நீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த வெலகெதர நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார்.
முன்னாள் ஆளுநர் அசாத்சாலியின் கருத்து, இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த முன்வைத்த முறைப்பாட்டை மையப்படுத்தி தண்டனை சட்டக் கோவை , சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த வெலகெதர நீதிமன்றுக்கு அறிவித்தார்.
‘கடந்த மே 4 ஆம் திகதி அசாத் சாலி , நீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் , பிரதேச சபையொன்று கூட அனுமதிக்காத பள்ளிவாசல் ஒன்றுக்கு நீதிபதி ஒருவர் தலையீடு செய்து இயங்கத் தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது பயங்கரமான நிலைமை எனவும் அது இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை ஏற்படுத்தும் எனவும் சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த முறைப்பாட்டில் கூறியுள்ளார். அசாத் சாலி கூறுவது உண்மையானால் அதையே முதல் தகவலாக கருதி விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.’ எனவே அது தொடர்பில் விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய ஆரம்பிக்கப் பட்டுள்ளது என திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் முறைப்பாட்டாளரான சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்தவிடம் கடந்த 24 ஆம் திகதி பொலிஸார் இது தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாகவும் இதன்போது பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக அசாத் சாலியின் கருத்து தொடர்பில் ஊடகங்களில் வெளியான செம்மைப்படுத்தப்பட்ட அறிக்கைகள், வீடியோ காட்சிகளையும் செம்மை படுத்தப்படாத அறிக்கைகள் , வீடியோ கட்சிகளையும் பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் விசாரணையாளர்களுக்கு அனுமதியளித்தது.
vidivelli