அது, 1968 களின் ஆரம்பக்கட்டம், நான் சிறைச்சாலை சேவையில் இணைந்து இரண்டு மாதங்கள் இருக்கும். மறுநாள் காலை 8.00 மணிக்கு மரண தண்டனைக் கைதி ஒருவர் தூக்கிலிடப்படவுள்ளார். அதனைப் பார்வையிடுவதற்காக அன்று காலை 7.00 மணிக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் பிரசன்னமாகுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே நான் சிறைக்கூடத்திற்குச் சென்றேன். தூக்கிலிடுவதற்கு முன்னர் குறித்த கைதியோடு கதைக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகராக கடமையில் இருந்தவர் ஞானசுந்தரம் என்பவர். அவரிடம் எனது விருப்பத்தை தெரிவித்து அறிக்கையைச் சமர்ப்பித்தேன். கடமையில் கண்டிப்பாகக் கருமமாற்றும் அவர் சற்றுத் தயங்கிய பின்னரே அனுமதியளித்தார். மரணவாசல் என வர்ணிக்கப்படும் குறித்த சிறைகூடப் பகுதிக்கு வழிகாட்டும் சிறைச்சாலை அதிகாரியொருவர் என்னை அழைத்துச் சென்றார். தூக்கிலிடப்படுபவர் தூக்குமேடைக்கு அருகேயுள்ள அறைகூடத்தில் வைக்கப்பட்டிருந்தார். இதுதான் நடைமுறை. சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர் வாட்டசாட்டமான உடல் தோற்றமுடையவர். மரண தண்டனைக் கைதியொருவரைச் சந்திக்கும் எனது முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இவரிடம் முதலில் எதனை வினவுவது? சிறைக் கைதியொருவரிடம் தண்டனை வழங்கப்பட்ட வழக்கு குறித்து வினவ வேண்டும் என்பதை நான் முன்னர் தெரிந்து வைத்திருந்தேன். அதற்கமைய அவ்வாறு வினாத் தொடுத்தேன். அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் அவரது கதையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற ஆவலில் இருந்தவர் போல அவரது உள்ளத்திலிருந்து வார்த்தைகள் மடமடவென வெளிவந்தன.
எங்களுக்குள் நட்பு ரீதியான பிணைப்பொன்று துளிர்விட்டது. “கொலைக் குற்றத்திற்கே எனக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நான் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபட்டவனல்ல. நான் மொறட்டுவையில் மரத்தளபாட நிறுவனமொன்றை நடத்தி வந்தேன். நான்கு பேர் என்னிடம் வேலை பார்த்து வந்தனர். நான் நல்ல முறையிலே வாழ்ந்து வந்தேன். நான் கொலை செய்த நபர் எமது குடும்பத்திற்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். அவன் ஒரு சண்டியன். கப்பம் பெற்றே வாழ்ந்து வந்தான். அவன் எமது ஊருக்கு மாத்திரமின்றி அயல் ஊருக்கும் பெரும் தொல்லையாகவே இருந்து வந்தான். கப்பம் தொடர்பான ஒரு பிரச்சினையில் அவன் எனது சகோதரனைக் கொலை செய்தான். எனது சகோதரன் மிகவும் திறமைவாய்ந்த தச்சுத்தொழிலாளியாகத் திகழ்ந்தவர். என்னுடனும் அந்தச் சண்டியன் அடிக்கடி மோதியே வந்தான். சம்பவ தினத்தன்று நான் வேலைமுடித்து பஸ்வண்டியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது அவன் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னைத் தாக்கினான். நானும் பதிலுக்கு அடித்து மல்லுக்கட்டினேன். அப்போது என்னிடமிருந்த வெட்டுளியால் அவன் மீது பலமுறை குத்தினேன். அதனால் அவன் அவ்விடத்திலேயே இறந்தான்”.
“அதன் விளைவை இப்போது உணர்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கவர் “நான் ஒரு பௌத்தன். மனித உயிர் ஒன்றைக் கொலை செய்ததற்காக நான் மிகவும் கவலைப்படுகிறேன். அதனின்றும் இப்போது மனதைத் தேற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது எனது குடும்பமும் ஊர் மக்களும் சமாதானத்துடன் இருந்து வருகிறார்கள்.
எனது ஊர் மக்களும் பிக்குமார்கள், கிறிஸ்தவ மத குருமார்கள் எல்லோரும் சேர்ந்து கையொப்பமிட்டு எனக்கு மன்னிப்பளிக்கும்படி ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பியுள்ளார்கள். ஆனாலும் அதற்கும் எதுவும் நடக்கவில்லை. நாம் அதிக செல்வாக்குள்ளவர்கள் அல்லவே. சாதாரண கிராம குடிமக்கள் தானே. எனது மனைவியும் இளம் வயது எனக்கு எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவர்கள் இருவரும் நேற்று என்னைப் பார்க்க வந்தார்கள். நான் எனது மனைவியைப் பார்த்து நீங்கள் இன்னும் வாலிபப் பருவத்தில் இருக்கிறீர்கள். என்னைப் போல உங்கள் வாழ்வையும் வீணாக்கிக் கொள்ள வேண்டாம். வேறு நல்லொருவரை மணந்து எனது மகனையும் நல்ல முறையில் வளர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினேன்.
“ஆழ்ந்த சோகத்துக்கு மத்தியில் நான் ஒருவாறு மனதைத்தேற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. கோழையாக மரணிக்கவும் நான் விரும்புவதில்லை” என்று அவர் கூறினார். எமக்குத் தரப்பட்ட நிமிடங்களும் முற்றுப்பெற்றன.
அப்போது சிறைச்சாலை அத்தியட்சகர், பிரதி பிஸ்கால் அதிகாரி, வைத்திய அதிகாரி, பௌத்த பிக்கு, சிறைச்சாலை உயர் அதிகாரிகள், சிறைக் காவலர்கள் ஆகியோர் வந்தனர். சிறைச்சாலை உயர் அதிகாரி பிரதி பிஸ்கால் அதிகாரியிடம் தூக்குத் தண்டனைக்குத் தயாராகவுள்ளவரின் பெயரையும் இதர விபரங்களையும் கேட்டு பதிந்து கொண்டார். ஆள்மாறாட்டம் இடம்பெற்றிருக்குமா என்பதை உறுதிசெய்து கொள்வதற்கே இவ்வாறு பெயர், விபரங்களைக் கேட்டு தூக்கிலிடப்படுபவர் குறித்து சரியாக உறுதிப்படுத்துவதற்கே இவ்வாறு நடந்து கொள்வதைப் பின்னர் நான் தெரிந்து கொண்டேன்.அதனைத் தொடர்ந்து பௌத்த பிக்கு சமய வழிபாடொன்றினை நிகழ்த்தினார். அதன் பின்னர் சிறை சிற்றறையைத் திறந்து சிறைக்காவலர், அலுகோசு ஆகியோர் அதனுள்ளே சென்றனர். தடித்த சொர சொரப்பான நீண்ட அங்கியொன்றை மரண தண்டனைக் கைதிக்கு அணிவித்தனர். அது இரு கைகளின் தோள்ப்பட்டையிலிருந்து பாதம் வரையிலும் நீளமான குப்பாயம் போன்ற ஆடையாகும். பின்னர் இருகைகளும் சேர்த்துக் கட்டும்படியான அகலமான துணிப் பட்டியொன்று மார்பைச் சுற்றிக் கட்டப்பட்டது. முன்னர் கூறப்பட்டவாறான தடித்த துணியால் தைக்கப்பட்ட உச்சந்தலையிலிருந்து கழுத்து வரையிலுமான தொப்பி உறையொன்று தலையில் அணிவிக்கப்பட்டு, கைதி தூக்குமேடைக்குக் கொண்டு வரப்பட்டார். முகம் திறந்த நிலையில் அவரது முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்திருப்பதை சொல்லிலோ எழுத்திலோ வடிக்க முடியாது. சோகத்தோடு துணிவையும் அவதானிக்க முடிந்தது. பின்னர் அலுகோசு காப்புப் போன்ற நாடாவால் இரு பாதங்களையும் சுற்றி இறுகக் கட்டினார். இறுதிப் பயணமாவதை அவர் உணர்ந்தவராக எம்மை நோக்கி, “சேர் நான் போகிறேன்” என்று கூறி விடை பெற்றார். இதயத் துடிப்பின் இறுதிக் கட்டம் அது. முன்னர் பை போன்று தலையில் அணிவித்திருந்த முகமூடித் துணி கீழே இழுக்கப்பட்டு முகம் மறைக்கப்படுகிறது. தூக்குத்தொண்டு கழுத்தைச் சுற்றி வைக்கப்படுகிறது. பீதியால் என்னுள்ளம் பட படத்தது. கண்களிலிருந்து தீப்பொறி பறந்தது. தலைசுற்றித் தள்ளாடியது. சில நிமிடங்களுக்கு முன்னர் சோகக் கதை பொழிந்த அந்த நபர் என் கண்ணெதிரே பயங்கரமாக மரணிக்கும் காட்சி. ஒரு கணம் திக்பிரமை பிடித்து நின்றேன். இத்தகைய நீதி தர்மத்தின் பெயரால் விளையும் மனிதப் படுகொலை என்ற உணர்வே என் உள்ளத்தில் உதித்தது. கொலை கொடூரம் என்றால் அரசாங்கத்தால் கொல்லப்படுவதும் கொடூரம்தான். அப்போது என் மனதில் மின்னலாய்ப் பளிச்சிட்ட வார்த்தைகள் தான் அவை.
பிரதிப் பிஸ்கால் அதிகாரி தலையசைத்தார். அலுகோசு ஆழியை இழுத்தார். தூக்குக் கயிறு மெல்லத் திறந்து ஆள் கீழே விழுந்தார். நான் அருகே சென்று எட்டிப் பார்த்தேன். அக்காட்சிளைப் கண்டு என் கண்கள் நிலைகுத்தி நின்றன. அங்கு அவதானத்துடன் நின்ற அதிகாரிகள் தூக்குக்குழியின் அருகே சென்றனர். வைத்திய அதிகாரி நாடித் துடிப்பு கண்டறியும் தனது குழலை கைதியின் மார்பின் மீது வைத்து இதயத்துடிப்பு செயலிழந்து விட்டதா என்று பரிசோதித்தார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வைத்துப் பார்த்தார். பின்னர் சடலத்தை எடுக்கும்படி கூறினார். அதனைத் தொடர்ந்து திடீர்மரண விசாரணை அதிகாரி பரிசோதனை நடத்தி “நீதிமன்றத்தால் தூக்கிலிட்டுக் கொல்லும்படியான தீர்ப்புக்கமைய மூச்சுத்திணறி நிகழ்ந்த மரணம்” என்று அறிக்கையிட்டார்.
சுருக்கமாகச் சொல்வதானால் அன்று நான் மிகவும் பயங்கரமான அனுபவம் ஒன்றையே பெற்றேன். அதன் மனத்தாக்கத்தால் பல நாட்கள் சாப்பிடவோ குடிக்கவோ முடியாது சோகத்தில் உறைந்து போயிருந்தேன். இரவு நித்திரையில் பயங்கரக் கனவுகளும் தென்பட்டன. சிறைச்சாலை சேவைக் காலத்தில் மீண்டுமொரு இத்தகைய பயங்கரக காட்சிகள் காணக் கிடைக்கக்கூடாது என்றே பிரார்த்தித்தேன்.
சிறைச்சாலையின் முன்னாள் ஆணையாளரான எச்.ஜீ. தர்மதாஸ சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய தனது அனுபவக் கட்டுரையின் ஒரு பகுதியையே மேலே குறிப்பிட்டிருந்தேன்.
மனிதாபிமானத்தை தலைகுனிய வைக்கும் மரண தண்டனையின் விளைவுகளை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
மேற்கண்டவாறு மரண தண்டனைக்கு இரையான நபரைப் போன்றே இங்குள்ள சிறைக்கூடங்களில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளவர்களில் 90 வீதமானோர் முன்னர் குற்றச் செயலில் ஈடுபடாதோராவர். அவர்களில் 70 வீதமானோர் கிராமவாசிகள் என்பதையும் அறிய முடிகிறது. அத்துடன் 73 வீதமானவர்கள் எட்டாம் தரத்தை விட குறைந்த தரங்களில் கல்வி பயின்றவர்கள் என்பதும் மற்றுமோர் உண்மையாகும். மரண தண்டனைக்குப் பதிலாக நீண்டகால சிறைத் தண்டைனையில் வைத்திருக்கும் மாற்று வழியொன்று அமுலில் உள்ளது. எந்த நீதிமன்றமும் நூற்றுக்கு நூறு வீதம் சரியாக உள்ளதென்று கூறுவதற்கில்லை. அப்பாவிகள் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளமையும் அபூர்வ நிகழ்வல்ல. வழக்குகளுக்குச் செலவு செய்ய இயலாத, திறமைவாய்ந்த வழக்குரைஞர்களை அமர்த்த வசதியில்லாத மக்களே மரண தண்டனைப் பிடியிலிருந்து மீள முடியாது அகப்பட்டுக் கொள்கின்றனர்.
இப்போது ஜனாதிபதி சிறிசேன தூக்கிலிடுவதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அதனை அரசியல் சந்தோசத்திற்கான ஆட்டத்தின் இறுதிச் சுற்றுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதுவும் மேற்படி எதுவும் அறியாத அஞ்ஞான அரசியல்வாதியாகவே தன்பிடியைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அவரை ஜனாதிபதியாக பதவியிலமர்த்திய சகல அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் யாவும் இவரின் இந்த அஞ்ஞான தீர்மானத்தை எதிர்த்து நிற்கின்றன. எதிர்க்கட்சியும் எதிர்க்கிறது. உலக மனித உரிமைகள் சமூகமும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.
சகல துறைகளிலும் இவர் புரிந்துள்ள அட்டூழியங்கள், காட்டிக்கொடுப்புக்களே இறுதியாக வரலாற்றில் பதியப்படப் போகிறது.
ஜனாதிபதி சிறிசேன உங்களால் இதுவரையும் இழைக்கப்பட்டுள்ள அகௌரவம், அஞ்ஞானம், தூரநோக்கற்ற அரசியல் போன்ற சாகசங்கள் இத்துடன் சமாதியாகட்டும்.
அட்டையைத் தூக்கி தாமரை இலையில் வைத்தாலும் அது சேற்றுக்கே சென்றுவிடும் என்றொரு கூற்றுள்ளது. அதுபோல சிறிசேன சேற்றுக்கே போகட்டும். சேற்றிலே இறங்கட்டும்.
அந்த தூக்கிலிடப்பட்டு மரணித்த மனிதனைப் போன்று உங்களுக்கும் எந்தத்தேர்வும் இல்லை. அம்மனிதன் கௌரவச் செயலாக இறுதியில் அதற்கே முகம் கொடுத்தார். உங்களால் இப்போதே இயலாமல் போயுள்ளது. நீங்கள் இல்லாமலாக்கியவையும் இல்லாமல் ஆக்கச் செய்தவையும் எத்தகைய அபூர்வ வரலாற்று வாய்ப்புக்கள் என்பதை நீங்கள் சும்மா சிந்தித்துப்பாருங்கள். கெட்ட கனவுகள் நீங்கள் காண்கிறீர்கள். மரண மகிழ்ச்சியிலாவது இறுதி ஆட்டத்தை அனுபவியுங்கள். போங்கள், அரசியல் நரகலோகத்திற்கே நடைபயிலுங்கள்.
சிங்களத்தில்:
சுனந்த தேசப்பிரிய
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
நன்றி: ராவய வார இதழ்