- ஏ.ஆர்.ஏ. பரீல்
குத்பா பிரசங்கங்களை சுருக்கி தொழுகையை நீட்டிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நாட்டிலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களின் கதீப்மார்களையும் பள்ளிவாசல் நிர்வாகங்களையும் கோரியுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பெரும்பாலான பள்ளிவாசல்களில் மதியம் 1.30 மணியையும் கடந்து ஜும்ஆ பிரசங்கங்கள் நடைபெறுவதாக உலமா சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஜும்ஆ தொழுகைக்காக குறுகிய நேர விடுமுறையைப் பெற்றுவரும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பல சிரமங்களுக்குள்ளாகின்றனர். கதீப்மார்கள் குத்பாவைச் சுருக்கி தொழுகையை நீட்டிக் கொள்வதே சன்மார்க்கத்துக்கான சிறந்த அடையாளமாகும். குத்பா பிரசங்கங்கள் நீண்ட நேரம் இடம்பெறுவதால் வயதானவர்கள் மற்றும் நோயாளர்களும் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக குத்பா பிரசங்கங்களை சுருக்கிக் கொள்ளுமாறு உலமா சபை ஆலோசனை வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளது.
-Vidivelli