சட்டவிரோத கைதுகளை உடன் நிறுத்துங்கள்
பதில் பொலிஸ்மா அதிபருக்கு ம.உ. ஆணைக்குழு கடிதம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அண்மைக்காலமாக பல சட்டவிரோத கைதுகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கலாசாரம் பற்றிய தவறான புரிதல்கள் காரணமாகவும் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டதன் காரணமாகவும் இவ்வாறான கைதுகள் இடம்பெற்றுள்ளன.
எனவே கைது செய்யப்படும்போது அந்தக் கைதுக்கான உறுதியான அத்தாட்சி இருக்க வேண்டும். அப்போதே அது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க முடியும். இவ்வாறல்லாது கைதுகள் இடம்பெறக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபரைக் கோரியுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் என்.டி.உடாகம பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘நியாயமற்ற கைதுகள்’ என்ற தலைப்பில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இவ்வாறான கைதுகளுக்கு உதாரணமாக தனது ஆடையில் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்ததால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரபு மொழியிலான நூலை வைத்திருந்தவர் அதில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்ளாது கைது செய்யப்பட்டுள்ளார். மற்றும் பொது மக்களின் அழுத்தங்கள் காரணமாகவும் கைதுகள் இடம்பெற்றுள்ளன. நச்சுத்தன்மை உள்ளடங்கிய ஆடையை விற்பனை செய்வதாக சிலர் அச்சமுற்றதால் ஒரு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு இவை தொடர்பில் ஆராய்ந்ததில் கைதுகளின் பின்பே பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை அறியக் கிடைத்துள்ளது.
நியாயமற்ற மற்றும் சட்டவிரோத கைதுகளைத் தவிர்ப்பதற்காக ஆணைக்குழு பின்வரும் வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது.
கலாசார ரீதியான கைதுகளின்போது சமயக் குறியீடுகள் மற்றும் எழுதப்பட்டுள்ள அரபு மொழியிலான வாசகங்கள் தொடர்பில் அதற்கான நிபுணத்துவம் பெற்றோரின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இரசாயன திரவப் பொருட்களை இனங்காணுவதற்கும், கணினி பதிவுகளின் கோவைகள் அல்லது வீடியோ பதிவுகள் என்பனவற்றிற்கும் அவை தொடர்பான நிபுணர்களின் கருத்துகள் பெறப்படவேண்டும்.
சரியான நம்பகத்தன்மையான தகவல்களின்படி, பகுப்பாய்வாளர்களின் கருத்துகளின் படியே கைதுகள் இடம்பெறவேண்டும். நியாயமான சந்தேகமின்றி கைதுகள் இடம்பெறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்களின் பின்பு பொலிஸ் திணைக்களம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களை இனங் காணுவதற்கான விசாரணைகள் குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
பொலிஸ் உத்தியோகத் தர்களுக்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத் தல்களை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli