காத்தான்குடியில் முஸ்லிம் அமைப்புகள் பல இருந்தன. அதில் ஒன்றே தேசிய தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் சஹ்ரான் குழுவே அங்கிருந்த ஒரேயொரு ஆயுதக் குழுவாகக் காணப்பட்டதென காத்தான்குடியின் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார். கடந்த காலங்களில் முரண்பாடுகள் பல ஏற்பட்டன, அப்போது ஆமி மொய்தீன் பெயர் அதிகமாக பேசப்பட்டது. அவர் சிப்லி பாரூக் என்ற மாகாணசபை உறுப்பினருடன் இருந்தார். ஆனால் ஆமி மொய்தீன் பொலிசாருடன் தொடர்பில் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று காத்தான்குடியின் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதரவிடம் விசாரணை நடத்தியது. இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது,
நான் காத்தான்குடியில் பொறுப்பதிகாரியாக இருந்த காலத்தில் சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. ஆனால் காத்தான்குடியில் மதவாத அமைப்புகள் பல இருந்தன. இந்த அமைப்புகள் இடையில் மதவாத முரண்பாடுகள் இருந்தன. மதவாத முரண்பாடுகள் குறித்து முறையிடப்பட்டது. பள்ளிவாசல் பிரச்சினைகள் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் பல இருந்தன. பிளவுபட்டிருந்த காரணத்தினால் அமைப்புகளாக அவர்கள் செயற்பட்டனர். அவரவர் நியாயப்பாடுகளை அவர்கள் கூறுவார்கள். தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. ஏனைய அமைப்புகள் அனைத்துமே இந்த அமைப்புடன் முரண்பட்டனர். இது குறித்த பல முறைப்பாடுகள் பதியப்பட்டதால் சரியான காரணிகள் எதுவும் எனக்கு நினைவிலில்லை. ஆனால் அடிப்படைவாத திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக எந்த முறைப்பாடுகளும் இருந்ததில்லை.
மேலும், சூபி முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியது. அப்போது நான் உரிய இடத்துக்கு சென்றேன். அங்கு சஹ்ரான் இருந்தார். அந்த சம்பவத்தில் நூறு அல்லது நூற்று ஐம்பது நபர்கள் இருந்தனர். ஆரம்பத்தில் எவரையும் கைதுசெய்யவில்லை. ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலமாக இறுவட்டுக்கள், கருத்துக்கள் என்பவற்றை பார்த்து காணொலிகளின் மூலமாக ஒவ்வொருவராக கைது செய்த போது இவர்கள் தலைமறைவாகிவிட்டனர். ஆயுதம் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். சஹ்ரான் குழுதான் ஆயுதக் குழுவாகவிருந்தது. எவ்வாறு இருப்பினும் தேர்தல் காலங்களில் சஹ்ரானுக்கு அவ்வாறு தனிப்பட்ட பலம் இருந்தது என நினைக்கவில்லை தேர்தல் காலங்களில் ஒவ்வொரு அமைப்புகளும் பலமடையும். அவ்வாறே இந்த அமைப்பும் பலமடைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டங்கள் நடத்த அனுமதி கேட்பார்கள். ஒலிபெருக்கி அனுமதியும் கேட்பார்கள். இவர்கள் எங்கு கூட்டம் வைக்கின்றனர் என்று பார்ப்போம். அவர்கள் நடத்திய கூட்டங்களில்தான் பிரச்சினைகள் ஏற்பட்டன. சஹ்ரான் குழுவின் மோதல் சம்பவத்தில் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் அந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் இருந்தனர், இதில் சஹ்ரான் கூட்டணி ஆட்கள் யார் என கண்டறிய முடியவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. ஒரேடியாக பலர் களமிறங்கினால் யார் யார் என்று கண்டறிய முடியாது. சஹ்ரானை தனிப்பட்ட முறையில் தெரியும். அதனால் அவர் இருந்தார் என்று கண்டேன். ஏனையவர்களை காணொலி மூலமாகவே கண்டறிய முடிந்தது.
சஹ்ரானை கைது செய்ய பொலிசார் விரும்பவில்லை என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இந்தக்கருத்தினை நான் நிராகரிக்கின்றேன். அதேபோல் 120 வீடுகள் காத்தான்குடியில் தீவைக்கப்பட்டது என்ற விடயம் உண்மையில்லை. எனது காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. இது சாதாரண விடயம் அல்ல. இத்தனை வீடுகள் தீ வைக்கப்பட்டது என்றால் அது நாடே அறிந்திருக்கும். மேலும் சஹ்ரான் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் வந்தன. அதுவும் இவரது பிரசாரங்களில் ஏனைய மதங்களை பிரிவுகளை விமர்சிக்கின்றார், வேறு எவரும் கூட்டம் நடத்தினால் கற்களால் தாக்குதல் நடத்துவதாக முறைப்பாடுகள் வந்தன. அதனை கட்டுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கவேண்டி இருந்தது. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பும் உள்ளது. இவர்களின் எண்ணமும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் எண்ணமும் ஒன்றாக இருந்தன. ஆனால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மீது முறைப்பாடுகள் வந்ததில்லை.
ஆரம்பகால கட்டத்தில் சஹ்ரான் சாதாரண ஒரு நபர். 2000 வாக்காளர்களைக் கொண்ட ஓர் அமைப்பின் தலைவர் என்றே தெரியும். அதற்கப்பால் ஒன்றுமே எனக்குத் தெரியாது. ஒருசில அரசியல்வாதிகளுடன் பேசியதும், உடன்படிக்கை செய்து கொண்டமையும் பின்னர் தெரிந்துகொண்டேன். அப்போதைய தேர்தல்களில் அவர் என்ன செய்தார் என்று ஒன்றும் எனக்குத் தெரியாது. ஒரு நபராக தெரியுமே தவிர நேரடியாகப் பழகும் அளவிற்கு ஒன்றும் இருக்கவில்லை. எனது காலகட்டத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த தடையும் இருக்கவில்ல. தலைக்கவசம் அணியாது அங்கு இளைஞர்கள் செல்வது உண்டு. தெரிந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை நடைமுறைப்படுத்தாது இருந்தில்லை.
தேர்தல் காலங்களில் முரண்பாடுகள் பல ஏற்பட்டன. அப்போது ஆமி மொய்தீன் பெயர் அதிகமாக பேசப்பட்டன. அவர் சிப்லி பாரூக் என்ற மாகாணசபை உறுப்பினருடன் இருந்தார். ஆனால் ஆமி மொய்தீன் பொலிசாருடன் தொடர்பில் இருக்கவில்லை. பிடியாணை சம்பவத்தின் பின்னர் இவர்கள் ஊரில் இருக்கவில்லை. தலைமறைவாக இருந்தனர். மேலும் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட காலத்தில் எனக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறுவதும் பொய். ஆனால் காத்தான்குடி பொலிஸ் அதிகாரியாக எனது கால எல்லை முடிந்துவிட்டது. அப்போதுதான் இந்த முரண்பாடும் ஏற்பட்டது. அப்போது எனக்கு இடமாற்றம் வந்தது. இது சாதரணமாக நடந்த ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli