போதைப் பொருள்களற்ற ஒரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடசங்கற்பம் பூண்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் முன்னெடுத்து வருகிறார்.
போதைப் பொருள் கடத்தற்காரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலே போதைப் பொருளை இலங்கையிலிருந்தும் துவம்சம் செய்யலாம் என்பதே ஜனாதிபதியின் அசையாத நம்பிக்கையாகும். இதனடிப்படையில் சிறையில் இருக்கும் போதைப் பொருளுடன் தொடர்புபட்ட மரண தண்டனைக் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
முதற்கட்டமாக போதைப் பொருளுடன் தொடர்புபட்ட 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் தான், கையொப்பமிட்டு விட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
43 வருடங்களின் பின்பு மரண தண்டனை இலங்கையில் அமுலுக்கு வரவுள்ளது. பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல், கொலை ஆகிய குற்றச் செயல்களுக்கு இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது. 1976 ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. நீதிமன்றங்களினால் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகள் சிறைவாசமே அனுபவித்து வந்தனர்.
மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மரண தண்டனை கைதிகளைத் தூக்கிலிடுவதற்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தலைமையகம் அறிவித்துள்ளது. அவர்களுக்கான வைத்திய பரிசோதனையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புற்ற 20 கைதிகளின் பெயர் பட்டியல் சட்டமா அதிபரினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 20 பேரில் முதற்கட்டமாக நால்வர் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புகளும்அதிகரித்து வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை சமூக செயற்பாட்டாளர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தார்கள். ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளன.
“மரண தண்டனை என்பது மிகவும் கொடூரமான மனிதத் தன்மையற்ற இழிவான ஒரு தண்டனை. எந்த சூழலிலும் ஐரோப்பிய ஒன்றியம் இதனை எதிர்க்கும்” என ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“போதைப் பொருள் குற்றத்துக்கு மரண தண்டனை என்பதை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது” என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்போரும் மரண தண்டனையை ஆதரிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்கள்.
“அரசியலமைப்பில் மரண தண்டனை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் எந்தத் தலைவர்களும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. 2016 இல் ஐக்கிய நாடுகள் சபை மரண தண்டனையை தடை செய்வதற்கான யோசனையை முன்வைத்த போது அதற்கு இலங்கையும் இணக்கம் தெரிவித்துள்ளது. அந்த யோசனைக்கு நானும், மைத்திரியும் அன்று ஆதரவளித்திருந்தோம்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் மரண தண்டனை குறிப்பிடப்பட்டிருந்தாலும் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாச, டீ.பி. விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் மரண தண்டனையை நிறைவேற்ற அங்கீகாரம் வழங்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன மரண தண்டனையை விரும்பாத நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மரண தண்டனை நிறைவேற்றத்தில் உறுதியாக இருக்கிறது. “ஜனாதிபதியின் தீர்மானத்தில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பில்லை. இத்தீர்மானத்தால் நாட்டுக்கு தீமைகள் ஏற்படாது. ஐனாதிபதியின் தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் போதைப்பொருளை ஒழிக்கும் பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் காரணமாக நாடு பல்வேறு சீரழிவுகளை எதிர்நோக்கியுள்ளது. எமது இளம் சந்ததியினர் போதைப் பொருளுக்கு அடிமையாகி பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணமாக உள்ளனர். போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களுக்கு சவூதி அரேபியா போன்ற பல முஸ்லிம் நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதன்மூலம் அந்நாடுகள் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தியுள்ளன. இலங்கையிலும் போதைப் பொருட்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சவால்கள் ஏற்பட்டால் போதைப்பொருள் குற்றவாளிகளினதும் அவர்களது குடும்பத்தினரதும் சொத்துகளை அரசுடமையாக்கி போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு அந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
vidivelli