அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட பாடசாலை நிருவாகமும் அரசாங்கமும் தடை விதித்துள்ளமையை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி முஸ்லிம் பெண் ஆசிரியை ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கண்டியைச் சேர்ந்த மொஹமட் இப்ராஹிம் பாத்திமா சஹ்ரின் (44) எனும் ஆசிரியை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரு, முருது பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட 13/2019 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை அபாயா அணியும் உரிமையை மறுப்பதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தெமுனு டி சில்வா, இந்த மனுதாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் 26.06.2019 திகதியிடப்பட்ட திருத்தப்பட்ட புதிய பொது நிருவாக சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டிருப்பதாகவும் அதில் அபாயா, ஹிஜாப் போன்றவற்றை அணிவது தடைசெய்யப்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இந்த நிலைவரம் மனுதாரருக்கு விளக்கப்பட்டதோடு மேலதிக விசாரணையை செப்டம்பர் 04 ஆம் திகதி நடத்துவதென நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டதைப்போன்று அபாயா, ஹிஜாப் அணிவதற்கு தற்போது தடையிருக்கின்றதா, இல்லையா? என்பதைப்பற்றி ஆராயவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13/2019 இலக்கமுடையதும் 2019 மே 29 ஆம் திகதியுடையதுமான பொது நிருவாக சுற்றறிக்கை பற்றி அறிந்திராத நிலையில் வழமைபோன்று 31 ஆம் திகதி பணிக்குச் சென்றபோது பொதுநிருவாக சுற்றறிக்கையின் பிரகாரம் சேலை அணிந்து வருமாறு பாடசாலை அதிபர் தம்மை கோரியதாக மனுதாரரான ஆசிரியை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் தன்னுடைய மனுவில் பொதுநிருவாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர், ரணபிம ரோயல் கல்லூரி அதிபர், சட்ட மாஅதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
குரல்கள் இயக்கத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் இந்த மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli