மொறகஹகந்த மற்றும் வேமெடில்ல நீர்த்தேக்கங்களின் நீர் ‘வயம்ப எல’ எனும் வாய்க்காலை ஊடறுத்துச் செல்லும் எழில்மிகு வயல் வெளிகள் நிறைந்த பல்லேவெல கிராமத்தில் 24ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் காதும் காதும் வைத்தாற் போன்று பேசப்பட்ட செய்தியொன்று சற்று நேரத்தில் காட்டுத் தீயைவிட மிக வேகமாக அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவ ஆரம்பிக்கவே மக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.
கலேவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல்லேவெல கிராமத்தின் முஸ்லிம் பொது மையவாடியில் 28 நாட்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்டிருந்த கப்ருகள் இரண்டு மீண்டும் தோண்டப்பட்டு அவற்றில் ஒன்றிலிருந்த நபரொருவரின் ஜனாஸா இரவோடிரவாக மாயமாகி விட்டது என்ற செய்தியே இவ்வாறு பிரதேச மக்களையும் அயல் பிரதேசவாசிகளையும் கதி கலங்கச் செய்திருந்தது.
பல்லேவெல ஜும்ஆ பள்ளியின் நிர்வாக சபைத் தலைவர் செய்னுலாப்தீன் முஹம்மது ரம்ஸீன் மற்றும் பல்லேவெல விவசாய அமைப்பின் தலைவர் இப்ராஹிம் ஹாஜி ஆகியோர் தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை காலை 6.15 மணியளவில் பல்லேவெல கிராம சேவை அதிகாரி பி.ஏ.ஜயலத் ஜயரத்னவுக்கு தெரிவித்தனர்.
காலை 6.45 மணியளவில் கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜானக்க வீரரத்ன, பிரதிப் பொறுப்பதிகாரிகளான ஹரிஸ்சந்ர மற்றும் சார்ஜன்ட் வீரரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பல்லேவெல கிராம சேவை அதிகாரியுடன் ஸ்தலத்திற்கு வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
முஸ்லிம்களின் புனித நோன்பு மாதத்தில் அதாவது, மே மாதம் 27 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்ட தமது தாய் மாமனாரான ஹபீப் லெப்பை என்பரின் ஜனாஸாவே இவ்வாறு காணாமற் போயிருப்பதாக ஏ.ஆர்.எம். மிஹ்ழார் எனபவர் இதன்போது தமது வாக்குமூலத்தில் தெரிவித்தார். நீண்டகாலமாக நீரிழிவு நோயினாலும், சிறுநீரக நோயினாலும் பாதிக்கப்பட்டு தம்புள்ள ஹெக்டர் கொப்பேகடுவ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தமது மாமனார் உயிரிழந்ததாகவும், அன்றைய தினமே குறித்த மையவாடியில் மீள தோண்டப்பட்ட குறித்த இடத்தில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் தமது வாக்குமூலத்தில் அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர் மையவாடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆய்வுசெய்த பொலிஸார் மையவாடி பிரதான நுழைவாயில் பூட்டிடப்பட்டு மூடப்பட்டிருப்பதையும், மையவாடி வடக்கு வலது மூலையில் பாதுகாப்பு முட்கம்பி வேலியின் இரண்டு பட்டுக்கள் துண்டிக்கப்பட்டு அதனூடாக சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருந்தமைக்கான தடயங்கள் இருந்ததையும் அடக்கம் செய்வதற்கு முன்னர் ஜனாஸாவிற்கு அணிவிக்கப்படும் வெள்ளைத் துணியின் (கபன்) சிதைவுகள் முட் கம்பியில் சிக்கியிருந்ததுடன் ஏனைய வெள்ளைத் துணிகள் யாவும் துண்டு களாக அருகிலிருந்த சிற்றோடையில் மிதந்து கொண்டிருந்ததையும் அவதானித்தனர்.
பிரதேசவாசிகளுடன் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்ட பொலிஸார் மையவாடிக்கு கிழக்குப் புறமாக சிற்றோடையின் கரையோரமாக ஜனாஸாவை இழுத்துச் சென்று சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள முருங்கைத் தோட்டம் ஒன்றின் மூலையில் அரை குறையாகப் புதைத்து அதன்மீது சருகுகளை குவித்திருந்ததைக் கண்டனர்.
25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு விசாரணையின் பொருட்டு நீதிவான் ஸ்தலத்திற்கு வருகை தந்த பின்னர் ஜனாஸா நீதிவானின் எதிரில் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டதுடன் அன்றிரவு முழுதும் பிரதேச மக்களுடன் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டியதாயிற்று.
மாத்தளை மாவட்டத்தில் பரபரப்பையும் முஸ்லிம் மக்களிடையே பேரதிர்ச்சியையும் ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கான காரணம் என்ன? மன்சூர் அல்லது அவரது குடும்பத்தாருடன் எவருக்கும் இருந்த தனிப்பட்ட கோபமா? அல்லது முருங்கைத் தோட்ட உரிமையாளருடன் எவருக்கும் ஏற்பட்டிருந்த குரோதமா? திட்டமிட்ட நாசகார செயலா? இனங்களிடையே முறுகலை ஏற்படுத்துவதற்கான புதியதோர் உபாயமா என்று பலவிதமாக சந்தேகங்கள் எழுந்தன.
அத்துடன் பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டு வந்தன. இதனால் குடும்பத்தினரது கவலைகள் மேலும் அதிகரித்து அவர்கள் ஊண் உறக்கமின்றி அழுது புலம்பி பிரலாபிக்கத் தொடங்கியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இத்தகைய வீணான வதந்திகள் சுமார் பதினெட்டு (18) மாதங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக தொழில் புரிவதற்கனெ சவூதி அரேபியாவிற்கு சென்று கணவனின் மரணத்திற்காவது தனது தாய்நாட்டிற்கு வரமுடியாத நிலையில் வீட்டு எஜமான் அல்லது எஜமானியினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மன்சூரின் மனைவியான ஜே. நஸ்மியாவைப் பெரிதும் பாதித்திருப்பதாக அவரது உறவினர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
25ஆம் திகதி காலை 8.00 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தம்புள்ள நீதிமன்ற நீதிவான் எஸ்.பீ.இலங்கசிங்க, தம்புள்ளை வைத்தியசாலை சட்ட வைத்தியர் மேனகாந்த் ஆகியோர் வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், ஜனாஸா புதைக்கப்பட்டு புல் பற்றை மற்றும் சருகுகளால் மூடப்பட்டிருந்த குழி அகழப்பட்டு ஜனாஸா வெளியில் எடுக்கப்பட்டது. மன்சூருடைய மகன் முகம்மத் முபீன் (17வயது) தமது தந்தையை அடையாளம் காட்டினார்.
ஜனாஸாவின் மார்பை சுற்றி புதிய நைலோன் கயிற்றினால் கட்டிய நிலையில் காணப்பட்டது. குழியிலிருந்து இழுத்துவந்து ஒரு அடி ஆழமான குழியில் கிடத்தி மீண்டும் மூடிவிட்டுச் சென்றிருப்பது இதன் போது தெரியவந்தது.
கலேவெல பி.எம்.அன்வர்
vidivelli