அடிப்படைவாதிகள் குறித்து மேலதிக விசாரணைகளை நடாத்துங்கள்
பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு
தேசிய தௌஹீத் ஜமாஅத் அடிப்படைவாத அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்றைய தினம் அவர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள விசேட ஆலோசனை கடிதங்கள் இரண்டு ஊடாக அவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் தொடர் தற்கொலை தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த மே 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2123/2, 2123/3 ஆகிய இரு அதிவிசேட வர்த்தமானிகள் ஊடாக தடை செய்யப்பட்ட ஜமாஅத்தே மில்லத்துல் இப்ராஹீம், விலாயத் அல் ஸெய்லானி ஆகிய அடிப்படைவாத அமைப்புக்கள் தொடர்பிலும் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளார். அந்த அமைப்புக்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தி விசாரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
குறிப்பாக காத்தான்குடியை மையப்படுத்தி செயற்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அடிப்படைவாத அமைப்பு தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுகளை வெடிக்கச்செய்து அந்த அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் உயிரிழந்துள்ள நிலையிலேயே, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, மாவனெல்ல புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியன தற்போது வெவ்வேறாக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதை சட்டமா அதிபருக்கு அறியக்கிடைத்துள்ளதாக சட்டமா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன சுட்டிக்காட்டியதுடன், அந்த விசாரணைகள் மற்றும் அதன் தற்போதைய நிலைமை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபர், சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கும் பிரதியொன்றுடன் அறிவித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
-Vidivelli