பாடசாலைகளில் இஸ்லாம் மதத்தைக் கற்பிக்கும் பாடநூல்களில் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான கருத்துகள் உள்ளடங்கப்பட்டுள்ளன எனவும் அவற்றை இஸ்லாம் பாடநூல்களிலிருந்து நீக்குமாறும் கோரி சிங்களே அமைப்பும் பௌத்த தகவல் கேந்திர நிலையமும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன.
இஸ்லாத்திலிருந்து ஏனைய மதங்களுக்கு மதம் மாறுபவர்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் கொலை செய்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாம் சமய பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அண்மையில் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தினைத் தழுவிக் கொண்ட ஒருவர் சாட்சியமளித்திருந்தார்.
குறிப்பிட்ட சாட்சியத்தை அடிப்படையாகக்கொண்டு சிங்களே அமைப்பு மற்றும் பௌத்த தகவல் கேந்திர நிலையத்தைச் சேர்நத தேரர்கள், பாடசாலை மட்டத்திலே அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் போதிக்கப்பட்டு வருவதாகவும் இது மிகவும் பயங்கர முன்னெடுப்பெனவும் தங்களது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஸ்லாம் மத பாடநூல்களிலிருந்து அடிப்படை வாதத்தைப் போதிக்கும் கருத்துகள் உடனடியாக அகற்றப்படவேண்டுமெனவும் கல்வி அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
vidivelli