துருக்கியில் இடம்பெற்ற இஸ்தான்பூல் மேயருக்கான மீள் தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் வேட்பாளர் எக்ரெம் இமாமோகுலு வெற்றி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியானது துருக்கி ஜனாதிபதி றிசெப் தைய்யிப் அர்துகானுக்கு பாரிய பின்னடைவாகும்.
அனைத்து வாக்குப் பெட்டிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட நிலையில் 54 வீதமான வாக்குகளைப் பெற்று இமாமோகுலு வெற்றி பெற்ற அதேவேளை ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் வேட்பாளர் 45 வீதமான வாக்குகளைப்பெற்று தோல்வியைத் தழுவினார்.
துருக்கியின் பெரிய நகரமும் மற்றும் வர்த்தக கேந்திர நிலையமுமான இஸ்தான்பூலின் புதிய ஆரம்பம் என இமாமோகுலு உறுதியளித்தார். துருக்கியில் ஜனநாயகத்தின் அந்தஸ்தினை நீங்கள் காப்பாற்றியுள்ளீர்கள் என தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் துருக்கி பிரதமர் பினாலி இல்ட்ரிம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தற்போதைய பெறுபேறுகளுக்கு அமைவாக என்னை எதிர்த்துப் போட்டியிடும் எக்ரெம் இமாமோகுலு முன்னணியில் இருக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என இல்ட்ரிம் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக இஸ்தான்பூல் மேயருக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்றது. இதில் எக்ரெம் இமாமோகுலு 48.8 வீத வாக்குகளைப் பெற்ற அதேவேளை நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் வேட்பாளர் இல்ட்ரிம் 48.55 வீத வாக்குகளையும் பெற்றனர்.
இந்தப் பெறுபேறுகள் தொடர்பில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புறநடையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியதை அடுத்து உயர்மட்டத் தேர்தல் ஆணைக்குழு குறித்த பெறுபேறுகளை இரத்துச் செய்தததோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்த முடிவு எட்டப்பட்டது.
-Vidivelli