காத்தான்குடி பிரதேசத்தில் 20 பேருக்கு ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான தரவுகள் தம்மிடம் இருப்பதாகவும் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அதனை மையப்படுத்தி சி.ஐ.டி. தற்போது குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.
கடந்த ஜூலை 4 ஆம் திகதி நுகேகொடையில், ‘வஹாப் அடிப்படைவாதத்துக்கு எதிரான மக்கள் போராட்டம்’ எனும் தொனிப்பொருளில் கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இதன்போதே காத்தான்குடியில் ஷரீ ஆ சட்டத்தின் கீழ் 20 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கருத்து வெளியிட்டிருந்தார்.
தன்னிடம் அந்த தகவல்கள் இருப்பதாகவும், அவற்றை ஊடகங்களுக்கு வழங்க முடியாது எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந் நிலையிலேயே குறித்த பாரதூரமான குற்றச்சாட்டு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, அது குறித்து விசாரிக்க சி.ஐ.டி.யிக்கு எழுத்துமூலம் உத்தரவிட்டுள்ளார். இந் நிலையில் விசாரணைகளின் ஆரம்பமாக மிக விரைவில் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, காத்தான்குடியில் இருபது பேருக்கு ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ள கருத்தை காத்தான்குடியின் அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இந்த அபாண்டமான குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் கடந்த சனிக்கிழமை மாலை காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தன. இதில் கருத்து வெ ளியிட்ட காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் அப்பட்டமான பொய்யொன்றை கூறியுள்ளதாகவும் இதனை தேரர் நிரூபிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் காத்தான்குடி மீது ஓர் அபாண்டமான பொய்யை தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். அவரின் கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம். கடந்த 30 வருட கால யுத்தத்துக்கு முன்னரோ அல்லது யுத்தம் நிறைவடைந்த பின்னரோ, தேரர் கூறிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை என்பதை தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம்.
தேரர் குறிப்பிட்டிருப்பது போல வட்டி, விபசாரம் போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட அல்லது மார்க்க விரோதமாக செயற்பட்ட எவருக்குமே காத்தான்குடியில் மரண தண்டனை வழங்கப்படவில்லை.
இலங்கையின் அரசியல் யாப்புக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் மாற்றமாக ஒரு காலத்திலும் ஒருபோதும் காத்தான்குடி முஸ்லிம்களோ அல்லது இலங்கையிலுள்ள முஸ்லிம்களோ செயற்பட்ட வரலாறே கிடையாது என்பதையும் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றோம்.
பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் கூறிய கருத்து தொடர்பில் நாம் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இது தொடர்பாக சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
vidivelli