மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன பரீட்சை; தமிழ் வினாத்தாளில் குறைபாடுகள்
ஆளுநரைச் சந்தித்து பட்டதாரிகள் நேரில் முறைப்பாடு
மேல் மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த மே மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற தமிழ் மொழி மூல பரீட்சை வினாத்தாளில் இருந்த பல்வேறு குறைபாடுகளால் தமிழ் மொழி மூல மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கவனம் செலுத்துமாறு மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலைச் சந்தித்து முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்று முன் தினம் ஆளுநரைச் சந்தித்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதியைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
குறித்த பரீட்சையின் வினாத்தாளில் பின்வரும் குளறுபடிகள் இடம்பெற்றிருந்ததாக பரீட்சார்த்திகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும் போது ஏற்பட்டிருந்த வசனப் பிழைகள் மற்றும் வினாக்கள் பூர்த்தியின்றியிருந்தமை, நுண்ணறிவைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்ட வினாக்களில் தரவுகளை பிழையாகத் தந்திருந்தமை, சரியான விடையின் கீழ் கீறிடுக என்று வேண்டப்பட்ட கேள்வியில் சரியான விடை வினாத்தாளில் உள்ளடக்கப்படாமை, ஒரே தலைப்பில் அதிகமான கேள்விகளை உள்ளடக்கியிருந்தமை, வினாக்களில் இருந்த அதிகமான எழுத்துப் பிழைகளும் வசனப் பிழைகளும் கேள்விகளைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியமை, நுண்ணறிவைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்ட வினாக்களின் தரவுகளை விடை காண்பதற்காக குறித்துக் கொள்வதற்காக உதிரித் தாள்கள் எதுவும் வழங்கப்படாது வினாத்தாளின் இறுதிப் பக்கத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டமை. இதனால் அதிக நேர விரயம் ஏற்பட்டமை ஆகிய குறைபாடுகள் மேல் மாகாண ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் குறித்த வினாத்தாளானது ‘கூகுள் மொழிபெயர்ப்பு’ மூலம் சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பரீட்சார்த்திகள் சந்தேகம் வெளியிடுன்றனர்.
குறித்த விடயங்களால் அன்றைய தினம் பரீட்சை எழுதிய மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களுக் குள்ளாகியுள்ளனர் என்றும் இதுவிடயத்தில் தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும் பரீட்சார்த்திகள் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
vidivelli