முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், கல்லால் அடித்துக் கொலை செய்வதை ஏற்றுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்ட அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பதில் பொலிஸ்மா அதிபரிடம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கோரியிருக்கிறது.
வரகாகொட ஞானரத்ன தேரர் முன்வைத்த கருத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவிற்கு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த சில வருடகாலமாக சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து மத ரீதியிலான வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வன்முறை செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்தன. இத்தகைய வன்முறைச் சம்பவங்களாலும், சகிப்புத்தன்மை இன்மையாலும் எமது நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரத்ன தேரர் வெளியிட்ட கருத்து இந்த வன்முறை எண்ணங்களை மேலும் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. ‘முஸ்லிம்களின் கடைகள், வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம். அந்தக் கடைகளில் உணவருந்த வேண்டாம். அவர்கள் எம்முடைய சமூகத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்பது வெளிப்பட்டிருக்கிறது. ஆகையால் பௌத்தர்கள் கவனமாக பாதுகாப்புடன் செயற்பட வேண்டும். மேலும் கருக்கலைப்பு செய்த வைத்தியரை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் அவ்வாறு கூறமாட்டேன், ஆனால் அதைத்தான் செய்ய வேண்டும்’ என்று ஞானரத்ன தேரர் கூறியிருந்தார்.
தேரரின் இக்கருத்து முஸ்லிம் சமூகத்தவரை நேரடியாக இலக்கு வைப்பதாக அமைந்திருப்பதுடன், தற்போது நிலவும் சூழ்நிலையில் மேலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே கடந்த இருமாத காலத்திற்குள் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, தேரரின் இக்கருத்துத் தொடர்பில் விரைந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்குமான அவசியம் ஏற்பட்டுள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமானது. அச்சத்தினாலோ அல்லது பக்கச்சார்பான நிலைப்பாட்டினாலோ கட்டப்படுத்தப்படாமல் அனைவருக்கும் பொதுவானதாக சட்டம் செயற்பட வேண்டும். எனவே இவ்விடயம் குறித்து கவனத்திற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
vidivelli