- ஏ.எச்.ரெஸா உல் ஹக்
இலங்கை முஸ்லிம்கள் மீதான அண்மைய அத்துமீறல்கள் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பு நாடுகள் (OIC) வெளியிட்டிருந்த கூட்டறிக்கை குறித்து முஸ்லிம்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் அதிகமான சம்பாஷணைகள் இடம்பெற்றன. அக்கூட்டறிக்கையின் இறுதியில் “இனரீதியான வன்முறைகள் எழுவதனைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் அத்துமீறல்களில் பங்கேற்றியவர்களின் மதத்தினையோ அல்லது அரசியல் செல்வாக்கினையோ பாராது அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையினையும் எடுக்குமாறு இலங்கை நட்பு அரசாங்கத்தினை வலியுறுத்துகின்றோம்” என குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னர் எழுந்த சூழலானது, ஏற்கனவே பேரினவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருந்த முஸ்லிம் சமூகத்தினை பெரும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளி விட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை சந்தித்த புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலினை அடியோடு களைவதற்கான பூரண ஒத்துழைப்பினை இலங்கை முஸ்லிம் சமூகம் அரசாங்கத்திற்கும் பாதுகாப்புத் தரப்பிற்கும் வழங்குவதில் முன்னின்று வருகின்றது. எனினும், நாட்டின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் மற்றும் வெறுப்புப் பிரசாரங்கள் என்பன முஸ்லிம்கள் மத்தியில் பீதியினையும் பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மையினையும் தாண்டவமாடச் செய்துள்ளது. இத்தகையதொரு சூழலில் OIC இனது கூட்டறிக்கையானது வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்படி நிலைமைகளை முன்நிறுத்தி இலங்கை மீது பொருளாதார ரீதியான அழுத்தத்தினை OIC முன்னெடுக்கப் போவதாக குறிப்பாக கனிய எண்ணெய் வழங்குவதின் பால் அழுத்தத்தினை பிரயோகிக்கப் போவதான ஒரு கருத்தும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. இவ்வாறிருக்கையில், தனது இரண்டாவது தடவைக்கான இந்திய மக்களின் ஆசிர்வாதத்தினைப் பெற்ற இந்தியப் பிரதமர் மோடி, இலங்கைக்கான தனது விஜயத்தினை மேற்கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதியினைச் சந்தித்ததுடன் குண்டுத் தாக்குதலுக்குள்ளான கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றையும் பார்வையிட்டுவிட்டுச் சென்றார். இலங்கை முஸ்லிம்களின் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படும் ஒரு சூழல் மேலெழும்போது வெளிநாடுகளின் பிரதிபலிப்பு எவ்வாறிருக்கும்? இதன் யதார்த்தம் என்ன? போன்ற கேள்விகள் இங்கு எழுகின்றன.
தெற்காசிய நாடுகளின் அமைவிடமான இந்து -– பசுபிக் பிராந்திய, புவியியல் ரீதியான மூலோபாயமாக இருப்பினும் பிராந்திய அரசியலாக இருப்பினும் பல சிக்கல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் 21ஆம் நூற்றாண்டுக்கான தனது மேலாதிக்கத்தினை தக்கவைத்துக் காட்டும் சவால் மற்றும் மேற்கத்தேயத்தின் செழிப்பு என்பன ஆசியாவை மையப்படுத்தியுள்ளமை பல ஆண்டுகளுக்கு முன்னரே இனங்காணப்பட்டன. அதற்கேற்றாற்போல் அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளுடன் ஆளணி மற்றும் கலங்களை மூலோபாயமாக முன்னகர்த்தியதுடன் அதற்கு சமாந்திரமாக ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டது. மேற்படி பின்னணியினைத் தொடர்ந்து அமெரிக்கத் தரப்பிலிருந்து நகர்வுகள் குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் துரிதப்படுத்தப்பட்டன. அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிகளில் அதிகமான சதவீதத்தினை ஆசியாவில் நிலைகொள்ளவைக்கும் பென்டகனின் தீர்மானம்; ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடனான இராணுவக் கூட்டுறவு வலுவாக்கல் மற்றும் உடன்பாடுகள், வான்பாதுகாப்புக் கட்டமைப்புக்கள், சிங்கப்பூர் ‘ஷண்கி’ கடற்படைத்தளம் என்பன முக்கியத்துவத்தினைப் பெற்றன. அமெரிக்க பசுபிக் கடல் கட்டளைத் தளம் (PACOM) மற்றும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள ஏழாவது கடற்படைப் பிரிவு (7th Fleet) என்பன அமெரிக்க அரசாங்கங்களினால் தொடர்ச்சியாக போஷிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. மறுதலையாக எழுச்சி பெற்ற சீனாவும் இந்தியாவும் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதாரத்தினைத் தீர்மானிப்பதில் தனக்கான பங்கினை நிச்சயித்துக் கொள்ளல், அதிகரித்தல் என்பதன்பால் போட்டியிடும் அதே நேரம் வல்லரசான அமெரிக்காவின் இருப்பினை பிராந்தியத்தில் எவ்வாறு கையாள்வது என்பதன்பாலும் கரிசனை கொண்டுள்ளன. ஆக, இந்த மையப்புள்ளியானது பிராந்தியத்தின் ஒவ்வொரு நாட்டினுடைய அரசியலில் செல்வாக்கு செலுத்துவதாகவும் சிலபோது தீர்மானிப்பதாகவும், குறித்த ஒரு நாட்டின் மீது சர்வதேச ரீதியான வெளித் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் வரும்போது அதன் காத்திரத்தன்மை விளைவினைத் தீர்மானிப்பதாகவும் செயற்படுகின்றது. இத்தகையதொரு பூகோள அரசிற் சூழலில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஒரு நாட்டின் மீது எவ்வாறு காய் நகர்த்துகின்றன என்பதனை அறிதல் இதனை இன்னும் துலாம்பரமாக்கும். சீனா, ஒரு நாட்டில் உறுதியாகக் காலூன்றி தனது நலன்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படுவதற்கு மிக முக்கியமான அரசியல் மற்றும் தந்திரோபாயமான காரணங்களை, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தேய நாடுகள், பெரும்பாலும் அந்நாடுகள் சம்பந்தமாக, பல மேற்கத்தேய ஆய்வாளர்கள் உடன்படுவதைப் போன்று அகங்காரமான அணுகுமுறைகளும் நிலைப்பாடுகளும் கொள்கைகளுமே சீனாவிற்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றன. மனித உரிமை மீறல்கள் அல்லது வேறு விடயங்கள் குறித்து முறுகல் நிலைகள் தோன்றியவுடன் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தேய நாடுகள், குறித்த அந்நாட்டினை உலக அரங்கில் தனிமைப்படுத்திட தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கும். இது, அந்நாடுகளைத் தன்னிடம் கட்டுப்பட்டு மீள சமரசத்திற்கு கொண்டுவர முயற்சிக்கும் அமெரிக்க வியூகமாகும். ஆனால், ஆபிரிக்கா முதல் ஆசியாவரை இவ்வமெரிக்கக் கொள்கையும் அதனையொத்த வியூகமும் எதிர்பார்த்தளவு அமெரிக்காவிற்கு வெற்றியை நல்கவில்லை. ஆனால், சீனாவிற்கு அந்நாடுகளில் காலூன்றவே வழியமைத்துக் கொடுத்தது. அமெரிக்கத் தலைமையிலான நாடுகளின் கெடுபிடிகள் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பொதுவாக, அந்நாடுகள் அமெரிக்க தலைமையிலான நாடுகளின் பக்கம் சாயாமல் தத்தமது இருப்பினை உறுதிசெய்து கொள்ளப் போராடும். இச்சந்தர்ப்பத்தில், சீனா தனது வலையினை இந்நாடுகளுக்கு விரித்து அவற்றை ஆரத்தழுவிக்கொள்ளத் தொடங்கும். உலக அரங்கிலிருந்து குறித்த அந்நாடுகளுக்கு வரும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் எதிர் நடவடிக்கைகளின் போது அவற்றைக் காக்கும் நிலைப்பாட்டினை எடுக்கும். இதற்குப் பகரமாக அந்நாடுகளில் இருந்து தனது கூலியினைப் பெற்றுக் கொள்ளும். எவ்வளவுக்கெவ்வளவு அந்நாடுகளுக்கு அழுத்தம் வருகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அந்நாடுகளில் சீனா, காலூன்றி தனது அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான நலன்கள் குறித்த மூலோபாயமான இருப்பினை உறுதிசெய்து கொள்ளும். குற்றங்கள் நடைபெறும் வரை அல்லது பொய்க் குற்றச்சாட்டுகளைத் திணித்து அவற்றைக் காரணங் காட்டி தனது நலன்களை அடைய அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும். அமெரிக்காவோ அல்லது வேறெவருமோ அழுத்தங்கொடுக்கும் வரை பொறுத்திருந்து அவ்வழுத்தங்களில் போது அந்நாடுகளைக் காத்து தனது நலன்களை சீனா பெற்றுக் கொள்ளும். இதுவே அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளினதும் வெளியுறவுக் கொள்கைகளை மையப்படுத்திய இராஜதந்திரங்களில் உள்ள பிரதான வேறுபாடாகும். இந்தப் பின்னணியில் சீனா ஜனநாயக விழுமியங்களையோ அல்லது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனையொத்த நடவடிக்கைகள் என்பவற்றையோ பொருட்படுத்தாது தனது நலன்களை எவ்வாறு முன்னகர்த்துவது என்பதில் குறியாக இருக்கும். இதன் அடிப்படையில், ஜனநாயக ஆட்சி நடைமுறைகளை விடவும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத் (Centralize power) தன்மை வாய்ந்த அரசாங்கங்களை போஷிக்கும் போக்கை சீனா கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாகப் பின்பற்றி வருகின்றது. இதன் மூலம் தனது நெகிழ்ச்சியற்ற இராணுவத் தன்மை வாய்ந்த (Rigid and Regimental) ஆட்சிமுறைக்கு நியாயம் கற்பிக்கும் நோக்கமும் சீனாவுக்கு உண்டு. 2003 தொடக்கம் 2010 வரை ஆபிரிக்காவில் ஏற்பட்ட ஐந்து இராணுவ சதிப்புரட்சிகளினாலும் சீனாவின் கொள்கையிலோ அல்லது அதன் நலன்களிளோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த நாற்பது வருடங்களில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகளால் வடகொரியா, சிம்பாப்பே, மியன்மார், சூடான், ஈரான், ஈராக், லிபியா மற்றும் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானங்கள் மற்றும் தடைகளில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் எதிர்த்திருக்கிறது. இவ்வாறாக சீனா தனது உறுதியான பூகோள அரசியல், – பொருளாதார, – பாதுகாப்பு நலன்களின் தந்திரோபாயமான மற்றும் இராஜதந்திர நகர்வுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் பொருட்டே ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இவ்வளவு காலமும் செயற்பட்டிருக்கின்றது. எந்த ஒரு வீட்டோ பிரயோகத்தினையும் எந்த ஒரு நாட்டின் பொருட்டும் இலவசமாக அது வழங்கவில்லை என்பதனை இங்கு அழுத்திக் குறிப்பிடுதல் தகும். மியன்மார் மற்றும் இலங்கையில் சீனாவின் வியூகங்கள் பெரிதும் ஒத்த போக்கினைக் காட்டுகின்றன. ஆக, இத்தகைய போக்கிற்குள் இந்தியாவும் தனது நலன்களின் குறியாக இருக்கும் நிலையில் தன்னை படிப்படியாக உட்படுத்திக் கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில், மியன்மாரில் 1988ஆம் ஆண்டு ஜனநாயக ரீதியான எதிர்ப்பார்ப்பாட்டமானது இரும்புக் கரம்கொண்டு அடக்கப்பட்டதனைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் இந்து – மியன்மார் உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும் அதனைத் தொடர்ந்து மியன்மாரை மையப்படுத்தி சீனா, ஏகபோகியாக தனது மூலோபாய நலன்களைப் போஷிப்பதனைப் பார்த்து கலக்கமடைந்த இந்தியா, 1993இல் அடெல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் தனது மியன்மாருடனான உறவுகளை மீண்டும் மேம்படுத்திக் கொண்டது. 1994இல் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகளுக்கமைய விவசாயத்துறை, இயற்கை வாயு மற்றும் எண்ணெய், தொலைத்தொடர்பு, தகவல் தொழிநுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு என்பவற்றில் சீனாவிற்குப் போட்டியாக தனது பூகோளப் பொருளியல் மற்றும் தந்திரோபாய பூகோள பாதுகாப்பு நகர்வுகளை இந்தியா முன்னெடுத்தது. 2007ஆம் ஆண்டு மியன்மார் இராணுவ ‘ஜுண்டா’வுக்கு எதிராக அமெரிக்க மறை கரத்தின் பின்னணியில் ‘ஸப்ரோன்’ புரட்சி என்ற அகிம்சாவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 1988ஐப் போன்றே இராணுவ இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட்டது. உலகின் கடும் கண்டனத்திற்கு இலக்கான இவ்வடக்குமுறைக்கெதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா.வில் மியன்மாரிற்கு எதிராகத் தண்டனை வழங்கும் மசோதா ஒன்றைக் கொண்டுவந்தது. ஆனால், இதற்கெதிராக சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பாவித்தது. இந்தியா, உலக நாடுகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் மெளனம் காக்கும் அளவிற்குத் தனது பூகோள மூலோபாயத்தை மாற்றிக்கொண்டது. அதுமட்டுமின்றி மியன்மாரிற்கான அமெரிக்க தலைமையிலான உலக நாடுகளின் கெடுபிடியைத் தணிக்கும் வகிபாகத்தினையும் இந்தியா எடுத்தது. இந்தியாவின் மோடி நிர்வாகம் இதே அணுகுமுறையினை போஷித்து வருகின்றது. அண்மைக் காலங்களில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குரூரமான அடக்குமுறைகளுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுத்த போது, மோடி முதல் ஆளாக அங்கு ஆஜராகி, இந்தியா மியன்மார் அரசாங்கத்துடன் இருப்பதாக அறிவித்தார். குஜராத் கலவரங்களின் போது கொல்லப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளமையானது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, நிலமைகளை அவதானித்த அமெரிக்க அணி நாடுகள், தமது மியன்மாருக்கெதிரான இறுக்கமான கொள்கைகளினால் நாளுக்கு நாள் மியன்மாரினை மையப்படுத்திய பூகோள அரசியல் நகர்வுகள் பலவீனமடைவதானது இந்து -– பசுபிக் பிராந்தியத்தில் தனது இருப்பை பலவீனப்படுத்தும் தன்மை வாய்ந்தது என்பதனை அமெரிக்கா, பிரித்தானியா உணர்ந்தன. உலோக வளங்கள், பெறுமதிமிக்க மாணிக்க கற்கள், இயற்கை வாயு மற்றும் எண்ணெய், இதுபோக மிக மோசமான உட்கட்டமைப்பு, ஜனத்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மின்சார வசதியின்மை, வளமான ஆறுகள் அவற்றுடன சுமார் அறுபது மில்லியன் மக்களைக் கொண்ட சந்தை. இவற்றைச் சீர்திருத்துவதன் பின்னணியில் மியன்மாரில் தனது கம்பனிகளுக்கு பல் துறைகளிலும் காத்திருக்கும் பெரிய வாய்ப்புக்கள் என்பவற்றினைக் கருத்திற்கொண்டு மியன்மார் விடயத்தில் தனது அணுகுமுறையினை மாற்றிக் கொண்டுள்ளது. ஆக, இதுவே இங்கு விடயமாகும்.
அரேபிய மற்றும் முக்கியமான முஸ்லிம் நாடுகளைப் பொறுத்தவரையில் தெற்காசியப் பிராந்தியத்தில் அதன் நடவடிக்கைகளானது அமெரிக்க, சீன மற்றும் இந்திய முக்கோண அரசியலுடனோ அல்லது தனித் தனியான அரசியலுடனோ தொடர்பு பட்டதாகவேயுள்ளது. சவூதி தலைமைய நாடுகளைப் பொறுத்தவரையில் ஈரானுக்கெதிரான கூட்டமைப்பு வியூகத்தில் அமெரிக்கா சார்ந்த நலன் கூட்டமைப்பு நலன் (Coalition Interest) என்ற இடத்தினைப் பெறும். அணிசேரா கொள்கையினை பறைசாட்டி இந்தியா நடத்தும் தந்திரோபாய வெளிநாட்டரசியலும் ‘காஷ்மீர் பிரச்சினைக்கான ஐ.நா. வின் தீர்மானத்தை’ அது ‘இந்தியாவின் உள்ளக விடயம் ‘என்கின்ற அதன் வாதத்தினை வலுவூட்டும் விதமாக ‘ஒரு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடுவதில்லை’ என்கின்ற கொள்கையும் மிக முக்கியமானவையாகும்! ஆக, இக்கொள்கையினை தமக்கு சாதகமாக்கும் விதமாக சிரியன் அஸாத் ரெஜிம், இந்திய இராஜதந்திர நகர்வுகளை பலப்படுத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து சிரியா விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீட்டினை எதிர்ப்பதாகவும் அதன் இறைமையினை மதிப்பதாகவும் இந்திய தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக பற்றியெரியும் ஒரு சூழலினுள் இந்தியா மத்திய கிழக்கை நோக்கிய அதனது மூலோபாயமான பிரவேசத்தினை சில வருடங்களுக்கு முன்னர் எடுத்தது. ஏற்கனவே மத்திய கிழக்கில் பெரும் இந்திய டயஸ்போராவானது பொருளாதாரத்தில் முக்கிய செல்வாக்கினைக் கொண்டுள்ள நிலையில் மேற்படி நகர்வானது மோடி நிர்வாகத்தின் பால் சவூதி தலைமைய நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தியது. ஈரான் விடயத்தில் சீன, ரஷ்ய ஆதரவானது சவூதி அரேபியாவை ரஷ்யா மற்றும் சீனாவின் பக்கம் உறவுகளை முன்னெடுக்க நிர்ப்பந்தித்த அதே நேரம், சீனா மற்றும் இந்தியாவின் கனிய எண்ணெய்த் தேவையானது பெரும் சந்தையினைக் கொண்டதாகவும் உள்ளது. ஆக, இத்தகையதொரு மூலோபாய சூழலிலேயே சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் சீன அரசாங்கத்தினால் நடத்தப்படும் அட்டூழியங்கள் விடயத்தில் சவூதி முடிக்குரிய இளவரசர் மெத்தனமான போக்கினை வெளிப்படுத்தியமையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆக, இதுவே இங்கு யதார்த்தமாகும். இப்பிராந்தியத்தில் அமெரிக்க, சீன மற்றும் இந்திய நலன்கள் குறித்த போட்டி அரசியலில் அவற்றில் மூலோபாயமாகத் தங்கியுள்ள சக்திகள் இம்மூன்று சக்திகளின் நலனினை கருத்திற்கொண்டோ அல்லது தமது மூலோபாய நலத்தின் பால் கரிசனையுடையதாகவே காய் நகர்த்தும். மேலும் முஸ்லிம் நாடுகள் தமது ‘மென் வலு’ மூலோபாயத்தினை மட்டுமட்டாகவே இந்த பிராந்தியத்தில் பிரயோகிக்கும். மியன்மார் விடயத்தில் சவூதி, ரோஹிங்ய அகதிகளின் நலனின் பொருட்டாக மேற்கொண்ட நகர்வுகள் அத்தகையன. இதே விடயத்தில் துருக்கி, ராஜதந்திர தளத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு கடும் பிரயத்தனத்தினை எடுத்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது அமெரிக்காவுடனான 2015ஆம் ஆண்டு அணு உடன்படிக்கையினைத் தொடர்ந்து சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் உறுதியான மூலோபாயப் பங்காளியாகப் பரிணமித்துள்ள போதிலும் அதற்கே உரியதொரு போக்கினையும் பலமுறை அது வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இலங்கை விடயத்தில், இலங்கை தமது செல்வாக்கிற்குற்பட்டதாக இருத்தல் வேண்டும் என்கின்ற போக்கு அதனிடம் மிகைத்துள்ளது. ஆக, மோடி தனது இரண்டாவது பதவியேற்றத்தின் பின்னர் அயல் நாடுகளுக்கு விஜயம் செய்தலானது ஒரு பொதுவான சாம்பிரதாயமாகவோ அல்லது ‘அயலவர்களே அடிப்படை’ என்ற மோடி நிர்வாகத்தின் கொள்கையினை அடியானதாகவோ இருப்பின் தற்போதைய விஜயம் ஒரு இராஜதந்திர சூழலிலேயே நிகழ்ந்துள்ளமை கவனிக்கத்தக்கது. முஸ்லிம்களின் மீதான அத்துமீறல்களுக்காக சட்ட நடவடிக்கை குறித்த வினயமான OIC இனது கூட்டறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளதொரு சூழலில் மோடியின் வருகையானது ராஜதந்திரத் தன்மையினை அதிகரிக்கின்றது. இறுதியாக, உலக கனிய எண்ணெய் உற்பத்திச் சமநிலை மற்றும் சந்தையின் தளம்பலினை தவிர்த்து ஸ்திரநிலைக்குக் கொண்டு வருவதற்காக கனிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இவ்வருடத்திற்கான உற்பத்தியினை குறைப்பது பற்றி ஏற்கனவே கடந்த வருடம் குறிப்பாக OPEC மற்றும் ரஷ்யா, கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தன. அதனடியாக கொள்வனவு நாடுகளுக்கு மிதமிஞ்சிய வழங்கலில் (Supply) மாற்றங்கள் ஏற்படக் கூடுமென எதிர்வு கூறப்படுகின்றது.
-Vidivelli