முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கும், முஸ்லிம் பெண்களை காதி நீதிபதிகளாக நியமிப்பதற்கும், விவாகரத்து வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு மத்தாஹ் (நஷ்டஈடு) பெற்றுக் கொடுப்பதற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தங்களது ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கினார்கள். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி நீண்ட நேரம் கலந்துரையாடி இத்தீர்மானத்தை மேற்கொண்டனர்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு தனது திருத்தங்கள் உள்ளடங்கிய அறிக்கையை கடந்த வருடம் நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் வழங்கியிருந்தது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்தக் குழு இரண்டாகப் பிளவுபட்டு இருவேறு அறிக்கைகளை நீதியமைச்சரிடம் கையளித்திருந்ததால் அமைச்சர் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளமுடியாத நிலையில் அறிக்கையை சிபாரிசுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்திருந்தார்.
சட்டத் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை, பெண்கள் காதி நியமனம், மத்தாஹ் போன்ற விடயங்களிலே முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆகக் காணப்படுவதால் நாட்டின் நிலைமையைக் கொண்டும், பொதுவாக முஸ்லிம் பெண்கள் 18 வயது கடந்தே திருமணம் செய்து கொள்வதையும் கருத்திற்கொண்டு முஸ்லிம் பெண்களின் வயதெல்லை 18 ஆகத் தீர்மானிக்கப்பட்டதாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் காதிகளாக நியமிக்கப்படுவதற்கும் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. திருமணமொன்றின் போது பெண்களுக்கு ‘வொலி’ இல்லாத நிலையில் ‘வொலி’ அனுமதிப்பத்திரம் பெண்காதிகளுக்கு வழங்க முடியாதுள்ளது. ஏனென்றால் ஷரீஆ சட்டத்தின்படி ஆண் காதிகளுக்கே ‘வொலி’ அனுமதி வழங்க முடியும். இந்நிலையில் ‘வொலி’ அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது ஆண் காதிகளுக்கே உரித்தாக இருக்கும் எனவும் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
விவாகரத்தின் போது பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு மார்க்க அறிவுடன் கூடிய சட்டத்தரணிகளை காதி நீதிபதிகளாக நியமிக்கவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
வருடக்கணக்காக இழுபறி நிலையில் இருந்த முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்த சிபாரிசுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை காதி நீதித்துறையில் குறிப்பிடத்தக்கதாகும் எனவும் அவர் கூறினார். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், நீதிபதிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என 19 பேர் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
vidivelli