பூஜித் , ஹேமசிறி கைது

தேசிய பொலிஸ் வைத்தியசாலைகளுக்கு சென்று சி.ஐ.டி நடவடிக்கை

0 738

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறைத்­துக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் குற்­ற­வியல் பொறுப்பு சாட்­டப்­பட்டு, கட்­டாய விடு­மு­றை­யி­லுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவும் முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் நேற்று சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்­டனர். நேற்­றைய தினம் இரு­வ­ருக்கும் முற்­பகல் 10.00 மணிக்கு குறித்த விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக சி.ஐ.டி.க்கு அழைக்­கப்­பட்­டி­ருந்த போதும், அங்கு சமு­க­ம­ளிக்­காமல் சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ இரு­தய கோளாறு கார­ண­மாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் இரு­தய சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், காய்ச்­ச­லுடன் கூடிய திடீர் சுக­யீனம் கார­ண­மாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர நார­ஹேன்­பிட்­டி­யி­லுள்ள பொலிஸ் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். அந்­தந்த வைத்­தி­ய­சா­லை­களில் அவர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே, நேற்று பிற்­பகல் அந்த வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு சென்ற சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரின் மேற்­பார்­வையின் கீழான இரு சிறப்­புக்­கு­ழுக்கள் அவர்­க­ளிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்­து­கொண்ட பின்னர், அவர்­களைக் கைது செய்­தனர். கைது செய்­யப்­பட்ட குறித்த இரு­வரும், சி.ஐ.டி.யினரின் பாது­காப்பின் கீழ் அந்­தந்த வைத்­தி­ய­சா­லை­க­ளி­லேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந்தக் கைதுகள் குறித்து சி.ஐ.டி.யின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரின் கீழான அதி­கா­ரிகள், கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு நேற்று மாலை அறிக்கை சமர்ப்­பித்த நிலையில், மாலை வேளையில் கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கும், நார­ஹேன்­பிட்டி பொலிஸ் வைத்­தி­ய­சா­லைக்கும் சென்று சந்­தேக நபர்­களைப் பார்­வை­யிட்டார். இத­னை­ய­டுத்து அவ்­வி­ரு­வ­ரையும் இன்­று­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார். இந்­நி­லையில் பாது­காப்பு நிமித்தம் வைத்­தி­ய­சா­லை­களில் இருந்த சி.ஐ.டி. அதி­கா­ரிகள் வில­கிக்­கொண்­டுள்ள நிலையில், சிறைச்­சாலை அதி­கா­ரிகள் பொலிஸ்மா அதி­ப­ரையும் முன்னாள் பாது­காப்பு செய­ல­ரையும் தமது பொறுப்பின் கீழ் எடுத்­துள்­ளனர். அவர்­களின் பாது­காப்பின் கீழ் அவ்­வி­ரு­வரும் தொடர்ந்தும் சிகிச்­சை­பெற்று வரு­கின்­றனர்.
சட்­டமா அதிபர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவே­ரா­வி­ட­மி­ருந்து பதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடந்த ஜூன் 27 ஆம் திகதி வழங்­கப்­பட்­டுள்ள ஆலோ­ச­னைக்­க­மை­வாக, தண்­டனை சட்டக் கோவையின் 296, 298, 327, 328, 329 மற்றும் 410 ஆம் பிரி­வு­களின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றங்­களை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவும் முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் புரிந்­துள்­ள­தாகக் கூறியே இந்தக் கைது நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றுள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட விசேட விசா­ர­ணை­குழு, முன்னாள் பாது­காப்பு செயலர் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் உள்­ளிட்ட பலரின் வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்­தி­ருந்­தது. இந்­நி­லையில் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் விஜித் கல­கொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்­ககோன் மற்றும் அமைச்­சு­களின் செயலர் பத்­ம­சிரி ஜய­மான்ன ஆகி­யோ­ர­டங்­கிய விஷேட விசா­ர­ணைக்­குழு, இடைக்­கால மற்றும் இறுதி அறிக்­கை­களை சமர்ப்­பித்­தது.
அதனை மையப்­ப­டுத்தி பொலிஸ்மா அதிபர் முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கு­மாறு சட்­டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி ஆகி­யோ­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவின் உத்­த­ரவில் சி.ஐ.டி. பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல மற்றும் சி.ஐ.டி. பனிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர ஆகி­யோரின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த விசா­ர­ணைகள் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பணிப்­பாளர் ஊடாக 2019.06.26ஆம் திக­தி­யன்று ஆலோ­சனை கோரி கடி­த­மொன்று சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பப்­பட்­டது. அது தொடர்­பி­லான சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னைகள் 2019.06.27ஆம் திக­தி­யன்று குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விற்கு வழங்­கப்­பட்­டது.

அதன்­படி 2019.04.21ஆம் திகதி தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளினால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களால் ஏற்­பட்ட மனித படு­கொ­லைகள், பாரிய சொத்து சேதங்கள் தொடர்­பாக குற்­ற­வியல் பொறுப்பு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகி­யோ­ருக்கு எதி­ராக முன்­வைத்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான விசா­ரணை மற்றும் சாட்­சி­யங்கள் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ரணை அறிக்­கையை மையப்­ப­டுத்தி சட்­டமா அதிபர் தீர்­மா­னித்­தி­ருந்தார். அதன்­படி குறித்த குற்­றங்­க­ளுக்கு சந்­தேக நபர்­க­ளாக அவ்­வி­ரு­வ­ரையும் பெய­ரிட்டு குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையின் நடை­மு­றை­க­ளுக்­க­மை­வாக செயற்­பட்டு அவ்­வி­ரு­வரின் வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்து நீதி­மன்­றுக்கு அறி­வித்து அவ்­வி­ரு­வ­ரையும் சந்­தேக நபர்­க­ளாக நீதி­மன்றில் ஆஜர்­செய்ய பதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு சட்­டமா அதிபர் 2019.06.27 ஆம் திகதி எழுத்­து­மூல ஆலோ­ச­னையை வழங்­கி­யுள்ளார்.

அதன்­ப­டியே அவர்­களைக் கைது செய்து மன்றில் ஆஜர்­செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்ள சி.ஐ.டி. நேற்று அவர்­களை கொழும்பு – கோட்டை சி.ஐ.டி. தலை­மை­ய­க­மான நான்காம் மாடிக்கு வரு­மாறு அறி­வித்தல் அனுப்­பி­யுள்­ளது. எனினும் அவர்கள் அங்கு வருகை தரா­மையை அடுத்து, அது தொடர்பில் தேடி­யுள்ள சி.ஐ.டி. அவர்கள் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெறு­வதைக் கண்­ட­றிந்­துள்­ளனர். இந்­நி­லை­யி­லேயே நேற்று பிற்­பகல் அந்­தந்த வைத்­தி­ய­சா­லை­களின் வைத்­தி­யர்­க­ளுக்கு அறி­வித்­து­விட்டு அங்கு சென்ற சி.ஐ.டி.யினர் அவ்­வி­ரு­வ­ரையும் 10 நிமிட இடை­வெ­ளியில் கைது செய்­தனர்.

இதனைத் தொடர்ந்து அது தொடர்பில் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்ப்ட்ட நிலையில், கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன, முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று சந்தேக நபரான முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவை பார்வையிட்டார். இதன்போது ஹேமசிறி பெர்னாண்டோவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். இந்நிலையில் இன்றுவரை முதலில் ஹேமசிறி பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் இன்று அவ்வழக்கை திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கு சென்ற நீதிவான் லங்கா ஜயரத்ன அவரையும் பார்வையிட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது அதேபோன்று பூஜித் ஜயசுந்தரவும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.