ஏப்ரல் 21 தாக்குதல்கள் மதவாதத்தினதும், இனவாதத்தினதும் கோர முகங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. மதவாத, இனவாத கோர முகங்கொண்டோரினால் முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், வெறுப்புப் பேச்சுக்கள், செயற்பாடுகள் இந்நாட்டின் பிரஜைகளான முஸ்லிம்களை அரசியல், ஆன்மிக மற்றும் சமூக ரீதியில் அடிமைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியாகவே நோக்க வேண்டியுள்ளது.
ஒரு சமூகத்தின் முதுகெலும்பாகவுள்ள அரசியல் சக்தியும், ஆன்மிக வழிகாட்டலின் பலமும், பொருளாதார வளர்ச்சியும் உடைக்கப்படுமாயின் அச்சமூகத்தினால் எழுச்சிபெற முடியாது. உலகளவில் இம்மூன்றும் உடைக்கப்பட்ட சூழல் முஸ்லிம் உலகில் காணப்படுவதை அவதானிக்கலாம்.
இந்நிலையில், பல்லாண்டு காலமாக இந்நாட்டில் இன ஒற்றுமையுடன் வாழும் முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து பிரித்தாளும் இலக்குடன் செயற்படும் இன ஐக்கியத்தை விரும்பாத கடும்போக்காளர்களின் செயற்பாடுகளுக்கு ஏப்ரல் 21 தாக்குதல்கள் வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது போலவே அவர்களினால் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள், தீர்மானங்கள் வெளிப்படுத்தி வருவதைக் காணமுடிகிறது.
கடந்த இரண்டரை மாதங்களாக முஸ்லிம்களின், ஆடை, ஹாலால் உணவு, மத்ரஸா கல்வி என பல்வேறு விடயங்கள் தொடர்பில் போலிக் குற்றச்சாட்டுக்களும், வெறுப்புப் பேச்சுக்களும் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில் கடந்த 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா அமைப்பினால் கண்டி போகம்பறை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின்போது அவ்வமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் போகம்பறைத் தீர்மானங்கள் என இனமேலான்மையை மையப்படுத்திய அறிவிப்புக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வறிப்புக்கள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில் அக்கூட்டத்தில் உலமா சபையும், உலமாக்களும் இலக்கு வைக்கப்பட்டிருப்தையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பிலும், உலமா சபையின் செயற்பாடுகள் குறித்தும் கடந்த காலங்களில் அடக்கி வாசிக்கப்பட்டு வந்த விடயங்களை தற்போது பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் சமூக மயப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படும் பொறிமுறைகளில் பொதுபலசேனாவின் போகம்பறை தீர்மானங்களும் ஒன்றா என்ற கேள்யையும் எழச் செய்துள்ளது.
பொதுபலசேனாவும், போகம்பறை தீர்மானமும்
2012இல் உருவாக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பு உருவான காலம் முதல் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. ஆறு வருடங்களுக்கும் மேற்பட்ட காலமாக பழைய பல்லவிகளைப் பாடி முஸ்லிம்கள் தொடர்பான நல்லெண்ணத்தை பெரும்பான்மை சமூகத்திலிருந்து இல்லாமல் செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தமக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு முயற்சித்தாலும் அம்முயற்சிகளின் இலக்குகள் வெற்றிகொள்ளப்படவில்லை என்பதை கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தல் புடம்போட்டிருக்கிறது.
‘பொதுஜன பெரமுன’ என்ற பெயரில் பொதுபல சேனா நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. 16 மாவட்டங்களில் இவ்வமைப்பு போட்டியிட்டு ஏறக்குறைய 23,000 வாக்குகளைப் பெற்றது. ஏறக்குறைய 15,000,000 சிங்கள மக்கள் வாழும் இந்நாட்டில் இவ்வமைப்பை விசுவாசித்து வடக்கு மாகாணம் தவிர்த்து சகல மாகாணங்களிலும் ஏறக்குறைய 23,000 மக்களே ஆதரித்து வாக்களித்திருந்தனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக்கூட பெறுவதற்கான மக்கள் ஆதரவை இவ்வமைப்பினால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெறமுடியவிலை.
இந்நாட்டின் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பது எங்களது தலையாய கடமை என்று கூறி பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும், இவர்களின் இப்பிரசாரங்கள் கடந்த பொதுத் தேர்தலில் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் பயனளிக்கவில்லை.
அம்மக்கள் இவர்களின் இனவாதக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வெறும் 23 ஆயிரம் வாக்காளர்களே இவர்களின் கருத்துக்களை ஏற்றிருந்தனர். இவ்வாறு இவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி நிலையிலிருந்து மீள்வதற்கும் சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கும், அதன் வழியே அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்குமாக முன்வைக்கப்பட்ட இனவாதக் கருத்துக்களைக் கொண்ட தீர்மானமாகவே போகம்பறை தீர்மானம் அரசியல் அரங்கில் நோக்கப்படுகிறது.
அவ்வமைப்பினால் எதிர்பார்த்த எண்ணிக்கை பிக்குகளையும், மக்களையும் இக்கூட்டத்தில் இணைத்துக்கொள்ள முடியவில்லை என்ற கருத்து நிலவும் சூழலில் இக்கூட்டம் தொடர்பில் பிரதேச முஸ்லிம்கள் பெரும் அச்சம் கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்நிலையில்தான் இக்கூட்டத்தில் இன மேலாண்மை அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒன்பது தீர்மானங்களும் இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகங்களை புறந்தள்ளிய நிலைப்பாட்டை முன்னுரிமைப்படுத்தியிருப்பதை காண முடிகிறது.
சிறுபான்மையினரின் தயவில்லாத தனி சிங்கள இராச்சியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை பலமாக வலியுறுத்தியிருக்கும் இம்மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பிலும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதை மூலோபாயமாகக் கொண்டு முன்வைக்கப்படுகின்ற ஞானசார தேரரின் கருத்துக்கள் குறித்தும் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருவதை ஊடகங்கள் வாயிலாக அவதானிக்க முடிகிறது.
பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரர் சிங்கள பௌத்த இனவாதியாவார். அப்படியானாவர் மதவாதம் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் அவர்களின் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார ஊடக செய்தியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
ஞானசார தேரர் முஸ்லிம் அடிப்படைவாதம், இனவாதம் தொடர்பில் பேசிவருகிறார். அடிப்படைவாதம், இனவாதம் எந்த மதத்திலிருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அடிப்படைவாத நடவடிக்கைகள் எல்லை மீறும்போதுதான் பங்கரவாத நடவடிக்கைக்குத் தள்ளப்படுகிறது.
ஆனால், ஞானசார தேரரின் கடந்தகால நடவடிக்கைகள் சிங்கள அடிப்படைவாதம் அல்லது இனவாதத்தைத் தூண்டும் வகையிலேயே இருந்து வந்துள்ளன. அப்படியானவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக செயற்படத் தகுதி இருக்கின்றதா என்ற கேள்வியையும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தனது ஊடகச் செய்தியினூடாக எழுப்பி இருக்கிறார்.
“இதேவேளை, கண்டியில் பொதுபல சேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டிருந்த தீர்மானங்களில் சில முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான போர்ப்பிரகடனத்திற்கு ஒப்பானது” என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், “நாட்டில் ஆண்டாண்டு காலமாக சிங்கள பௌத்தத்திற்கு அனைத்து விதங்களிலும் ஆட்சியாளர்களினால் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தமையின் உச்சகட்ட விளைவே கண்டியில் இடம்பெற்ற பொதுபல சேனாவின் மாநாடாகும்.
“இனிமேல் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஆளப்போவதில்லை. மாறாக சிங்கள பௌத்த இனவாதம்தான் நாட்டை ஆட்சி செய்யப்போகிறது” என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் ஊடக செய்தியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
சிறுபான்மையினருக்கு எதிராக கடும்போக்கு அமைப்புக்கள் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தாலும், ஏப்ரல் 21 தாக்குதல்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு எதிராகவும் கடும்போக்கு அமைப்புக்களை செயற்படச் செய்திருக்கிறது. இந்நிலைமையை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்த பின்னர் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தியிருக்கின்றன. முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் சமகால சவால்களை இவரின் வருகை மேலும் சிக்கலுக்குள் தள்ளியிருப்பது வெளிப்படையானது.
ஒரு குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு மக்கள் பிரிவின் அகம்சார்ந்த உணர்வுகளை முற்றாக நிராகரித்து, நீங்கள் இவ்வாறுதான் உங்களை அடையாளப்படுத்த முடியும் என்று விதிமுறைகளை யாரும் திணிக்க முடியாது.
ஆனால், கடந்த காலங்களிலும் சமகாலத்திலும்; இந்நாட்டிலுள்ள கடும்போக்களர்களினால் முன்வைக்கப்பட்ட, முன்வைக்கப்படுகின்ற வெறுப்புணர்வுப் பேச்சுக்களும், தீர்மானங்களும் அவர்களின் செயற்பாடுகளும் ஓர் இனத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், வாழ்வியல் உரிமைக்கு பங்கம் ஏற்படுத்துவதாகவும், தனித்துவப் பண்புகளை நிராகரிப்பதாகவும் அமைந்துவிடுகிறது.
ஓர் இனத்தினர் தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான் இனங்களின் தனித்துவத்தை, அம்மக்களின் அபிலாசைகளை மதிப்பவர்களின் கடமையாகும்.
ஆனால் கடும்போக்கு மதவாதிகள் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக, முஸ்லிம் மக்களின் தனித்துவ உணவு, தனித்துவ ஆடை எனப் பல தனித்துவ அடையாளங்களை சிதைப்பதை இலக்காகக்கொண்டு கடந்த ஆட்சிக் காலத்தில் செயற்பட்டார்கள். அவற்றிற்கு அக்காலங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டன போன்றதொரு சூழல் இந்த ஆட்சியிலும் காணப்படுகிறது. மாறாக இந்தச் சூழல் அன்றும் தடுக்கப்படவில்லை; இன்றும் தடுக்கப்படவில்லை. அதனால்தான் ஆட்சியாளர்கள் இவ்வாறுதான் செயற்பட வேண்டுமென்ற உத்தரவை பகிரங்கமாகத் தெரிவிக்க கடும்போக்காளர்கள் முற்படுகின்றனர்.
உலமா சபையும் எதிர்காலமும்
1924ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை 15 உபகுழுக்களைக் கொண்டு இயங்குகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு பணிக்கூறுகள் வழங்கப்பட்டு செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலமாசபை உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலும் உருவாக்கப்பட்டதே தவிர சிலர் சுட்டிக்காட்டுவது போன்று வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதல்ல என்பதை உலமா சபை வலிறுத்திச் சொல்கிறது. இச்சபையில் 90 வீதத்திற்கு அதிகமானோர் உள்ளநாட்டில் கற்றுத் தேர்ந்தோர் என்றும். 90 வருட பயணத்தில் ஆலிம்கள் பொதுமக்கள் துறைசார்ந்தோருக்கு ஆன்மிக ரீதியிலான வழிகாட்டல்களையும், முஸ்லிம்களுக்கு மத்தியில் ஐக்கியத்தையும், முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டும் வருகிறது.
2000ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட உலமா சபைக்கு நாடளாவிய ரீதியில் பல மாவட்ட, பிரதேச கிளைகள் உள்ளதாகவும் இதில் 5000க்கும் மேற்பட்ட ஆலிம்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடத்தில்தான் விமர்சனங்களும், கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. உலமா சபையின் கீழ் இயங்கும் 15 உப குழுக்களுக்கும் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுகின்றபோது அவற்றில் துறைசார் புத்திஜீவிகளும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இந்த நடைமுறை உலமா சபையினால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் பல ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஓர் அமைப்பை வழிநடத்துவற்கு மும்மொழி அறிவு மாத்திரம் போதாது. மாறாக, பல்துறை அறிவுசார் நிபுணத்துவமும், அனுபவமும், ஆளுமையும் அவசியம். அத்தகைய முப்பரிமாண திறன்மிக்கவர்கள் உலமா சபையின் உபகுழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏற்ப நியமிக்கப்படுவது அவசியமாகவுள்ளது. அத்துடன், குர்ஆனும், நபி வழியும் காட்டும் அடிப்படையில் தலைமைத்துவ சபை ஒன்று உருவாக்கப்படுவதும் காலத்தின் அவசியமாகவுள்ளது. விட்டுக்கொடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு இச்சபைக்கான உறுப்பினர் தெரிவுகளும், பதவிகளும், பொறுப்புக்களும் வழங்கப்பட வேண்டும். சமூக அக்கறையுள்ள துறைசார் அனுபவமும், ஆளுமைத் திறனும் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் அவசியம். ஏனெனில், நிகழ்கால மற்றும் எதிர்காலத்தில் சமூகம் எதிர்நோக்கவுள்ள நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் முஸ்லிம் சமூகத்தை முறையான பொறிமுறைகளினூடாக நெறிப்படுத்தி வழிகாட்டப்படுவதற்கு துறைசார் அனுபவம் கொண்டதொரு தலைமைத்துவ சபையின் அவசியம் இன்றியமையாதது என்பது புரிதலுக்குள்ளாக வேண்டியதாகும்.
ஏப்ரல் 21 இன் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற சவால்களையும், நெருக்கடிகளையும் வெற்றிகொள்ள உலமா சபை முழுமூச்சாக செயற்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை. இருப்பினும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் வினைத்திறன்மிக்கதாக அமைய வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதும் அவசியமாகவுள்ளது.
இந்நிலையில்தான். உலமா சபையினுடனான அனைத்துவிதப் பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும். பல உலக நாடுகளின் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படை வாத 4 அமைப்புக்களுடன் உலமா சபை தொடர்புகளைப் பேணி வருகின்றது. எனவே இவர்களை அரசாங்கம் அங்கீகரிகக் கூடாது 1956ஆம் ஆண்டில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆனை இலங்கை வாழ் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். ஒரு கடவுள் என்றால் ஒரு குர்ஆன்தான் காணப்பட வேண்டும். இதனை விடுத்து உலமா சபை அடிப்படைவாதத்தை விதைத்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். உலமாக்கள் இங்கு வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை போன்ற பல எச்சரிக்கைக் கருத்துக்கள் உலமா சபையை நோக்கி கண்டி மாநாட்டில் பாய்ந்துள்ளன.
ஒவ்வொரு சமூகத்திலும் அச்சமூகத்தின் மத, கலாசார செயற்பாடுகள் தொடர்பில் அச்சயமத்தைப் பின்பற்றுகின்ற மக்களை வழிப்படுத்துவதற்கு சபைகளும், அமைப்புக்களும் செயற்படுகின்ற நிலையில் முஸ்லிம்களின் சமய, கலாசார மற்றும் இதர விடயங்களில் தொடர்பில் வழிகாட்டி நெறிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செய்றபாடுகள் தொடர்பில் கடும்போக்காளர்களின் கழுகுப்பார்வை திருப்பப்பட்டுள்ளதன் பின்னணி தொடர்பிலும் உலமா சபையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் சிந்தித்து செயற்பட வேண்டிய சூழலுக்குள் உலமா சபை தள்ளப்பட்டிருப்பதையே கண்டி மாநாட்டில் எதிரொலித்த கருத்துக்கள் சொல்லும் செய்தியாகக் காணப்படுகிறது.
கண்டி மாநாட்டில் மாத்திரமல்ல, அதற்கப்பாலும் உலமா சபை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் உலமா சபையின் மத்திய சபை கூட்டம் நாளை 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் உலமா சபையின் அடுத்த தலைவர் யார்? அல்லது தற்போது தலைமைப் பதவி வகித்து வரும் தலைவரா தொடர்ந்தும் தலைமைப் பதவியை வகிக்கப்போகிறார் என்ற கேள்வி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுப்பப்படும் இச்சந்தர்ப்பத்தில் தலைமைப் பதவிக்காக முரண்பட்ட சமூகம் என்ற அவப்பெயர் எழுந்திடாமல், மாற்றங்களுக்கு முன்னுரிமை வழங்கி, வழிவிட்டு முஸ்லிம்களும், உலமா சபையும் கடும்போக்காளர்களின் கழுகுப்பார்வையிலருந்து விடுபடுவதற்கும் எதிர்நோக்கி யிருக்கின்ற சவால்களை வெற்றி கொள்வதற்கும் உலமா சபையின் மத்திய சபைக் கூட்டம் பிளவுகளின்றி நிறைவுபெற வல்ல இறைவன் துணைபுரிய வேண்டும் என்பதோடு விட்டுக்கொடுப்புடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்’ என்பதும் சமகால கோரிக்கையாகும்.
vidivelli