சோமாலியாவில் தானும் நபி எனத் தெரிவித்த மதகுருவின் சமயத் தலத்தின் மீது தாக்குதல்
மதகுருவும் மேலும் ஒன்பது பேரும் பலி
அல்-–ஷபாப் துப்பாக்கிதாரியொருவரும் கார்க்குண்டு தற்கொலைத் தாக்குதல்தாரியொருவரும் கடந்த திங்கட்கிழமை மத்திய சோமாலியாவின் மதத் தலமொன்றில் மேற்கொண்ட தாக்குதலில் மதகுரு ஒருவரும் மேலும் ஒன்பது பேரும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
முகாமொன்றினுள் இருந்த மதகுரு, பதின்ம வயதினர் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக 10 பேர் கிளர்ச்சிக்காரர்களால் கொல்லப்பட்டதாக மத்திய நகரான கல்கயோவிலிருந்து தொலைபேசி மூலமாக பொலிஸ் மேஜர் அப்துர்ரஹ்மான் அப்துல்லாஹி ரொய்ட்டரிடம் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினருக்கும் அல்-ஷபாபுக்கும் இடையே மத்திய நிலையத்தில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இத்தாக்குதலுக்குத் தாமே பொறுப்பென சோமாலிய அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்காகப் போராடி வரும் இஸ்லாமியக் குழுவான அல்-–ஷபாப் தெரிவித்துள்ளது.
நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்திய நபரின் மத்திய நிலையத்தினுள் குண்டுடனான கார் நுழைந்தது. எமது போராளிகள் தற்போது உள்ளே இருக்கின்றார்கள், மோதல்கள் இடம்பெற்று வருகின்றன என அல்–-ஷபாப் பேச்சாளர் அப்துல் அஸீல் அபூ முஸாப் ரொய்ட்டரிடம் தெரிவித்தார்.
அப்திவெலி இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம் அவரது மத்திய நிலையத்தில் பெரும்பாலான இளம் வயதினர் இசை மீட்டல் மற்றும் நடனமாடும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படுகின்றமையாகும் என கல்கயோ பிரதேசவாசிகளும் பிராந்திய உத்தியோகத்தர் ஒருவரும் தெரிவித்தனர்.
தான் ஒரு நபி என அப்திவெலி தெரிவித்தாக அல்-–ஷபாப் கடந்த வருடம் குற்றம்சாட்டியது, அக்குற்றச்சாட்டை அப்போதே அப்திவெலி மறுத்திருந்தார்.
உயிரிழப்புக்களின் எண்ணிக்கை எத்தனை என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அல்-–ஷபாப் பல தடவைகள் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தது என முடுக் பிராந்தியத்தின் ஆளுநரான அப்துர்ரஷீட் ஹாஷி தெரிவித்தார்.
இஸ்லாமிய சட்டத்தை கடுமையாகப் பின்பற்றும் அதன் கொள்கை அடிப்படையிலான சுய ஆட்சியினை உருவாக்குவதற்கு அல்-–ஷபாப் அமைப்பு போராடி வருகின்றது. முடுக் பிராந்தியத்தின் சிறிய பகுதியை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் அல்-–ஷபாபின் கட்டுப்பாட்டினுள் கல்கயோ பிராந்தியம் இல்லை. கல்கயோ பிராந்தியம் மிகவும் அமைதியான பிரதேசமாகும், எவ்வாறு ஆயுதம் தரித்த கிளர்ச்சிக்காரர்களும் தற்கொலைக் காரும் நகரத்திற்குள் கொண்டுவரப்பட்டன என்பதே இங்குள்ள கேள்வியாகும் என பொலிஸ் கெப்டன் நூர் மொஹமட் தெரிவித்தார்.
-Vidivelli