. மேலும் ஹமாஸ் உட்பட முஸ்லிம் ஆயுதக்குழுக்கான போராட்டத்திற்கான அரசியல் புலத்தின் கொள்கையினை (Political Ideology) போஷிப்பதாகவும் உள்ள அரசியல் இஸ்லாம், அதன் தோற்றுவாய்களுடன் களையப்படுவதனை அமெரிக்க அணி தமது மூலோபாய குறிக்கோள்களாகக் கொண்டுள்ளது. எனினும் ஈரானைக் கட்டுப்படுத்துவது, ஹமாஸ் போன்ற ஆயுதக் குழுக்களை முடக்குவது உட்பட அமெரிக்க தேசிய நலன்களுடன் தொடர்புள்ள பிற மூலோபாய குறிக்கோள்களுடனும் இஸ்ரேல் உட்பட சவூதி, யூ.ஏ.ஈ, எகிப்து நேச அணிகளது மூலோபாய குறிக்கோள்களை நிறைவேற்றுவதிலும் கட்டாரினை மீள்வடிவமைக்க (Reshape) வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
அல் ஜஸீரா, ஹமாஸினது அரசியல் கட்டமைப்புடனான ராஜதந்திர தொடர்புகள், முர்ஸி தலைமைவகித்த அரசியல் கட்டமைப்பு உட்பட பல நாடுகளில் சட்டரீதியான அரசியல் கட்சிகளாக இருக்கும் இஹ்வான்களுடனான ராஜதந்திர தொடர்புகள், ஈரானுடனான ராஜதந்திர தொடர்புகள் என்பனவற்றினை உள்ளடக்கிய கட்டாரிய ராஜதந்திர அமைப்பு (Qatari Diplomatic System), பாரிய சவாலாக உள்ளதாக அமெரிக்கா உட்பட கூட்டமைப்பு மூலோபாயம் கருதுகின்றது. இதன் ஒரு வெளிப்பாடாகவே, 2017 மே மாதத்தில் 55 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய சவூதி- அமெரிக்க மாநாட்டின் போது, கட்டாருடனான சவூதி அணியினரது முறுகலில் ஒருபடி மேலே சென்று அப்போதைய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மெத்தீஸ், கட்டார் அமீர், தமீம் பின் ஹமாட் அல்-தானியை, இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் குறித்த நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ளுமாறு நேரடியாக எச்சரித்தமையாகும். எனினும் அமெரிக்காவிற்கு நிலைமைகளை எடுத்த எடுப்பிலேயே தலை கீழாகப் பிடித்துவிட முடியாது. ஏனெனில் அமெரிக்க மத்திய கட்டளைத் தளத்தின் முன்னணி தலைமையகங்கள் கட்டாரின் ‘அல் உதய்த்’ படைத்தளத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ட்ரம்ப் குறிப்பிட்டதைப் போன்று, கட்டாரின் அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் சிவில் தளங்களிலான முதலீடுகளும் ஒத்துழைப்பும் உறுதியாக இருந்து வருகின்றன. ஆக, அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடன் கூட்டமைப்பு மூலோபாயம் எதிர்பார்க்கும் முழு அளவிலான ஒத்துழைப்பினையும் (Full Spectrum Cooperation) கூட்டமைப்பு வியூகத்திற்கமைய எதிர்பார்க்கப்படும் மாற்றங்களையும் அமுல்படுத்த அங்கீகாரம் வழங்க சவூதி தலைமைய நாடுகள் கட்டாரின் மீது அழுத்தம் கொடுத்து நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டன.
எனினும் கட்டார், சவூதி தலைமைய நாடுகளின் அதனூடாக கூட்டமைப்பு மூலோபாயத்தின் எல்லாக் கோரிக்கைகளுக்கும் தலைசாய்க்காமல் தனது தனித்துவம் மற்றும் இறைமைக்கு ஏற்றாற்போல ஒத்துழைப்பு வழங்க முடியுமான பகுதிகளில் ஒத்துழைப்பினை நிச்சயிப்பதில் காய் நகரத்தியது. மேலும் துருக்கியுடனான மூலோபாய உறவுகளை மேலும் வளர்த்துக் கொண்டதுடன் பிற நாடுகளுடனான உறவுகளை சாணக்கியமாகக் கையாண்டதினூடாகக் கட்டார், தன்னை திடீரெனத் தனிமைப்படுத்தும் முகமாகத் திணிக்கப்பட்ட தடைகளைத் துடைத்தெறிந்து தக்கணப் பிழைப்பிற்கான நகர்வினை எடுத்தது. ஆக, இந்தப் பின்னணியிலும் தற்போதைய பிராந்திய அரசியற் சூழலிலுமே, ஷேய்க் தமீமின் அமெரிக்க விஜயம் ராஜதந்திர முக்கியத்துவத்தினை அதிகரிக்கின்றது. நாம் இன்னும் சற்று விரிவாகச் செல்வோம்.
அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே அதனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததனைப் போன்று பராக் ஒபாமா நிர்வாகம், இஸ்ரேல்- சவூதி ஆகிய நேச அணிகளின் அதிருப்திக்கு மத்தியில் இணைத் தலைமை நாடுகளுடன் இணைந்து ஈரானுடன் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் ஈரானின் மீதான பொருளாதாரத் தடையினை அதிகரிப்பதற்கான முஸ்தீபுகளை அறிவித்தார். ஆக, தொடர்ச்சியாக அதிகரித்த ஈரான் – அமெரிக்க முறுகல் நிலையானது. அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக ஓமான் வளைகுடாவில் ஹர்மூஸ் நீரிணைக்குத் தெற்கு பகுதியில் வைத்து சவூதி, ஐக்கிய அரேபிய இராச்சியம், நோர்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் எண்ணெய்க் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் அமெரிக்க ‘ட்ரோன்’ விமானம் ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்டமை என்பவற்றால் அதிகரித்தது. மேற்படி கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானமை குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பேவினால், ஈரான் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் அதனை ஈரான் மறுத்துள்ளது.
மூலோபாய முக்கியத்துவமிக்க ஹார்மூஸ் நீரிணையில் சுதந்திரமான கடற்போக்குவரத்திற்குத் தடை ஏற்பட முடியுமாக நிலவக்கூடிய பாதுகாப்பு ஸ்திரமற்ற (Instability) சூழலானது உலக பொருளாதாரத்திலேயே தாக்கத்தினை ஏற்படுத்தவல்லது. உலக எண்ணெய் வழங்கலில் கணிசமான வீதம் இப்பிராந்தியத்தினூடாகவே நகர்ந்து வருகின்றன. ஆக, இப்பகுதியின் அமைவு ரீதியான இராணுவப் புவியியல் மற்றும் ஈரானிய குடியரசினது கடற்படைகளின் ‘சமச்சீரற்ற’ போரியலுடன் கூடிய தாக்குதல் திறன் என்பன ஒரு போரொன்றின் போது உலக எண்ணெய் வழங்கலிற்குப் பெரும் அழுத்தத்தினைக் கொடுக்கக் கூடியன. கடலுக்கடியில் ஏவுகணைகள், கடலடி ஏவாயுதங்கள் (Torpedo) மற்றும் இதர தாக்குதல்கள் திறனுடன் கூடிய சுமார் 250 மீற்றர்கள் ஆழத்தில் சந்தடியற்றதாக அநேகமாக ‘சென்ஸர்’களுக்குச் சிக்காமல் நகரக் கூடிய டீசல் மின்னியல் நீர்மூழ்கிகளை ஈரான் நிர்மாணித்துள்ளது.
இவ்வாறிருக்கையில் நோர்வேயின் எண்ணெய்க் கப்பலினை கடலடி ஏவாயுதம் தாக்கியுள்ளதாகவும் ஜப்பானியக் கப்பலானது கடலடிக் கண்ணிவெடி மூலம் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பிராந்தியத்தில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடு இல்லாமையுடன் மேற்படி தாக்குதலினை நடத்துவதிலுள்ள சிக்கல் மற்றும் நுட்பம் (Sophistication) என்பவற்றினை வைத்தே, மேற்படி தாக்குதலினை ஈரானிய கடற்படையின் பாதாளப் போர்த்திறனைக் கொண்டு நடத்தியதாக ஊகிக்கப்படுகின்றன. மறுதலையாக மேற்படி திறனையுடைய எந்த ஒரு கடற்படைக்கும் இத்தகைய பாதாளப் போரியல் தாக்குதலொன்றினைத் தொடுக்கவும் முடிவதுடன் ஈரானை இதனுடன் சம்பந்தப்படுத்தி அழுத்தங்கொடுக்க முடியும். எனினும் ஈரானுக்கெதிராக அமெரிக்கா பிரயோகித்து வரும் அழுத்தம் என்பன ஈரானிய அரசியல் யந்திரத்தில் பலரும் எதிர்பார்ப்பதனைப் போன்று ஈரான் தனது வன் வலுவினை வெளிப்படுத்தும் விதமாக பதிலடிச் சைகையினைக் காட்ட வேண்டும் என்பதற்கமைய மேற்படி தாக்குதல் சம்பவங்கள் இருப்பது வாஸ்தவம் தான். ஏனெனில் பிரிட்டன் தரப்பு மேற்கொண்ட துலக்குதல்களின் மூலம் ஈரான்தான் மேற்படி தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் உச்சபட்சமாக பிரிட்டனின் 42 மெரீன் கொமாண்டோக்கள், ஈரானுடைய எண்ணெய்க் கப்பலினை ஜிப்ரோல்ட்டர் பகுதியில் முடக்கி வைத்துள்ள சம்பவமானது, மேலும் பதற்றத்தினை அதிகரித்து வருகின்றது. பதிலுக்கு தமது எண்ணெய்க் கப்பலினை விடுவிக்காத பட்சத்தில் பிரித்தானியக் கப்பலினை தமது படைகள் முடக்கி வைக்கும் என ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.
நிலைமையின் தீவிரத்தினை அவதானித்து, சவூதிக் கரைகளில் பிரிட்டன் பெற்றோலியத்திற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் தனது, பயணத்தை ரத்துச் செய்து தரித்து நிற்பதாக அறிவிக்கப்படுகின்றது. ஈரானுக்குத் தொடர்ந்தும் தான் ஆதரவினை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, இதுவே தற்போதைய நெருக்கடியான சூழலாகும். நாம் இன்னும் சற்றுச் செல்வோமேயானால், யெமனில் ஈரானிய பின்புல ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மன்ஜூர் ரப்புல் ஹாதி அரசாங்கத்திற்கான ஐ.நா. மற்றும் சவூதி தலைமைய நாடுகள் ஆதரவு வழங்குகின்றன. இவ்வாறிருக்கையில், தமது படைகளை யெமனிலிருந்து வாபஸ் வாங்குவதான அறிவிப்பொன்றை அண்மையில் ஐக்கிய அரேபிய இராச்சியம் வெளியிட்டது. எனினும் மேற்படி அறிவிப்பானது, தற்போதைய ஈரான் – அமெரிக்க முறுகலினை மையப்படுத்திய அதனை ஐதாக்கும் முகமான ஒரு நகர்வாகும். அதேபோன்று ஆப்கான் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, பல முக்கிய விடயங்களை முற்படுத்திய தலிபான்களுடனான பேச்சுவார்த்தைகள் அண்மையில் கட்டாரில் இடம்பெற்றது. தற்போதைய நிலையில் இராணுவ மற்றும் ராஜதந்திர ரீதியாக கை மேலோங்கியுள்ள தலிபான்கள், ஆப்கான் அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதல்களைத் தொடர்ந்து தொடுத்த வண்ணம் பேரம் பேசுவதில் தனது கையை ஓங்கியதாகக் காட்டியபடியே மறுதலையாக சமாதானப் பேச்சுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கான் சமாதானப் பேச்சுகளின் வெற்றி, அமெரிக்கா சுமார் 18 வருடங்களாக 1000 பில்லியன் டொலர்களை செலவழித்தும் முடிவில்லாமல் நீண்டு செல்லும் கோர யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவரும். அது ஆப்கான் மக்களுக்கான சுபீட்சத்தினது ஆரம்பப்படியாக இருக்கும். அதற்கான மத்தியஸ்தலத்தினை வழங்குவதில் கட்டார் காத்திரமான பங்கினையாற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, இத்தகை மூலோபாய ராஜதந்திர அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழல் நிலவும் ஒரு சந்தர்ப்பத்தினைத் துல்லியமாகக் கணித்து அத்தகைய சந்தர்ப்பத்தில் அமெரிக்காவிற்குச் சென்றமை ஷேய்க் தமீமின் ராஜதந்திர முதிர்ச்சியாகும். பிராந்தியத்தில் ஈரான் உட்பட மற்றைய நாடுகளுடனான உறவைப் பேணுவதானது பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மையினை உறுதி செய்யும் விதமான நகர்வுகளுக்கு முக்கியமானதாகும் என்பதனையும் போதியளவு நடுநிலையுடன் கூடிய நிலைப்பாடானது ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கான வெளியினை நிச்சயிப்பதனை ஷேய்க் தமீம், சுட்டிக்காட்ட விளைகின்றார்.
தற்போதைய ஈரான் – அமெரிக்க முறுகலினை ஐதாக்குவதற்கான முதலாவது அல்லது இரண்டாவது (Back Channel) அலைவரிசையில் ஈரானுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதினூடாக பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக தனது கடப்பாட்டினை நிறைவேற்ற முயல்வதினூடு தம்மீதான நெறுக்குதலினை முடிவுக்குக் கொண்டு வர முயல்கின்றார் ஷேய்க் தமீம். இதில் இன்னுமொரு பக்கமும் உண்டு. நிலைமைகள் உச்சத்திற்குச் சென்று ஈரானுடன் மூளக்கூடிய போரானது ஐ.அ. இராச்சியம் மற்றும் கட்டாரிய மண்ணினையும் தொடும். ஏனெனில் அமெரிக்கத் தளங்கள் அங்கு அமைந்துள்ளன. யுத்தமானது, ஈரானைக் கையாள்வதன் பிரதான மூலோபாயத்தையே தவிடு பொடியாக்கிவிடும். அதன் விளைவு, பாரிய அழிவு மற்றும் பொருளாதார நெருக்கடிற்குப் பிராந்தியத்தை இட்டுச் செல்லும். இதனை ஷேய்க் தமீம் நன்கு உணர்ந்து வைத்துள்ளதையே மேற்படி அவரது அமெரிக்க விஜயம் காட்டுகின்றது.
vidivelli