ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களைக் காரணம் காட்டி முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரபு மத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும். தௌஹீத் பள்ளிவாசல்கள் மூடப்பட வேண்டும் எனும் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் கலாசார உடைக்கு குறிப்பாக முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் அபாயாவுக்கு கூட அரச அலுவலகங்களில், பாடசாலைகளில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. அபாயாவுடன் கடமைக்குச் செல்லும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பாடசாலைகள் தடை விதித்துள்ளன.
இந்த வரிசையில் அண்மையில் வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் வென்னப்புவ பிரதேச செயலகத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதித்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்களின் இன ரீதியான தன்னிச்சை தீர்மானங்களுக்கு இது சிறந்த உதாரணமாகும். அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டில் தேசிய ஒற்றுமையையும் இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டியதற்குப் பதிலாக இனவாதத்தை ஊதிப் பெருப்பிக்கிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
தங்கொட்டுவ வாராந்த சந்தை
வென்னப்புவ நகரிலிருந்தும் 7 கிலோ மீற்றர் தொலைவில் தங்கொட்டுவ நகர் வாராந்த சந்தை அமைந்துள்ளது. தங்கொட்டுவ வாராந்த சந்தை வென்னப்புவ பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழேயே நடைபெறுகிறது. இந்தச் சந்தைக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக சுமார் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் வியாபாரிகள் வருகை தருகிறார்கள்.
தங்கொட்டுவ வாராந்த சந்தை ஒவ்வோர் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை மாலைவரை இடம்பெறுகிறது. இச்சந்தைக்கு வர்த்தகம் செய்வதற்காக குருணாகல், குளியாப்பிட்டி உட்பட பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம் வியாபாரிகள் வருகை தருகின்றனர்.
இச்சந்தையில் 100 ற்கும் மேற்பட்ட முஸ்லிம் வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு வியாபாரம் செய்கிறார்கள்.
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடைகள்
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்பு மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களில் தங்கொட்டுவையிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பான்மையின வர்த்தகர்கள் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்புகளை வெளியிட்டனர். தூசன வார்த்தைகளைப் பிரயோகித்தனர். முஸ்லிம் வியாபாரிகள் ஐவரை வர்த்தகம் செய்ய விடாது விரட்டியடித்தனர்.
இதனையடுத்து துன்புறுத்தல்களுக்குள்ளான முஸ்லிம் வியாபாரிகள் 10 பேர் கையொப்பமிட்டு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றினை எழுதி முறைப்பாடு செய்தனர். அந்த முறைப்பாட்டு கடிதத்தினை பொலிஸ் தலைமையகத்தில் கையளித்தனர்.
2019.06.19 ஆம் திகதியிட்ட பொலிஸ் மா அதிபருக்கு கையளிக்கப்பட்ட கடிதத்தில் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபாரம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை விளக்கியிருந்தனர். ‘பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தை வியாபாரிகள் நாங்கள் வியாபாரம் செய்வதை எதிர்க்கிறார்கள். தூசன வார்த்தைகளினால் ஏசுகிறார்கள். எங்களில் 5 வியாபாரிகளை விரட்டியடித்தார்கள். இது தொடர்பில் நாங்கள் 119 பொலிஸ் அவசர அழைப்புக்கு மூன்று தடவைகள் அறிவித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை.
அதனையடுத்து முஸ்லிம் வியாபாரிகள் நாங்கள் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டோம். பொலிஸ் நிலையத்தில் எங்களது முறைப்பாட்டினைப் பதிவு செய்யவில்லை. சில தினங்கள் வாராந்த சந்தைக்குச் செல்ல வேண்டாம் என்றே பொலிஸார் கூறினார்கள்.
பொலிஸிலும் எங்களுக்கு நியாயம் கிடைக்காததால் வென்னப்புவ பிரதேச சபையில் முறையிட்டோம். வென்னப்புவ பிரதேச சபையிலும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
வாராந்த சந்தையில் சமாதானத்தை குலைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே எங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறும். நாம் வழமைபோல் வியாபார நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகள் செய்து தருமாறும் வேண்டுகிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிபிடப்பட்டிருந்தது.
பிரதேச சபைத் தலைவரின் தடையுத்தரவு
இவ்வாறான நிலையிலே வென்னப்புவ பிரதேச சபைத்தலைவர் கே.வி. சுசந்த தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு தற்காலிக தடை விதித்தார். இந்தத் தடையை அமுல்படுத்துமாறும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதமொன்றினையும் அனுப்பி வைத்திருந்தார். வென்னப்புவ பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்துமாறும் வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அவர் அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
‘தங்கொட்டுவ வாராந்த சந்தை தற்போது வென்னப்புவ பிரதேச சபையின் பொறுப்பின் கீழ் செயற்படுகிறது. ஏப்ரல் அடிப்படை வாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இனக் கலவரங்கள் தோற்றம் பெற்றன. தங்கொட்டுவ வாராந்த சந்தையில் பல இன மக்கள் வியாபார நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு முஸ்லிம் வியாபாரிகளும் உள்ளமையினால் பல மாறுபட்ட கருத்துகளும் முரண்பாடான சூழ்நிலைகளும் காணப்படுகின்றன. இந்நிலைமை தொடருமானால் கட்டுப்படுத்த முடியாது பல விளைவுகள் இடம்பெறும்.
முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியான சூழலை ஏற்படுத்தி இப்பிரதேச பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். எனவே முஸ்லிம் வியாபாரிகள் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபார நடவடிக்கைளில் ஈடுபடுதற்கு தற்காலிக தடையை அமுல்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதேச சபைத் தலைவர் தன்னிசையாகவே இந்த தடையுத்தரவினைப் பிறப்பித்துள்ளார். பிரதேச சபையின் தீர்மானங்கள் சபை அமர்விலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறையீடு
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தகர்கள் சார்பில் எம்.ஐ.எம். யாசீன் சமூக நல்லிணக்கத்துக்கான குழுவின் தலைவர் என்.எம். அமீனினிடம் புகார் தெரிவித்தார். அவர் இவ்விவகாரத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் மர்வின் விக்கிரமசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
பிரதேச சபைத் தலைவ-ருக்கு அழைப்பாணை
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வென்னப்புவ பிரதேச சபைத்தலைவர் தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு மாரவில நீதிவான் நீதிமன்று அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது. அவர் இன்று 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளார்.
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முஸ்லிம்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் நீதிமன்றுக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலே இந்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இனவெறிச் செயல்
முஸ்லிம்கள் வாராந்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட தடை செய்துள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர அதனை இனவெறிச்செயல் எனவும் வர்ணித்துள்ளார். மஹிந்த ராஜபக் ஷவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபையே இந்தத் தடையை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15 வருடங்களாக இச்சந்தையில் எவ்வித முரண்பாடுகளுமின்றி அனைத்து இன வியாபாரிகளும் ஒற்றுமையாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இனவாதம் பேசும் கட்சியினரும், அரசியல் வாதிகளுமே இவ்வாறான மோசமான தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்.
தடைக்கு இடமளிக்க முடியாது
‘வென்னப்புவ பிரதேச சபைக்கு எதிராக நீதிமன்ற உத்தரவினை நாங்கள் பெற்றிருக்கிறோம். இஸ்லாமிய வெறுப்புணர்வான இதற்கு இடமளிக்க முடியாது’ என பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.குமாரபெலி ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பிணைப்பைக் கொண்ட அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபைத் தலைவர் முஸ்லிம்களை வரவேண்டாம் எனவும் அவர்கள் அங்கு வருவது பிராந்தியத்தில் வன்முறையைத் தூண்டும் எனவும் கூறியிருக்கிறார். அந்தப் பகுதியில் அதிகளவு கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலில் இந்தப் பிராந்தியம் அதிகம் பாதிக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபையினால் செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை. சபையின் தலைவர் சமூகங்களுக்கிடையில் பதற்றத்துக்கு காரணமாக இருப்பதனால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாம் நீதிமன்றினைக் கேட்டிருந்தோம். அதன்படி விசாரணை வெள்ளிக்கிழமை இடம்பெற்வுள்ளது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிச்சையாக செயற்படுவது ஆபத்தானதாகும். இந்நிலைமை நாட்டில் மீண்டும் வன்முறைகளுக்கு தூபமிடுவதாகவே அமையும். இவ்வாறான மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்க வேண்டியது சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் மக்களின் பொறுப்பாகும்.
vidivelli