ஒருவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க முடியாது
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் நல்லிணக்கத்தினையும், இனங்களுக்கிடையேயான சகவாழ்வினையும் ஏற்படுத்த வேண்டுமாயின் 2015 ஆம் ஆண்டில் நாங்கள் முன்வைத்த நிலைமாறுகால நீதி, அரசியலமைப்பு திருத்தம், நல்லிணக்க செயற்பாடுகள் ஆகியன தொடர்பில் மீண்டும் உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும் அரசாங்கத்தின் நல்லிணக்க செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
‘த கட்டுமரன்’ இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு குறித்து நேர்காணலில் விரிவாகக் கருத்துத் தெரிவித்த அவர் இலங்கையில் வாழும் எந்த இனமாயினும் சரி அந்த இனங்களின் செயற்பாடுகளானது அடிப்படை மனிதஉரிமைகளை மீறாத வகையில் இருக்கும் பட்சத்தில்தான் நல்லிணக்கமும் சகவாழ்வும் சாத்தியப்படும் என்று சுட்டிக் காட்டினார்.
நேர்காணல்:
பிரியதர்ஷினி சிவராஜா
உயிர்த்த ஞாயிறு, ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின்பு இலங்கையில் ஒரு பதற்ற நிலையும், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையும் காணப்படுகின்றது. இந்த நிலைமையானது கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று எண்ணவைக்கிறது. உங்கள் கருத்து என்ன?
மக்களிடம் நாங்கள் அனைவரும் சென்று பேச முன்னர் நீங்கள் அனைவரும் இணைந்து மக்களிடம் சென்று யுத்தம் ஏன் வந்தது என்பது பற்றி பேசுங்கள் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறினோம். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக உடன்பட்ட போதிலும் நிறைவேற்றவில்லை. அதனால் எனது கருத்துப்படி நிலைமாறுகால நீதி என்பது சரியான இடத்தினை நோக்கி நகர்த்தப்படவில்லை. தேவையான இடத்திற்கு அது வழங்கப்படவும் இல்லை. தேவையான நேரத்தில் அதனை வழங்கவும் இல்லை. இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளிலும் பல்வேறு குறைபாடுகள் இருந்தன.
ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின்னர் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளை காரணம் காட்டி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்துகின்றன.
இங்கு முக்கியத்துவம் பெறும் மற்றுமொரு விடயம் இலங்கையில் நாம் யார் என்ற கேள்வியாகும். நாம் ஏன் இணைந்து வாழ வேண்டும் என்ற விடயத்தைப் பற்றியோ அதன் முக்கியத்துவத்தைப் பற்றியோ யாரும் கவனம் செலுத்தவில்லை. அது பற்றி மக்களுடன் பேசவும் இல்லை. அறிவுறுத்தவும் இல்லை. எல்லோரும் One Nation One Country என்று கூறுகின்றார்கள். நாட்டில் 70 சதவீதத்திற்கு அதிகமானோர் சிங்கள பௌத்தர்களாக உள்ள நிலையில் One Nation எனும் போது இதர இனங்களைச் சேர்ந்த மக்கள் சிங்கள பௌத்த வரையறைகளுக்குள் வாழ வேண்டுமா? இல்லை. இங்கு வாழும் அனைத்து இன மக்களும் தத்தமது அடையாளங்களைப் பேணிக் கொண்டு வாழ வேண்டும். அதுவே இலங்கைக்கு அவசியம்.
இந்த அடையாளங்களைப் பேணிக்கொண்டு வாழவேண்டும் என்பதில் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் பற்றியும், முஸ்லிம் பெண்களின் ஆடைகள் பற்றியும் பரவலாகப் பேசப்படுகின்றது. இவைதான் முஸ்லிம் விரோத நகர்வுகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அவர்கள் இலங்கைக்கு ஏற்ற விதத்தில் வாழ வேண்டும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
மத்ராசாக்கள் பற்றியும் கதைக்கப்படுகின்றது அல்லவா? கல்வி அமைச்சின் கீழ் அவற்றை கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் கூறுகின்றது. அதற்கு முஸ்லிம் சமூகத்தினரும் அவர்களுக்குள் கலந்துபேசி தீர்மானத்திற்குவர உடன்பட்டுள்ளார்கள். புர்கா பிரச்சினையை எடுத்துக் கொண்டால் அரசாங்கத்தினால் ஆடைகள் அணிவது தொடர்பில் வற்புறுத்தல்களை மேற்கொள்ள முடியாது. அதனை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். நான் எவ்வாறான ஆடையை அணிய வேண்டும் என்று பிறர் எனக்கு ஆணையிட முடியாது. ஆனால் சிற்சில பாதுகாப்பு காரணங்களுக்காக சில மாற்றங்களை ஆடைகள் விடயத்தில் செய்ய முடியும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்புக் காரணங்களுக்கு என்று கூறிக் கொண்டு ஆடைகள் விடயத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது.
13 வயதில் உள்ள சிறுமியை முஸ்லிம் ஆண்கள் விவாகம் செய்ய முடியும். இவ்வாறான வழக்கங்கள் அவர்களின் சமூகத்தில் உள்ளன. இங்கு நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில் அடிப்படை மனித உரிமை என்பது இந்த விவகாரத்தில் மீறப்படுகின்றதா?இல்லையா? என்பதாகும். இதனைப் பற்றி அனைத்து தரப்புகளும் கலந்து பேச வேண்டும். புர்கா பிரச்சினையை எடுத்துக் கொண்டால் இங்கு பாதுகாப்பு காரணத்திற்காக மட்டும் முகத்தை மூட வேண்டாம் என்று கூறப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த வகையில் நாங்கள் யார்? இந்த நாடு எங்கே போய் கொண்டிருக்கின்றது என்றே கேட்க தோன்றுகின்றது.
இணக்கபூர்வமான செயற்பாடுகளின் இறுதியில் அவரவர் இன அடையாளங்களும் தனித்துவங்களும் பாதுகாக்கப்படும் நிலை உருவாகின்றது. இதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. இதுவே நாட்டுக்கு பயன்மிக்கதாக அமையும் எனலாம்.
முஸ்லிம் மக்கள் இலங்கையர்களாக வாழ்வதனை விட அரேபியர்களாக வாழவே முன்னுரிமை வழங்குகின்றார்கள் என்றும் இதனால் தான் நாட்டின் இனமுறுகல் நிலை ஏற்படுகின்றது என்றும் பௌத்த தேரர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
முஸ்லிம்களும், தமிழர்களும் இலங்கையர்கள் போன்று வாழ வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றதென்றால், பெரும்பான்மைக்கு அடிபணிந்து அவர்களின் வரையறைகளுக்குள் உட்பட்டு வாழ்வதையா குறிக்கிறது? என்று நான் கேட்க விரும்புகின்றேன். முஸ்லிம்களும், தமிழர்களும் இலங்கையர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தேசிய கீதம் இசைக்கப்படும் போது இவர்களில் எவராவது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருக்கின்றனரா? பௌத்த மத தேரர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர் அல்லவா? அப்படியானால் இலங்கையர்களாக வாழ்வது என்பதன் சரியான அர்த்தம் என்ன? அது பற்றித்தான் நாம் ஆராய்தல் வேண்டும்.
உங்கள் கருத்தின்படி இலங்கையர்களாக வாழ்வது என்பது எவ்வாறானது?
இலங்கை பல்லின மக்கள் சமூகங்கள் வாழும் ஓர் நாடு. எண்ணிக்கை அடிப்படையில் சிங்கள பௌத்தர்கள் அதிகமாக வாழ்கின்றனர். எனினும் ஒவ்வொரு இனத்தவர்களும் தத்தமது அடையாளங்களுடன் வாழும் உரிமையைப் பெற்றுள்ளனர். அதேநேரம் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தம்மை இலங்கையர்கள் என்று அழைத்துக்கொள்ளும் சுதந்திரத்தையும் கொண்டிருக்கின்றனர். அவர்களின் செயற்பாடுகள் எதுவாயினும் அது அடிப்படை மனித உரிமைகளை மீறாததாக இருக்க வேண்டும். இந்த வகையில் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம், கண்டிய சட்டம் மற்றும் தேசவழமை சட்டம் ஆகிய அனைத்தையும் நாம் மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டியுள்ளது.
அடிப்படை மனித உரிமைகளை மீறும் இவ்வாறான விடயங்கள் அனைத்தையும் பற்றி யாவரும் ஒரே மேசையில் அமர்ந்து கலந்துரையாட வேண்டும். இலங்கையில் சிங்கள சமூகமும், தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஒன்றுப்படுகின்றனர். முறுகல்களின் போது இது பொதுவான விடயமாகவே உள்ளது. இந்த நிலையில் நாம் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதற்காக நாம் மீண்டும் 2015ஆம் நிகழ்ச்சித் திட்டங்களை நோக்கி செல்ல வேண்டும் என்று நான் கருதுகின்றேன். நல்லிணக்க செயற்பாடுகள், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், நிலைமாறுகால நீதி என்பன பற்றி மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இது சாத்தியப்படும் என்று கருதுகின்றீர்களா?
சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். தற்போது ஜனாதிபதித் தேர்தலை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் எனது கருத்துப்படி ஜனாதிபதித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. ஜனாதிபதி பதவி என்பது முக்கியத்துவம் பெற்றதல்ல. 19 ஆம் திருத்தத்தின் பின் அவரின் அதிகாரங்கள் இல்லாதொழிக்கப்பட்டு விட்டன. இதனால் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற பெயரளவிலான ஜனாதிபதியே நாட்டுக்குத் தேவை. எனது கருத்துப்படி ஜே.வி.பியின் 20வது திருத்தத்தினை மேற்கொண்டு முற்று முழுதாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும். பெருமளவு பணத்தினை விரயம் செய்து அரசியலமைப்பு மாற்றத்தினை மேற்கொள்வதனை விட இது மிகவும் இலகுவான காரியமாகும். இதன்மூலம் பலம் வாய்ந்த பாராளுமன்றத்தினை உருவாக்கி நாட்டுக்கு உகந்த பல்வேறு நல்லிணக்க திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
நாட்டில் நல்லிணக்கத்தினையும் இனங்களுக்கிடையே சகவாழ்வினையும் ஏற்படுத்தும் போது சிங்கள பௌத்தவாதம் என்பது மேலோங்கும் நிலையை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான சவால் முன்னிலையில் நல்லிணக்கம் என்பது இலங்கையில் எவ்வாறு சாத்தியமாகும் என்று கருதுகின்றீர்கள்?
இங்கு சிங்கள மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட வேண்டும். இலங்கை அனைத்து இன மக்களினதும் நாடு என்று கூற அவர்கள் முன்வரவேண்டும். பௌத்த மதம் என்பது ஒரு தத்துவமாகும். இலங்கையில் நிலவுகின்ற பௌத்த மத செயற்பாடுகளுக்கும், உண்மையான பௌத்த தத்துவத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் இந்த மனமாற்றம் ஏற்படாத வரை பிரச்சினைகள் ஒருபோதும் தீரப்போவதும் இல்லை. இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ஞானசார போன்ற தேரர்கள் இனவாதத்தினைப் பரப்பும் போதும் ஓர் இனத்தினை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை முன்வைக்கின்ற போதும் அவ்வாறானவர்களை கைது செய்யாமல் இருக்க முடியுமா? ஒரு நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமாக அமுலாக வேண்டும். பௌத்த மதத்தின் பெயரால் தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இது ஜனநாயகம் அல்லவே. ஞானசார தேரருக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பு அது.!
நீதிமன்றத்தினை அவமதித்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இவ்விடயத்தில் சரியான தீர்ப்பினை அளித்து அவருக்கு சிறைத்தண்டனை வழங்கியது. இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிடும் போது அதுவும் அரசியலமைப்பினை மீறும் ஒரு செயலாகும். பௌத்த மதத்திற்கு முதலிடம் என்று கூறுவதன் மூலம் பௌத்த தேரர்கள் எதனையும் செய்யலாம் என்று அர்த்தப்படுத்தப்படுகின்றது. தற்போதைய சூழலில் ஞானசார தேரரை ஏன் விடுதலை செய்ய வேண்டும்? அதற்கான அவசியமும் என்ன? இதன் மூலம் ஜனாதிபதி சிறிசேன ராஜபக்சவுக்கு சவால் ஒன்றை வெளிப்படுத்த முனைந்துள்ளார். மருத்துவ சிகிச்சையில் இருக்கும் கோட்டாபயவுக்கு எதுவும் நடந்தால் தன்னால் ஜனாதிபதி வேட்பாளராக முடியும் என்று அவர் இந்த செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்கு ஆலோசனைகளைப் பெறுகின்றாரோ தெரியவில்லை. அரசியலமைப்பினை இரண்டு தடவைகள் அவர் மீறியிருக்கின்றார். ஜனாதிபதி இப்பதவியிலிருந்து விலகும் போது அவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு நீங்கள் உட்பட சிவில் சமூகத்தினரின் ஆதரவும் அனுசரணையும் மிக அதிகமாக இருந்தன. இந்த வகையில் நல்லிணக்க செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தோல்வி என்பது உங்கள் சார்ந்த தரப்புகளினதும் தோல்வியாகும். இந்த தோல்விக்கான காரணங்கள் எவை என்று கருதுகின்றீர்கள்?
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து செயற்பட்டது உண்மை தான். நல்லாட்சி அரசாங்கத்தினூடாக சில சாதகமான மக்களுக்கு பயன் தரும் மாற்றங்களைக் கொண்டு வரவும் எங்களால் முடிந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அவ்வாறு நிறைவேற்ற முடிந்த சாதகமான அம்சங்களாக தகவல் அறியும் உரிமைச் சட்டம், 19வது திருத்தம், பல பொருளாதார சீர்திருத்தங்கள் என்பனவற்றை குறிப்பிட முடியும். ஆனால் இவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்தி விளக்கமளிக்கும் தொடர்பாடல் பொறிமுறை ஒன்றிருக்கவில்லை. இதனால் மக்களிடம் இந்த செயற்பாடுகள் சரியான முறையில் சென்றடையவில்லை. அதனால் அவர்களினால் நல்ல மாற்றங்களை உணர முடியவில்லை.
அரசியல் கட்சிகள் போன்று சிவில் சமூகக் குழுக்களிலும் பலதரப்பட்ட முரண் நிலைகள் உள்ளன. எனினும் மைத்திரிபால ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றதிகார ஜனாதிபதி நீக்கம், தகவல் அறியும் உரிமை சட்டம் என்பன பற்றி பேசினார். ஆனால் சிவில் சமூகம் என்ற வகையில் இந்த மறுசீரமைப்பு பணிகள் அனைத்தையும் பற்றி நாம் கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். இதன்படி எனது கருத்து என்னவெனில் சிவில் சமூகக் குழுக்கள் நிகழ்ச்சி நிரலை தயாரிக்க அதனை அமுல்படுத்தும் பணிகளை அரசியற் கட்சிகளே முன்னெடுக்க வேண்டும். சிவில் சமூகத்தினரால் மேடைகளை மட்டுமே அமைத்துத் தர முடியும். 2014ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு காலப்பகுதியில் நாங்கள் இந்த நிகழ்ச்சி நிரலை முன்வைத்த வேளை இலங்கையில் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்று பலரும் கைக்கொட்டி சிரித்தனர். ஆனால் இவற்றில் சில பணிகளையாவது எங்களால் நிறைவேற்ற முடிந்தது. மற்றைய பெரும் பிரச்சினை ரணில்- சிறிசேன முறுகல் நிலையாகும்.
நல்லிணக்கம் என்பது முற்றிலும் குழம்பிப் போயிருக்கின்ற இலங்கையில் எதிர்காலத்தில் நல்லிணக்கம், இனங்களுக்கிடையே சகவாழ்வு என்ற விடயங்களை எப்படி கையாளப் போகின்றீர்கள்?
முதலில் மக்களுக்கு சிறந்த முறையில் இவற்றை பற்றி தெளிவுபடுத்த வேண்டும். ஏன் எமது நாட்டிற்கு நல்லிணக்கம் அவசியம்? எவ்வாறு இதனை வேறு நாடுகளில் செய்திருக்கின்றார்கள்? என்பது பற்றியெலாம் நாம் மக்களுடன் பேச வேண்டும்.
எனது கண்ணோட்டத்தின்படி இதற்கு குறுகிய கால தீர்வில்லை. நீண்ட கால செயற்பாடுகளான நாட்டின் கல்வித்துறையில் மாற்றம் செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளன. இதன்படி இன்றோ நாளையோ நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்திவிட முடியாது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தினை முன்னிலைப்படுத்தி அதற்கு தலைமை தாங்கி செயற்படுமாயின் அந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வெண்தாமரை இயக்கம் போன்ற திட்டங்களே தற்போது எமக்கு தேவை.
நல்லிணக்க செயலணி குறுகிய காலத்தில் அமுல்படுத்தக் கூடிய நல்லிணக்க செயற்பாடுகள் பற்றிய பரிந்துரைகளையும் நீங்கள் முன்வைத்திருந்தீர்கள். அந்த பரிந்துரைகள் ஏதேனும் அமுல்படுத்தப்பட்டனவா?
நாங்கள் 50 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையினை அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தோம். ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அதில் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தினை பற்றியும் தெரிவித்திருந்தோம். ஆகக்குறைந்தது ஒரு சர்வதேச நீதிபதியாவது ஒவ்வொரு வழக்கின் விசாரணைகளின் போதும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம். அப்பொழுது தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை வரும். நாம் அவர்களிடம் சென்று பேசும் போது நம்பிக்கையற்றிருக்கும் எங்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் எதனையாவது செய்து காட்டுங்கள் என்று கூறியிருந்தனர். இதன்படி ஒரு வழக்கிற்கு ஆகக் குறைந்தது ஒரு சர்வதேச நீதிபதி என்ற அடிப்படையில் முதலில் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பிய பின்னர் அவர்களை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியும். ஆனால் இந்த பரிந்துரையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நாட்டின் இறைமைக்கு பாதிப்பு என்றும், படையினரைக் காட்டிக் கொடுக்க முடியாது என்றும் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆதலால் உத்தியோகபூர்வமாக எமது பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்பொழுது நிலைமாறுகால நீதியின் கீழ் எங்களுக்கு காணாமல் போனோர் அலுவலகமும், இழப்பீட்டுக்கான அலுவலகமும் (Office of reparations), உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் மட்டுமே உள்ளது.
காணாமல் போனோர் அலுவலகம் சரியான முறையில் இயங்குவதற்கு சில உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்துதல், ஆட்களை பயிற்றுவிக்கும் பணிகளை மேற்கொள்ளல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மற்றும் காணாமல் போனோர் சம்பந்தமாக சுமார் 20 ஆயிரம் கோப்புகள் உள்ளன. எங்கிருந்து இந்த கோப்புகள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பது ஆகிய தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. இவற்றை விரைவாக செய்து முடிக்கலாம். ஆனால் அவ்வாறு செய்தால் அது சரியான நடவடிக்கையாக அமைய மாட்டாது. ஆனால் இது ஒரு நிரந்தர அலுவலகம். எந்த அரசாங்கம் வந்தாலும் அது இயங்கும்.
எவ்வாறாயினும் குறுகிய காலத்தில் அமுலாக்கக் கூடிய பரிந்துரைகளும் அதில் இருந்தன. அதற்கு அரசியல் அர்ப்பணிப்பு தன்மை அவசியம். அரசியலமைப்பு திருத்தங்களை விரைவாக செய்ய முடியும். அவற்றை காலம்தாழ்த்துவதால் தான் பிரச்சினை. இவற்றை அமுல்படுத்தியிருந்தால் நாட்டில் மீண்டும் ஓர் பதற்ற நிலைமை ஏற்பட்டிருக்காது. ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற சம்பவத்தினை தடுத்திருக்கலாம். இதன்படி நல்லிணக்க செயலணியிலிருந்த ஓர் உறுப்பினர் என்ற ரீதியில் நான் விரக்தியுற்ற மனநிலையிலேயே இருக்கின்றேன். அதிக உழைப்புடனும் அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் நாம் இந்த பணியினை நாட்டிற்காக செய்திருந்தோம்.
நாட்டில் இனங்களுக்கிடையே சகவாழ்வினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதில் இலங்கை மக்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?
தத்துவ அறிஞரான மார்கலிட்(Margalit) கூறிய ஒரு விடயத்தினை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். (A decent society or civilized society is one whose institutions do not humiliate the people under their authority and whose citizens do not humiliate one another )அதாவது அனைத்து இன மக்களும் மற்றைய இன மக்களை மதிக்க வேண்டும். அவரவர்களின் அடையாளத்திற்கு கௌரவமளிக்க வேண்டும். பல்லின சமூகமே இலங்கையினை வளப்படுத்தியது என்பதனை நாம் மறந்து விட முடியாது. நாம் இந்த வேறுபாடுகளையும், தனித்துவத்தையும் மதித்து பேண வேண்டும். அனைத்து மக்களினதும் அடிப்படை மனித உரிமைகளை மதிப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும். இதன்படி சமத்துவமும், கௌரவமுமே (Equality and Dignity) இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அரபு வசந்தத்தின் பின்பு மத்திய கிழக்கு நாடுகளில் டியூனிசியா, தென்னாபிரிக்கா, ருவாண்டா, தென் அமெரிக்காவில் சிலி முதல் ஆர்ஜன்ரீனா வரை நாடுகளை நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்த நாடுகளுக்கு உதாரணங்களாகும். இலங்கையும் அந்த பாதையில் பயணிக்க வேண்டும்.
vidivelli