ஐ.சி.சி.பி.ஆர் யாருக்காக?

0 899

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை இலக்கு வைத்த அரசியல் மற்றும் இனவாத நகர்வுகள் சூடுபிடித்துள்ளன. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் கூட ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்காகக் கொண்டே திட்டமிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்ற நிலையில் அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே அச் சம்பவத்தின் பின்னரான நகர்வுகள் அமைந்துள்ளன.

ஏப்ரல் தாக்குதலின் பின்னரான நாட்டு மக்களின் உணர்வலைகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி அதனை அடுத்து வரும் தேர்தல்களில் வாக்குகளாக சம்பாதித்துக் கொள்ளும் மொத்த வியாபாரம் ஒன்றே இப்போது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் மற்றும் இனவாத ஊடகங்கள் என மூன்று தரப்பினரும் இணைந்து இந்த மொத்த வியாபாரத்தை கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

தினமும் அரசியல் தலைவர்கள் பலரும் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற நிலையில் அதற்கு ஒத்தூதுவது போன்று பிக்குகள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வழக்கம்போல ஞானசார தேரரும் அத்துரலியே ரத்ன தேரரும் இனவாதக் கருத்துக்களை அள்ளி வீசி வருகின்ற நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அஸ்கிரிய மகாநாயக்க பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரின் கருத்தும் அமைந்துள்ளது.

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்குமாறும் கருத்தடை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வைத்தியரை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ள இந்தக் கருத்தானது மிகப் பாரதூரமானதாகும். எனினும் இக் கருத்துக்கு எதிராக அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ஹர்ஷ டி சில்வா தவிர வேறு எவரும் வாய் திறக்கவில்லை. நடுநிலையாகச் சிந்திக்கும் சில பௌத்தர்கள் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே இதனைக் கண்டித்தாலும் பெரும்பான்மை சமூகத்திலிருந்து போதுமான எதிர்ப்புகளோ மறுப்புகளோ இக் கருத்துக்கு எதிராக முன்வைக்கப்படாமை கவலைக்குரியதாகும். நாட்டின் தலைவர்களான ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் கூட இதுவரை எந்தவித பிரதிபலிப்பையும் இதுவரை காண்பிக்கவில்லை.

மகாநாயக்க தேரரின் இந்தக் கருத்து எதிராக நேற்று வரை பொலிஸ் தலைமையகத்தில் இரு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் செயற்பாட்டாளர் ஒருவர் ஆகியோரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர். எனினும் மகாநாயக்க தேரருக்கு எதிரான இந்த முறைப்பாட்டை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பொலிஸ் சட்டப் பிரிவு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் மகாநாயக்க தேரரின் கருத்தானது மிகத் தெளிவாகவே ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யக் கூடியது என சட்டவல்லுனர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில் நாட்டில் பெரும்பாலான பௌத்த விகாரைகளில் உபதேசம் புரியும் பிக்குகள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்குமாறு தொடர்ச்சியாக சிங்கள மக்களைக் கோரி வருகின்றனர். இதன் தாக்கம் தற்போது முஸ்லிம்களின் வியாபாரத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது. சிங்களவர்கள் செறிந்து வாழும் நகரங்களிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் இன்று பாரியளவு வியாபார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந் நிலை மிக நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்ற போதிலும் அப்பாவிச் சிங்கள மக்களின் மனங்களில் தூவப்படும் இந்த நச்சு விதை பின்னாளில் பாரிய விருட்சமாக மாறும் என்பதை மறுப்பதற்கில்லை.

உண்மையில் இவ்வாறான இனவாத கருத்துக்களுக்கு எதிராக உரிய முறையில் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருந்தால் இவற்றை எப்போதோ தடுத்து நிறுத்தியிருக்க முடியும். எனினும் தர்மச்சக்கர ஆடை அணிந்ததாக பொய்க் குற்றம்சாட்டி அப்பாவிப் பெண் ஒருவரை சிறையிலடைத்த பொலிஸாரால் மிகத் தெளிவாகவே ஊடகங்கள் முன்னிலையில் இனவாதம் பேசம் பிரபலங்களுக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க முடியவில்லை என்பது கவலைக்குரியதாகும். பொலிசாரும் நீதித்துறையினரும் தமது கடமைகளைச் சரிவரச் செய்வார்களாயின் நிச்சயம் இந்த இனவாத அலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

விடிவெள்ளி 

Leave A Reply

Your email address will not be published.