பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நாளை சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒருசிலர் கைது செய்யப்பட்ட நிலையில் இராணுவத் தளபதிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சட்டு உள்ளிட்ட அவர் விசாரணைகளை குழப்புகின்றார் என எதிர்த்தரப்பு குற்றம் சுமத்திவந்த நிலையிலும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களில் ஒருவருடன் வியாபார தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரையும் தெரிவுக்குழு முன்னிலையில் அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது. இதன்போது முதல் சாட்சியமாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவுள்ளார். அதேபோல் மேலும் இரு அரச அதிகாரிகளும் வரவழைக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடி தாக்குதலுடன் தொடர்புபட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இதுவரை பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு செயலாளர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பத்திற்கும் அதிகமானவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அடுத்துவரும் விசாரணைகளில் அரசியல் தரப்பினர் மற்றும் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் இஸ்லாமிய மத அமைப்புகளை வரவழைக்கத் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்குழு கூறுகின்றது. எனினும், இந்த தெரிவுக்குழு முன்னிலையில் தம்மை அழைத்து விசாரணை நடத்த வேண்டுமென பொதுபல சேனா உள்ளிட்ட சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli