முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி , பிரதமருக்கு அழுத்தம் பிரயாகிப்போம்
முஸ்லீம் எம்.பி.க்களிடம் முஸ்லீம் நாடுகளின் தூதுவர்கள் உறுதியளிப்பு
இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தாமதமில்லாது தீர்வுகள் பெற்றுக்கொடுக்கும் படியும், அவர்களது பாதுகாப்பினை உறுதிசெய்யும் படியும், முஸ்லிம்களுக்கெதிரான தவறான பிரசாரங்களைத் தடைசெய்யும் படியும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தனர்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுக்காலை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் இல்லத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் அரசியல் நிலைமை, முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், தவறான பிரசாரங்கள் என்பவற்றை விபரித்தனர்.
முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளை நிறுத்து வதற்கும், முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் ஒத்துழைக்குமாறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இலங்கை முஸ்லிம்களின் தற்கால நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தாமதமில்லாது தீர்த்து வைக்கும்படி ஜனாதிபதியையும், பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் கோருவதாகத் தெரிவித்தனர்.
முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும், முஸ்லிம்கள் தொடர்பான தவறான பிரசாரங்களை நிறுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் உறுதியளித்தார்கள்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறினார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர் கபீர் ஹாசீம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பைசல் காசிம், பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி, முஜிபுர் ரஹ்மான், அமீர் அலி, காதர் மஸ்தான், எம்.ஐ.எம்.மன்சூர், எஸ்.எம்.எம். இஸ்மாயில், அலி சாஹிர் மௌலானா ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.
vidivelli