இலங்கைக்கு இவ்வருடம் மேலதிகமாகக் கிடைக்கப்பெற்றுள்ள 500 ஹஜ் கோட்டாவின் கீழ் ஹஜ் யாத்திரிகர்களின் தெரிவுகளுக்கு அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கியுள்ளன.
ஏற்கனவே 3,500 ஹஜ் கோட்டாவின் கீழ் ஹஜ் கடமையை மேற்கொள்ள யாத்திரிகளின் பயண ஏற்பாடுகள் அனைத்தும் முற்றுப்பெற்றுள்ள நிலையில் 500 மேலதிக ஹஜ் கோட்டாவுக்கான தெரிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஹஜ் கடமைக்காக தங்களைப் பதிவு செய்து 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பு திணைக்களத்தினால் இவ்வருட ஹஜ் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ள தாம் விரும்பும் முகவர் ஊடாக பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, சப் ஏஜன்ட்கள் மூலமாகவே திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்றிராத முகவர் நிலையங்கள் மூலமாகவோ எவ்வித ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமெனவும் முற்பணம் செலுத்த வேண்டாமெனவும் அரச ஹஜ் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறான ஏற்பாடுகள் மூலம் ஏமாற்றப்படும் விண்ணபப்தாரிகள் தொடர்பில் திணைக்களம் பொறுப்பேற்க மாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli