உலகளாவிய ரீதியில் பரந்துபட்டுள்ள மதங்கள் கருணை, அன்பு, சகோதரத்துவம் என்பனவற்றையே போதிக்கின்றன. மக்களை நேர்வழியில் நெறிப்படுத்துவதே மதங்களின் கோட்பாடுகளாக அமைந்துள்ளன. இந்தக் கோட்பாடுகளை மதத்தலைவர்களே செயற்படுத்துகிறார்கள். மதத்தலைவர்களின் பணியே இது.
இலங்கை பல்லின சமூகம் வாழும் ஒரு சிறிய தீவாகும். இங்கு பல்லின மக்கள் தமது கலாசார அடையாளங்களுடன் நாடெங்கும் ஒன்றரக்கலந்து வாழ்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை சமய ரீதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வழி நடாத்துவது போன்று பெரும்பான்மையாக வாழும் பௌத்த மக்களை பௌத்த உயர்பீடமான அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் வழிநடத்துகின்றன.
முஸ்லிம்கள் உலமாக்களை கௌரவித்து மரியாதை செய்வது போன்று பௌத்த தேரர்களையும் கண்ணியப்படுத்துகிறார்கள். மரியாதை செய்கிறார்கள். அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்து கொண்ட முஸ்லிம் அமைச்சர்களும் பௌத்த உயர்பீடத்தைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார்கள். அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் அங்கு சென்றார்கள்.
அஸ்கிரிய, மல்வத்துபீடங்களின் மகாநாயக்க தேரர்களுடனான, பதவிகளை இராஜினாமா செய்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவித்திருந்தார்.
‘நாங்கள் அமைச்சர்கள் 9 பேர் எமது பதவிகளை இராஜினாமா செய்தது பற்றி பரவலாக கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் மகாநாயக்க தேரர்களும், சங்கைக்குரிய சங்க சபையும் எமக்கு வழங்கிய ஆலோசனைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எமது கௌரவத்தை அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
மகாநாயக்க தேரர்கள் ‘இலங்கையில் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலைவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். எமக்குள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு நாம் நடுநிலையிலிருந்து தீர்வு காணவேண்டும்’ என எமது பாராளுமன்ற உறுப்பினர் களிடம் தெரிவித்திருந்தார்கள்.
இதேவேளை இன நல்லிணக்கம், ஒற்றுமை பற்றி வலியுறுத்திய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்ன தேரர் சமய நிகழ்வொன்றில் பகிரங்கமாக தெரிவித்த கருத்துகள் முஸ்லிம்களை மாத்திரமல்ல பெரும்பான்மை சமூகத்தின் பெரும் எண்ணிக்கையிலானோரை கவலை கொள்ளச்செய்துள்ளது.
கண்டி–யட்டிநுவர தியகெலினாவ கித்சிரிமெவன், ரஜமகா விகாரையில் அவர் ஆற்றிய உரை பௌத்த தர்மத்துக்கு முற்றும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. “முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிப்பதற்கு எடுத்த செயற்பாடுகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எனது மக்கள் கவனமாக இருக்கவேண்டும். சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்த முஸ்லிம் டாக்டர் ஒருவர் தொடர்பில் ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளன. இப்படியான சிங்கள இனத்தை அழிக்க நினைக்கும் தேசத் துரோகிகளை சுதந்திரமாக விடக்கூடாது. கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என பலர் என்னிடம் கூறினார்கள். அப்படிச் செய்யுங்கள் என நான் கூறமாட்டேன். ஆனால் செய்யப்பட வேண்டியது அதுதான். என அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் தெரிவித்திருக்கின்றமை மிகவும் ஆபத்தானதாகும்.
மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய, கருணையைப் போதிக்க வேண்டிய இன நல்லிணக்கத்தையும், தேசிய ஒருமைப்பாட்டினையும் பலப்படுத்த வேண்டிய பௌத்த மதத்தின் உயர்பீடத் தலைவர் இப்படிக் கூறுவதை எவராலும் அனுமதிக்க முடியாது. நாடு இன ரீதியான பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் இது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமையும் என்பதை ஏன் மகாநாயக்க தேரர் உணரவில்லை என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. மகாநாயக்க தேரர், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரியுங்கள், முஸ்லிம் கடைகளுக்குச் செல்லாதீர்கள், அக்கடைகளில் உணவருந்தாதீர்கள் என்றும் சிங்களவர்களைக் கோரியிருப்பது ஓர் இனவாத எழுச்சியாகும்.
ஞானரத்ன தேரரின் கூற்றினை நிதியமைச்சர் மங்கள சமரவீர வன்மையாகக் கண்டித்துள்ளார். பௌத்த தர்மங்களையும், உயரிய சிந்தனைகளையும் தீவிர வாதத்தினை நோக்கி திசை திருப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதர்களை கல்லால் அடித்துகொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தர்களும் எண்ண மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எப்போதும் மதத் தலைவர்கள் இனமோதல்களைத் தவிர்ப்பவர்களாகவும், மக்களை நல்வழிப் படுத்துபவர்களாகவுமே இருக்கவேண்டுமே தவிர தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர் களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli