இலங்கை இயற்கை வளங்களை நிறைவாகக் கொண்ட ஓர் அழகிய நாடு. ஒரு சிறிய நாடாக இருந்த போதும் பௌத்தம், ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற நான்கு மதங்களைக் கொண்ட நாடு அது. அதனது இந்தப் பன்மைத்துவம் பலவீனமாக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பும் பலமாகவே கொள்ளப்பட வேண்டும்.
உண்மையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பது நல்லதொரு அழகான கோஷம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நாட்டின் அனைத்து சமூகங்களும் இணக்கப்பாட்டுடன் வாழ்வதில் அதற்கு ஒரு பங்களிப்பு இருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. இலங்கையில் முஸ்லிம் சமூகமும் ஏனைய சமூகங்களும் இவ்வாறானதொரு ஒருமைப்பாட்டுக்கு வரவேண்டும் என்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பாகும்.
எனினும், ஒவ்வொரு சமூகத்திற்கும் சில விஷேட கலாசார, மார்க்க ஒழுங்குகள் உள்ளன என்பதையும் யாரும் மறுப்பதில்லை. பல சமூகங்களும் நாடுகளும் இந்த உண்மையை ஏற்று அங்கீகரிக்கின்றன. இந்த விஷேட கலாசார மார்க்க ஒழுங்குகள் தனிமனித வாழ்வோடு சம்பந்தப்படுகின்றனவேயன்றி பொது வாழ்வோடு அவை சம்பந்தப்படுவதில்லை என்பது இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியிலிருந்தே பல்வேறு விஷேட சட்ட நகல்கள் நோக்கப்பட வேண்டும். இந்த வகையில் கண்டிய சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் என்ற சில விஷேட சட்ட ஒழுங்குகள் இலங்கையில் காணப்படுகின்றன. இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் அவர்கள் குற்றவியல் சட்டம், வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் போன்ற பல்வேறு பொதுச் சட்டங்களின் போது ஏனைய அனைத்து சமூகங்கள் போன்றே அவற்றை ஏற்று, கட்டுப்பட்டே வாழ்கின்றனர். அவர்கள் விஷேடமாகப் பெற்றிருக்கும் சட்ட ஒழுங்கு விவாகம், விவாகரத்து என்ற சட்டத்தின் ஒரு சிறிய பகுதியேயாகும்.
நிறைய நாடுகள் சமூகங்களின் விஷேட மத, கலாசார ஒழுங்குகளைக் கவனத்திற் கொண்டு தனிச் சட்டங்களை ஆக்கிக் கொடுத்துள்ளன. “தனியார் சட்ட ஒழுங்கிற்கேற்ப கிறிஸ்தவர்களின் உரிமைகளும் கடமைகளும்” என்ற நூலை ஆக்கிய கலாநிதி பஸ்ஸாம் ஷஹாதீத் என்ற கிறிஸ்தவ ஆய்வாளரின் அந்நூல், அறபுலகின் கிறிஸ்தவ சட்ட ஒழுங்குகளை ஆராய்கிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கென தனியான முஸ்லிம் தனியார் சட்ட ஒழுங்கு காணப்படுகிறது. அவ்வாறே பிலிப்பைன்ஸிலும் முஸ்லிம் தனியார் சட்ட ஒழுங்குக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக 1973 பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புக் கூறுகிறது. இந்நிலையில் இலங்கையும் அவ்வாறானதொரு சட்ட ஒழுங்கைக் கொண்டிருப்பது ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற கருத்திற்கு எதிரானது எனக் கொள்ளத் தேவையில்லை. அது அடுத்த சமூகங்களின் தனித்துவங்களை அனுமதித்த சிறியதொரு விதிவிலக்கு என்றே கொள்ளப்பட வேண்டும்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் சில பகுதிகளில் சில விஷேடமான, பொதுச் சட்டத்தை விட்டு வித்தியாசமான ஒழுங்கை கொண்டிருப்பதனாலேயே ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற கருத்தை விட்டு சிறியதொரு விதிவிலக்கைப் பெறுவது அவசியமாகிறது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தைப் பொறுத்த வரையிலும் கூட சில விடயங்கள் பொதுச் சட்டத்துடன் உடன்படும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். உதாரணமாக திருமண வயதெல்லை நிர்ணயத்தைக் குறிப்பிடலாம். அது 18 வயதாக அமைய வேண்டுமென பொதுச் சட்டத்தோடு உடன்படும் வகையில், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை பரிந்துரைக்கவென நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. எனினும் பலதார மணம் என்ற விடயத்தில் அது வித்தியாசப்படுகிறது. அங்கும் அவதானிக்கத்தக்க விடயம், அதனை அல்குர்ஆன் பல ஷரத்துக்களுடன் இறுக்கமாகவே அனுமதிக்கிறது. அத்தோடு திருமண ஒப்பந்தத்தின் போது மனைவி “தனக்குப் புறம்பாக இன்னொரு பெண்ணைத் திருமணம் முடிக்கக் கூடாது” என நிபந்தனை இடலாம் என்பது ஹன்பலி மத்ஹபின் கருத்தாகும். சிரிய நாட்டு தனியார் சட்டம் இந்த அபிப்பிராயத்தை ஏற்று சட்ட ஒழுங்குக்கு கொண்டு வந்துள்ளது.
பல்லின சமூக ஒழுங்கொன்றில் அனைத்து சமூகங்களதும் கலாசார மத தனித்துவங்களை அங்கீகரிப்பதும், சகித்துக் கொள்வதும் நாட்டின் ஸ்திரமான, அமைதியான வாழ்வுக்கு அவசியமானதாகும். அது நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அனைத்து சமூகங்களும் தோளோடு தோள் நின்று உழைக்கும் மனநிலைக்கும் தூண்டுதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
முஸ்லிம் தனியார் சட்டத்தின் விவாகரத்துப் பகுதியில் சில தனியான போக்குகள் உள்ளன. அது மார்க்க வழிகாட்டலோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட பகுதியாகும். அப்பகுதி நாட்டின் பொது வாழ்வைப் பாதிப்பதோ அடுத்த சமூகங்கள் மீது மோசமான தாக்கத்தை விளைப்பதோ அல்ல என்பதே உண்மையாகும்.
ஒரு சமூகத்தின் ஏதாவதொரு, மத, கலாசார ஒழுங்கு அடுத்த சமூகத்தின் மீது மோசமான தாக்கத்தை விளைவிக்குமாயின் அல்லது ஏதோ ஒரு காரணத்தால் அதனைச் சகிக்க முடியாது என அடுத்த ஏதாவதொரு சமூகம் கண்டால் அந்நிலையில் அதனைத் தீர்க்க வன்முறைக்கோ அதிகாரத் திணிப்புக்கோ செல்லாது அழகானதொரு நீண்ட கலந்துரையாடலுக்குச் செல்வதே நாகரிகமான, பண்பாடான வழிமுறையாக அமையும்.!!
இவ்வழிமுறை ஓர் அறிவுப் பகிர்வாகவும் நாகரிகங்களுக்கிடையிலான கலந்துரையாடலாகவும் அமைந்து, நாட்டை சர்வதேச ரீதியாக முன்மாதிரி நாடாக முன்வைக்கும் என்பதே உண்மையாகும்.
vidivelli