21/4 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள், தேசிய உளவுத்துறையின் கடிதத்தின் பிரகாரம் ஒரு வருடத்துக்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று வெளிப்படுத்தப்பட்டது.
2018 ஏப்ரல் 2 ஆம் திகதி தேசிய உளவுத்துறை பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியதாகவும், அதில் சஹ்ரான் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பகிரங்க விசாரணைகள் பாதிப்பை ஏற்படுத்துமெனக்கூறி அதனை நிறுத்தக் கோரியுள்ளதாகவும் அதனையடுத்தே அந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன குறித்த கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்து மன்றுக்கு அறிவித்தார்.
அது தொடர்பில் அதே மாதம் 10 ஆம் திகதி, அப்போது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலராக இருந்த பத்மசிறி ஜயமான்னவுக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கடிதம் ஊடாகத் தெரியப்படுத்தியுள்ளதாகவும், சஹ்ரானுக்கு எதிராக 2016 முதல் கிடைக்கப்பெற்றிருந்த தகவல்களை மையப்படுத்திய விசாரணைகள் அதனாலேயே தடைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லையென தற்போது கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது குற்றம் சுமத்துவது நியாயமல்ல எனவும் அவர் நீதிவானிடம் சுட்டிக்காட்டியதுடன், குறித்த கடிதங்களின் பிரதிகளையும் மன்றுக்கு சமர்ப்பித்தார்.
vidivelli