தேர்தல் பிரசாரத்துக்காகவே ஞானசார தேரர் விடுவிப்பு

ஜனாதிபதியை சாடுகிறார் தம்மரங்சி தேரர்

0 839

பொது­ஜன பெர­முன கட்­சி­யுடன் ஒன்­று­பட்­டி­ருக்கும் சிங்­கள பெளத்த மக்­களை பிள­வு­ப­டுத்­தவே ஞான­சார தேரர் சிங்­கள ராஜ்­ஜியம் அமைக்க ஒன்­று­ப­டு­மாறு அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். அத்­துடன் ஜனா­தி­பதி தனது தேர்தல் பிர­சா­ரத்­துக்கே அவரை சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்­தி­ருக்­கின்றார் என்று தேச விடு­தலை கட்­சியின் பிர­தித்­த­லைவர் கல­கம தம்­ம­ரங்சி தேரர் தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், ஞான­சார தேரர் சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்­து­வந்த நிலையில் அவரை விடு­விப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலங்க சும­தி­பா­லவே ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­யாக இருந்து செயற்­பட்டார். அதே­போன்று கண்­டியில் பொது­ப­ல­சேனா மாநாடு நடத்­தவும் திலங்க சும­தி­பா­லவே முன்­னின்று செயற்­பட்­டி­ருக்­கின்றார். அவரின் இந்த விட­யங்­களை நாங்கள் விமர்­சிக்­க­வில்லை. ஆனால் ஞான­சார தேரரை ஜனா­தி­ப­தியின் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு முன்­னி­லைப்­ப­டுத்­தவே இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்றார். அதற்­கா­கத்தான் அவரை சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

மேலும் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களில் விரக்­தி­யுற்­றி­ருக்கும் நாட்டு மக்கள் தற்­போது பொது­ஜன பெர­முன கட்­சி­யுடன் ஒன்­று­பட்டு வரு­கின்­றனர். குறிப்­பாக, சிங்­கள பெளத்த மக்கள் மஹிந்த ராஜபக் ஷ மீது நம்­பிக்­கை­வைத்து இணைந்து செயற்­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர். தேரர்­களும் எம்­மு­டனே இருக்­கின்­றனர். இதனை பிள­வு­ப­டுத்தி பெளத்­தர்­களை எம்­மி­லி­ருந்து தூர­மாக்­கவே தற்­போது பொது­ப­ல­சேனா முயற்­சிக்­கின்­றது. அதற்­கா­கவே கண்­டியில் ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­திய கூட்­டத்தில், சிங்­கள ராஜ்­ஜியம் ஒன்றை அமைக்க ஒன்­று­ப­டு­மாறு ஞான­சார தேரர் அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார்.

அத்­துடன் பெளத்த ராஜ்­ஜியம் அமைப்­ப­தற்கும் அதி­க­மான சிங்­க­ள­வர்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்­வ­தற்கும் நாங்கள் எதிர்ப்­பில்லை. என்­றாலும் சிங்­கள பெளத்­தர்கள் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­தி­ருக்கும் நிலையில் திடீ­ரென இவ்­வாறு அழைப்பு விடு­வது பெளத்­தர்­களை பிள­வு­ப­டுத்தும் முயற்­சி­யாகும். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலங்க சும­தி­பால இரண்டு பக்­கமும் காலை வைத்­துக்­கொண்டு செயற்­ப­டு­கின்றார். மேலும், கடந்த காலங்­களில் ஜாதிக ஹெல உறு­ம­யவும் பெளத்த கொடியை தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்டு பெளத்த ராஜ்ஜியம் அமைக்கப்போவதாக தெரிவித்துக்கொண்டே அரசியலுக்கு வந்தது. தற்போது பொதுபலசேனா என்ற பெயரில் அதனை முன்கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் சிங்கள மக்கள் இரவில் விழுந்த குழியில் பகலில் விழாமல் சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.

எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.