வன்முறைகளை கட்டுப்படுத்தி முஸ்லிம்களை பாதுகாக்கவும்
தன்னிச்சையான கைதுகளையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள்; அரசுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து
இலங்கை அரசாங்கம் தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை செயல்களைத் தடுத்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பாகுபாடு காண்பித்தல் என்பவற்றை முடிவிற்குக் கொண்டுவரும் வகையில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டியது மிக அவசியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இவ்விடயத்தை வலியுறுத்தி மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அதன் முழு விபரம் வருமாறு:
சுமார் 250 இற்கும் அதிகமானோரைப் பலியெடுத்த உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் பௌத்த பேரினவாதிகள் முஸ்லிம் சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளை மீறி செயற்படுவதுடன், பல்வேறு விதமான வன்முறைகளுக்கும் முஸ்லிம்கள் இலக்காகி வருகின்றனர். சில பௌத்த மதகுருமார் மற்றும் பலம்பொருந்திய பேரினவாதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக ஏவி விடப்படும் வன்முறைத் தாக்குதல்கள், வெறுப்புப் பேச்சுக்கள் என்பவற்றை அரசியல்வாதிகளும், உரிய அதிகாரிகளும் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவர வேண்டும்.
தமது பிரஜைகளைப் பாதுகாப்பதும், உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் இந்தக் கொடூர தாக்குதல்களுக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் தண்டிக்கக் கூடாது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பாகுபாடு காண்பித்தல் என்பவற்றை முடிவிற்குக் கொண்டுவரும் வகையில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டியது மிக அவசியமானதாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் நாயகம் மீனாக் ஷி கங்குலி வலியுறுத்தியிருக்கிறார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பின்னர் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டங்கள் என்பவற்றின் கீழ் பொலிஸாரால் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரின் கருத்துப்படி இவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குக் கீழேயே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வாக்களித்திருந்தது. தமது தரப்பினர் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபட்டுள்ளமைக்கு முறையான ஆதாரங்கள் எவையுமின்றி அவ்வப்போது கைது செய்யப்பட்டதாக சட்டத்தரணிகள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். தேடுதல்களின் போது புனித அல்-குர்ஆன், அரபு நூல்கள் போன்றவற்றைத் தம்வசம் வைத்திருந்தமைக்காகவும் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இலங்கையின் மூத்த பௌத்த மதகுருவான வரக்காகொட ஞானரதன தேரர் கல்லெறிந்து முஸ்லிம்களைக் கொல்லுதல், கருத்தடை மாத்திரைகளை உணவில் கலப்பதால் முஸ்லிம் உணவகங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் போன்ற கருத்துக்களை பௌத்தர்கள் மத்தியில் வெளியிட்டார். அதேபோன்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுடன் நீண்டகாலமாகத் தொடர்புபட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.
மேலும் தாக்குதல்களைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்த விடயங்களில் ஒன்றாக பொது இடங்களில் முகத்தை மறைக்கும் விதமாக ஆடையணிவது தடை செய்யப்பட்டது. இதனையடுத்து அரசாங்க அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் ஆடை தொடர்பில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் எம்மிடம் விபரித்தார். தமது கண்ணியம் தொடர்ந்தும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எவ்வித பக்கச்சார்பும் அற்றவகையில் அனைத்து இலங்கைப் பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வாக்குறுதியளித்திருக்கும் வகையில் மனித உரிமைகள் பாதுகாப்பு, நிலைமாறுகால நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்த வேண்டுமாயின் நாட்டிற்குள் நீடிக்கும் வன்செயல்களை அரசாங்கம் முடிவிற்குக் கொண்டுவருவது மிக அவசியமானதாகும்.
vidivelli