வைத்தியர் ஷாபி குறித்து சி.ஐ.டி. இன்று பாதுகாப்பு செயலருக்கு அறிவிக்கும்
ரத்ன தேரருக்கு எதிராகவும் அறிக்கை சமர்ப்பிக்கும் சாத்தியம்
குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை தொடர்ந்து 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பது நியாயமாக அமையாதென்று சி.ஐ.டி. பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொடவுக்கு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று பாதுகாப்பு செயலருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக அறிவிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நான்காம் மாடி தகவல்கள் விடிவெள்ளிக்கு வெளிப்படுத்தின. ஏற்கனவே ஷாபி வைத்தியருக்கு எதிராக சுமத்தப்படும் பயங்கரவாத, அடிப்படைவாத குற்றச்சாட்டுகளுக்கோ சொத்துக் குவிப்பு மற்றும் கருத்தடை விவகார குற்றச்சாட்டுகளுக்கோ எந்த சாட்சிகளும் இல்லையென சி.ஐ.டி. குருநாகல் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
எனினும், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வைத்தியர் ஷாபி சி.ஐ.டி. தடுப்பில் இருந்து வருகின்றார். இந்நிலையிலேயே அவரது தடுப்புக் காவல் நியாயமற்றதென அறிவிக்க சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மே 24 ஆம் திகதி குருநாகல் பொலிஸாரால் வைத்தியர் ஷாபி பயங்கரவாத தடைச்சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அப்பிரிவின் கீழ் அவரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அப்போது குருநாகல் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்க அனுமதி பெற்றிருந்தார். அதன்பின்னரே ஷாபி வைத்தியரை சி.ஐ.டி. பொறுப்பேற்றது. அதன்படி அவரை விசாரிக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9(1) ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு செயலாளரிடம் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவை சி.ஐ.டி. பெற்றுக்கொன்டு நடாத்திய விசாரணைகளிலேயே ஷாபி வைத்தியருக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை தெரியவந்திருந்தது.
இதனைவிட கடந்த மே 24 ஆம் திகதி ஷாபி வைத்தியரை, குருநாகல் வைத்தியசாலையின் நான்கு வைத்தியர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தாம் கைது செய்ததாக குருநாகல் பொலிசார் கூறிய நிலையில், அது பொய்யென சி.ஐ.டி. விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நான்கு வைத்தியர்களையும் சி.ஐ.டி.க்கு அழைத்து விசாரித்ததில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியர் ஷாபியை கைது செய்ய முன்னர் 23 ஆம் திகதி குறித்த வைத்தியர்கள் பொலிசாருக்கு வாக்குமூலம் வழங்கியதாக குருநாகல் பொலிசாரால் கூறப்பட்ட நிலையில் அதனை மையப்படுத்தி வைத்தியரைக் கைது செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனினும் வைத்தியர் ஷாபி 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த வைத்தியர்கள் மே 26 ஆம் திகதியே (இரு நாட்களின் பின்னர்) அந்த வாக்குமூலங்களை வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனை இரு வைத்தியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாகப் பொதுவெளிகளில் கருத்துரைத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரதன தேரர், ஷாபி வைத்தியர் தொடர்பிலான விசாரணைகளில் அநாவசியமான தலையீடுகள் மற்றும் மறைமுக அழுத்தங்களை பிரயோகிப்பதாக நீதிமன்றிடம் முறையிட விசாரணையாளர்கள் தயாராகி வருவதாகவும் அறிய முடிகின்றது. பிரதான விசாரணை மேற்பார்வையாளரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ். திசேரா தொடர்பில், கடந்த ஜூன் 27 ஆம் திகதி வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து ரத்ன தேரர் வெளிப்படுத்திய விடயங்கள், நீதிமன்றுக்குள் வைத்து அந்த உதவி பொலிஸ் அத்தியட்சகரை அணுகி, “உலகமே பார்த்துக்கொண்டிருக்கின்றது, கவனம்” எனக் கூறிச் சென்றதாகக் கூறப்படும் இரு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி சி.ஐ.டி. இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும், சி.ஐ.டி. விசாரணைகள் சரியாக முன்னெடுக்கப்படவில்லையென ரதன தேரர் பொலிஸ் தலைமையகத்துக்கு கொடுத்த முறைப்பாட்டையடுத்து பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, ஷாபி வைத்தியர் தொடர்பிலான விசாரணைகள் குறித்து சி.ஐ.டி. பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
சி.ஐ.டி. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஆகியோரின் உத்தரவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திசேராவின் மேற்பார்வையில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் வழிநடத்தலில் பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க, சார்ஜன்ட் ராஜபக் ஷ, கானஸ்டபில் சில்வா உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
vidivelli