நான்கு திசைகளும் அதாவது முழு நாடும் ஓரணியில் என்ற தொனிப் பொருளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கண்டி போகம்பரை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறிய மாநாடு எவ்வித வன்செயல்களுக்கும் காரணமாக அமையவில்லை என்பது ஆறுதலைத் தருகிறது. மாநாடு இடம்பெற்ற கண்டி நகரிலும் அயல் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கனவு கண்டது போன்று ஒரு இலட்சம் மக்களும் 10 ஆயிரம் குருமாரும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில ஆயிரம் பேரே மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
ஞானசார தேரரின் உரை நாட்டின் அரசியலை விமர்சிப்பதாக அமைந்திருந்ததுடன் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் அவர் உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளை வெளியிட்டார். அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு சிறைத் தண்டனைக்கு உட்படுத்தும்வரை இவ்வாறான கருத்துகளையே கூறி வந்தார். முஸ்லிம்கள் இந்நாட்டுப் பிரஜைகள் அல்ல அவர்கள் சவூதி அரேபியாவுக்கு ஓடிவிட வேண்டும் எனக் கருத்து வெளியிட்டவர். ஹலாலுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை ஒன்று திரட்டியவர், அளுத்கம போன்ற வன்செயல்களுக்கு வித்திட்டவர் அவர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்தும் வெளியே வந்த அவரது உரையில் முன்னைய வீரியத்தைக் காணக்கூடியதாகவும், கேட்கக் கூடியதாகவும் இருந்தது.
‘இஸ்லாமிய அடிப்படைவாதத்தை துடைத் தெறியும் பொறுப்பினை குருமார்களாகிய எங்களிடம் தாருங்கள். அடிப்படைவாதம் என்னும் விஷப் பாம்பை தர்மம் எனும் வாளினாலே அழிக்க முடியும் என அவர் ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொண்டார். நாங்கள் நாட்டில் சிங்கள ஆட்சியொன்றினை நிறுவி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.
இத்துடன் அவர் மௌனித்து விடவில்லை. மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் பாடசாலைகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். மதம், இனம் அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சூளுரைத்தார்.
பல்லின சமூகம் வாழும் நாட்டில் அரசாங்கம் தேசிய ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்துவதற்கு வேலைத் திட்டங்களை அமுல்படுத்திவரும் நிலையில் ஞானசார தேரர் இவ்வாறான கருத்துகள் வெளியிடுவது நாட்டை சமாதானத்தின் பால் இட்டுச் செல்வதாக அமையவில்லை. இவ்வாறான மாநாடுகள் இனங்களுக்கு இடையில் விரிசல்களையும் குரோதங்களையுமே ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறான மாநாடுகள் நடத்தப்படுவதை சில நிபந்தனைகளின் கீழேயே அனுமதிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையுடன் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காக அவர் பலசுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தியவர். குர்ஆனில் அவருக்கேற்பட்ட சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றுக் கொண்டவர். இவ்வாறான ஒருவர் முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உலமா சபையுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். உலமா சபை கலைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உலமா சபை தப்லீக், வஹாபிசம், சலபி, இஹ்வான்– ஜமாஅத்தே இஸ்லாமி ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் இப் பிரிவுகள் இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இப்படியான ஒரு மதகுருவே பெரும்பான்மை சமூகத்தை வழி நடத்துவதற்குக் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் வெறுப்புணர்வு பேச்சுக்களை தடை செய்வதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
கண்டி மாநாட்டில் பொதுபலசேனா அமைப்பு 9 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ‘ஒரேநாடு– ஒரே இனம்– ஒரே சட்டம், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பு, தேசிய மரபுரிமையைப் பாதுகாத்தல், பலமான அபிவிருத்தியடைந்த நிலைபேறான பொருளாதாரம், தேசப்பற்று கல்வி, வீட்டு அடிப்படை வசதிகள், சனத் தொகை முகாமைத்துவம் மற்றும் சுகாதாரம் என்பனவே அத்தீர்மானங்கள், இத் தீர்மானங்கள் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டனவாகவே அமைந்துள்ளன.
பல்லின மக்கள் வாழும் ஜனநாயக நாட்டில் இனவாத சிந்தனைகளைக் கொண்டுள்ள ஒரு சிலரது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்க முடியாது. இவ்வாறான இனவாத கருத்துகளை வெளியிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதகுருமார் என்றாலும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சட்டத்தை அமுல் நடத்துவதற்கு அரச நிறுவனங்கள் உள்ளன. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. நீதிமன்றங்கள் உள்ளன.
இந்நிலையில் சட்டத்தை தங்கள் கைகளுக்கு கோருபவர்கள் தொடர்பில் அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
vidivelli