ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாதத்துடன் தொடர்பற்றவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பிரதமரால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கிணங்க பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புட்ட 161 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 167 பேர் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றனர். 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அத்துடன் குளியாப்பிட்டி, ஹெட்டிபொல தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 39 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவற்றுக்கு உதவி வழங்கியோர் தொடர்பாக விசாரணை தொடர்ந்து இடம்பெறுகிறது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் அச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது. அச்சட்டத்தின் கீழ் 2,000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இந் நிலையிலேயே இவர்களில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் சில நூறு பேரே இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் எம்.பி.க்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதும் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிப்பதற்கான அழுத்தம் வழங்கப்பட்டது. இதற்கமைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் மௌலவிமார் உட்பட 36 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்திருந்தார். இதற்கமைய மறுநாளே 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறான விடுதலைகள் துரிதப்படுத்தப்பட்டமைக்கு முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களுமே காரணமாகும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடன் விடுவிக்குமாறு கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
இவ்வாறான விடுதலைகள் ஒருபுறம் நடக்க, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகி கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் ஷாபி இதுவரை விடுவிக்கப்படவில்லை. சட்டமா அதிபர் திணைக்களமும் குற்றப் புலனாய்வுப் பிரிவும் பாதுகாப்பு அமைச்சும் டாக்டர் ஷாபி குற்றமற்றவர் என நிரூபித்தும் கூட அவருக்கு நேற்றைய தினம் பிணை வழங்கப்படவில்லை. இனவாத சக்திகள் நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வெளியே நின்று கொண்டு விடுத்த அச்சுறுத்தல்களும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதங்களுமே பிணை வழங்குவதற்கு தடையாக அமைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டாக்டர் ஷாபி விடயத்தில் சட்டத்தையும் நீதியையும் விட இனவாதத்தின் கையே மேலோங்கியிருப்பது துரதிஷ்டவசமானதாகும். இதுவிடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் நேரடியாக தலையிட்டு டாக்டர் ஷாபியை விடுதலை செய்யவும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கவும் முன்வர வேண்டும்.
இதற்கிடையில் பதவி துறந்த முஸ்லிம் எம்.பி.க்கள் மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளனர். பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டமையினாலும் சமூக விவகாரங்களை அமைச்சரவையில் பேசவும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுமே பதவிகளை மீளவும் ஏற்கத் தீர்மானித்ததாகவும் கூறுப்படுகிறது.
எது எப்படியிருப்பினும் முஸ்லிம் எம்.பி.க்கள் தமக்கிடையிலான ஒற்றுமையினையும் சமூக விவகாரங்களை ஒன்றுபட்டு கையாளும் நகர்வுகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளில் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
vidivelli