தமிழ் சமூகத்தின் தீர்வுத் திட்டத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு அவசியப்படுகின்ற சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு என்கின்ற பெரும் தேசத்தில் ஒரு மூலையில் இருக்கின்ற கல்முனை எனும் சிறு பிரதேசத்தை முஸ்லிம்களுக்கு விட்டுக் கொடுப்பதற்கு தமிழ் தரப்பு தயாரில்லையென்றால் முஸ்லிம் சமூகம் வேறு திசையில் பயணிக்க நேரிடும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட 1100 சமுர்த்தி குடும்பத்தினருக்கு உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் நடைபெற்றபோது கெளரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
அங்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில், “ஸஹ்ரான் தலைமையில் சிறிய குழுவினர் செய்த தாக்குதலின் பின்னராக எமது முஸ்லிம் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். எமது பெண்கள் அபாயா அணிவதற்கும் தடையேற்படுத்தப்பட்டது. ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி, அபாயா விடயத்தில் வெற்றி பெற்றோம்.
அமைச்சர் றிசாத் மற்றும் முஸ்லிம் ஆளுநர்களை பதவி விலகக்கோரி கண்டியில் அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தியபோது, அவ்விடயம் எமது சமூகத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நான் விடுத்த கோரிக்கையின் பேரில் எமது ஒன்பது அமைச்சர்களும் இராஜினாமா செய்து, சமூகத்தை பாதுகாத்தோம்.
அதன் பின்னரே முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் முன்வருகிறது.
இன்னும் சில மாதங்களில் எமது நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் எமது கல்முனை நகரின் இருப்பு பாரிய சவாலாக மாறியிருப்பது குறித்து எல்லோரும் சிந்திக்க வேண்டியுள்ளது.
கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த எம்.எஸ்.காரியப்பர், எம்.சி.அஹமத், ஏ.ஆர்.மன்சூர், தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றோர் கல்முனையில் அரச காரியாலயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை ஏற்படுத்தி அதனை கிழக்கின் ஒரு முன்னணி நகரமாக செதுக்கி, உருவாக்கினார்கள். ஆனால் இன்று தமிழ் – முஸ்லிம் உறவை சீரழித்து கல்முனையை கூறுபோடுவதற்கு மூன்றாம் தரப்பினர் மூக்கை நுழைத்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்காக நாமும் சத்தியாக்கிரகம் ஒன்றை மேற்கொணடு, அரசாங்கத்துக்கு ஒரு செய்தியைக் கூறியுள்ளோம். கல்முனையை பிரிப்பதாக இருந்தால் ஆங்கிலயரின் ஆட்சிக் காலம் தொட்டு 1987 ஆம் ஆண்டு வரை இருந்தது போன்ற எல்லைகளைக கொண்டு பிரியுங்கள் என்று வலியுறுத்தியுள்ளோம். இதில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருமலை என்று ஏழு மாவட்டக் கச்சேரிகளும் நகரங்களும் தமிழ் மக்களுக்கு இருக்கிறன. ஆனால் கல்முனை நகரம் மாத்திரமே முஸ்லிம்களுக்கு இருக்கிறது. கல்முனை என்பது முஸ்லிம்களின் தாயகம், அதை எவரும் கபளீகரம் செய்வதற்கு இடமளிக்க மாட்டோம்.
தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் மழுங்கடிக்கப்படுவதாகவும் அரசாங்கம் ஏமாற்றுவதாகவும் சம்பந்தன் ஐயா சில தினங்களுக்கு
முன்னர் தழுதழுத்த குரலில் தனது வேதனையை வெளியிட்டுள்ளார். அதேநேரம் தீர்வுத் திட்டத்திற்காக என்ன விலை கொடுக்கவும் தமிழ் மக்கள் தயாராகவிருக்கிறார்கள் என்றும் சம்பந்தள் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தீர்வுத் திட்டத்திற்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை புரிந்து கொள்ளாமல் தமிழ் தலைமைகள் சிலர் கல்முனை விடயத்தில் கடும்போக்குடன் நடந்து கொள்வது எமக்கு கவலையளிக்கிறது.
தமிழ் மக்களின் பல தசாப்த கால போராட்டம் தோற்றுவிடக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.
அவர்களது அரசியல் தீர்வுத் திட்டத்திற்காக இரு சமூகங்களும் கைகோர்த்துச் செயற்பட வேண்டியுள்ளது. அதற்காக இரு தரப்பினரும் பேசி உடன்பாட்டுக்கு வர வேண்டியுள்ளது. இதனை சீர்குலைப்பதற்காகவே மூன்றாவது சக்தி கல்முனை விடயத்தில் மூக்கை நுழைத்துள்ளது என்பதை தமிழ் சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு கையால் தட்டி ஓசை வராது, இரு கைகளும் இணைந்து தட்டினால்தான் ஓசை வரும் என்பது போலவே தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க வாய்ப்பேற்படும் என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து செயற்பட முன்வர வேண்டும். இல்லையேல் முஸ்லிம்கள் வேறு திசையில் பயணிக்க நேரிடும் என்பதை வெளிப்படையாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.
vidivelli