தேர்தலை நோக்கி நகரும் இனவாத பிரசாரங்கள்

0 721

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை இலக்கு வைத்த அரசியல் மற்றும் இனவாத நகர்வுகள் சூடுபிடித்துள்ளன. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் கூட ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்காகக் கொண்டே திட்டமிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்ற நிலையில் அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே அச் சம்பவத்தின் பின்னரான நகர்வுகள் அமைந்துள்ளன.

ஏப்ரல் தாக்குதலின் பின்னரான நாட்டு மக்களின் உணர்வலைகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி அதனை அடுத்து வரும் தேர்தல்களில் வாக்குகளாக சம்பாதித்துக் கொள்ளும் மொத்த வியாபாரம் ஒன்றே இப்போது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் மற்றும் இனவாத ஊடகங்கள் என மூன்று தரப்பினரும் இணைந்து இந்த மொத்த வியாபாரத்தை கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

தினமும் அரசியல் தலைவர்கள் பலரும் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற நிலையில் அதற்கு ஒத்தூதுவது போன்று பிக்குகள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வழக்கம்போல ஞானசார தேரரும் அத்துரலியே ரத்ன தேரரும் இனவாதக் கருத்துக்களை அள்ளி வீசி வருகின்ற நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அஸ்கிரிய மகாநாயக்க பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரின் கருத்தும் அமைந்துள்ளது.

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்குமாறும் கருத்தடை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வைத்தியரை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ள இந்தக் கருத்தானது மிகப் பாரதூரமானதாகும். எனினும் இக் கருத்துக்கு எதிராக அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ஹர்ஷ டி சில்வா தவிர வேறு எவரும் வாய் திறக்கவில்லை. நடுநிலையாகச் சிந்திக்கும் சில பௌத்தர்கள் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே இதனைக் கண்டித்தாலும் பெரும்பான்மை சமூகத்திலிருந்து போதுமான எதிர்ப்புகளோ மறுப்புகளோ இக் கருத்துக்கு எதிராக முன்வைக்கப்படாமை கவலைக்குரியதாகும். நாட்டின் தலைவர்களான ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் கூட இதுவரை எந்தவித பிரதிபலிப்பையும் காண்பிக்கவில்லை.

இதுபோன்றுதான் நாட்டில் பெரும்பாலான பௌத்த விகாரைகளில் உபதேசம் புரியும் பிக்குகள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்குமாறு தொடர்ச்சியாக சிங்கள மக்களைக் கோரி வருகின்றனர். இதன் தாக்கம் தற்போது முஸ்லிம்களின் வியாபாரத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது.சிங்களவர்கள் செறிந்து வாழும் நகரங்களிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் இன்று பாரியளவு வியாபார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந் நிலை மிக நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்ற போதிலும் அப்பாவிச் சிங்கள மக்களின் மனங்களில் தூவப்படும் இந்த நச்சு விதை பின்னாளில் பாரிய விருட்சமாக மாறும் என்பதை மறுப்பதற்கில்லை.

மறுபுறம் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோத வைப்பதற்கான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலையும் இந்த இனவாத சக்திகள் முன்னெடுத்து வருகின்றன. அதன் விளைவே கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டமாகும். கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரத்ன தேரரே இதில் பிரதான பாத்திரம் வகிக்கிறார். இந்தக் கோரிக்கையின் நியாயப்பாடுகள் ஒருபுறமிருக்க, தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் இப் பகுதியில், நாட்டில் அசாதாரண சூழலொன்று நீடித்து வரும் நிலையில் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதன் பின்னணி சந்தேகத்தை எழுப்புகிறது. இதற்கு ஆதரவாக அதுரலியே ரத்ன தேரும் மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரரும் நேற்று அங்கு விஜயம் செய்தமை இதன் பின்னணியிலுள்ள அரசியலை நன்கு உணர்த்துகின்றன.

எனவேதான் இந்த நகர்வுகள் நாட்டுக்கு எந்தவிதத்திலும் நன்மையைக் கொண்டு வரப்போவதில்லை. மாறாக இனவாதத்தை தூண்டி அதன் மூலமாக வாக்குகளை சம்பாதிக்க எத்தனிக்கின்ற மிக மோசமான சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளே இதன்மூலம் நன்மையடையப் போகிறார்கள். இந்த அரசியல்வாதிகளின் வலையில் அப்பாவி பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் சிக்கிவிடக்கூடாது என்பதே எமது பிரார்த்தனையாகும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.