‘தர்­மச்­சக்­சரம்’ என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது முஸ்லிம் என்பதால் தானே என்னைக் கைது செய்தார்கள்?

மஹியங்கனையில் கைதான பெண்ணின் கண்ணீர்க் கதை

0 1,087

மஹி­யங்­க­னையின் ஹஸ­லக்க பிர­தே­சத்தைச் சேர்ந்த எம்.ஆர். மஸா­ஹிமா என்ற பெண் தர்­மச்­சக்­சரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­தி­ருந்­த­தாக போலி­யாகக் குற்றம் சாட்­டப்­பட்டு ஹஸ­லக்க பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். செய்­யாத தவ­றுக்­காக அவர் கைது செய்­யப்­பட்­டது மாத்­தி­ர­மின்றி சிறைச்­சா­லை­யிலும் அடைக்­கப்­பட்டார்.

தற்­போது சட்­டத்­த­ரணி ஸரூக் மற்றும் அவ­ரது மனை­வியின் துணை­யுடன் மஸா­ஹிமா பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். சிறைச்­சா­லையில் இருந்து வெளி­யே­றிய மஸா­ஹிமா தனக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­யையும் அதனால் தான் பட்ட கஷ்­டங்­க­ளையும் கண்ணீர் மல்க தெரி­விக்­கிறார்.

ShortNewsTV இணை­ய­த­ளத்­துக்கு அவர் வழங்­கிய நேர்­கா­ணலின் முக்­கிய பகு­தி­களை இங்கு தரு­கிறோம்:

‘நோன்பு செல­வுக்கு இவர் (மஸா­ஹி­மா­வு­டைய கணவர்) எனக்கு சல்லி போட்­டி­ருந்­தாரு. அந்த 6500 ரூபா சல்­லிய எடுக்க காலைல 9 மணிக்கு போல போனேன். எனக்கு கால் வலி! அப்­பயும் நடந்­துதான் போனேன். பேங்க்ல 6500 ரூபா சல்­லியும் எடுத்­துட்டு பெரிய கடைல சாமானும் வாங்­கிட்டு வீல் ஒன்டு எடுத்­துதான் வீட்­டுக்கு வந்தேன்.

வீட்ல ஒரு 10 நிமிடம் போகக்­கொள்ள டிரபிக் பொலிஸ் ஆள் ஒருத்தர் வந்­தாரு. ஏன்ட மகள்­கிட்ட இப்ப ஹொஸ்­பிடல் பெய்த்து வந்­தது யாருண்டு கேட்­டாரு. அந்த நேரம் முன்­னுக்கு வந்­துட்டேன். வந்­த­வர்­கிட்ட நான்தான் வெளியே போனேன். ஹொஸ்­பிடல் போகல்ல. ஏன்ட மாப்ள சல்லி அனுப்­பி­யி­ருந்­தாரு அத எடுத்­துட்டு சாமானும் வாங்­கிட்டு வாரேன்டு சொன்னேன்.

அதற்கு அவர் ‘தர்­மச்­சக்­கரம் போட்ட உடுப்பு உடுத்­துட்டு ஊரெல்லாம் திரி­யி­ரன்டு எங்­க­ளுக்கு கோல் வந்­திச்சி’ என்டு சொன்­னாரு. நான் இந்த உடுப்­போ­டதான் போனே­னென்டு உடுத்­தி­ருந்த கவுன காட்­டினேன். அப்ப அந்த கவு­னோ­டதான் நான் இருந்தேன்.

அப்போ அந்த டிரபிக் பொலிஸ் அவர்ட பெரி­ய­வ­ருக்கு கோல் பன்னி ‘இது தர்ம்ச்­சக்­கரம் இல்ல… சும்மா பூ மாரிதான் ஈக்­கிது’ ன்டு சொல்­லிட்டு போட்டோ ஒன்டு எடுத்­து­பிட்டு பெய்ட்டார். அப்­பயும் நான் அந்த கவுன மாத்­தல்ல. அது களவு இல்­ல­தானே… அத­னால அதே கவு­னோட இருந்தேன். நான் ஒன்­னர வரு­டமா அந்த கவுன உடுக்­குறேன். கிளினிக் எல்லாம் கூட அதோ­டதான் போவேன்.

பொறகு 20 நிமிசம் கழிச்சி ஜீப் வந்­திச்சி. அதோட நான் வெளிய வந்தேன். அப்­பயும் நான் அந்த கவு­னோ­டதான் இருந்தேன். அவங்க எறங்கி வந்து, “தர்­மச்­சக்­கரம் உடுத்துப் போனது நீங்­க­தானே. தெரிஞ்­சியும் ஏன் உடுத்த?’ என்டு கேட்­டாங்க. அதுக்கு ‘தர்­மச்­சக்­கரம்’ ன்டா என்ன என்டு எனக்கு தெரி­யாது  என்று நான் சொன்னேன்.

இதே கவுன நான் ஒன்­னற வரு­சமா உடுக்­குறேன். தெரி­யாத சுட்­டிதான் உடுத்தேன். தெரிஞ்சா உடுத்­தி­ருக்க மாட்டேன்’ டு சொன்னேன். ‘அது சரி­வ­ராது இது தர்­மச்­சக்­க­ரம்தான்’ என்று சொல்­லிட்டு வேற உடுப்ப மாத்­திட்டு ஜீப்ல வந்து ஏறச் சொன்­னாங்க. அப்ப நான் அழுதேன். நான் வீல் ஒன்­டுல சரி வாறேன்டு சொன்னேன். ‘இல்ல எங்­க­ளுக்கு பெரிய இடத்­துல சொல்­லி­ருக்கு. ஜீப்ல ஏத்­திட்டு வரச் சொல்லி” ன்டு சொன்­னாங்க. நான் வேற கவுன் போட்­டுட்டு போனேன். கொண்டு பெய்த்து ஜெய்ல வெச்­சாங்க. அப்ப ஏன்ட கண­வரும் இங்க இல்ல.

ஜீப்ல போகக்­கொள கோல் எடுக்க பாத்த நேரம் வானாம்டு சொல்­லிட்­டாங்க. அங்க போன நேரம் எல்­லாரும் கேள்வி கேட்­டாங்க. நான் அதய திருப்பி சொன்னேன். “நீ வேனும்­டேதான் உடுத்­தி­ருப்பாய்’ ன்டு சொன்­னாங்க’ நான் வேனும்டே உடுக்­கல்ல இனிமே இத உடுக்க மாட்டேன் சேர்’ ன்னு சொன்னேன்.

அதுக்கு பொறவு பெரிய தொர கிட்ட கொண்டு போனாங்க. அவர் யாருக்கோ கோல் எடுத்து ‘எங்­கட பெரிய தொர’ பேசு­ரன்டு பேச சொன்­னாரு. சிங்­க­ளத்­து­லதான் பேசினேன். உண்­மக்­கிமே தெரி­யா­ம­தான உடுத்­திங்­களா? ன்டு கேட்­டாரு. நான்

‘ஓ’ ன்டு சொன்னேன். ‘எங்­கால அந்த கவுன்?’ ன்டு கேட்­டாரு. நான் 10 வரு­ட­சமா வெளி­நாட்­டுக்கு போய் வாறேன். கடை­சியா இருந்த ஊட்ல எனக்கு சாமான் அனுப்­பி­ருந்­தாங்க. எங்­கட மகள் பபா கெடக்க இருக்­கு­ற­தாள புள்­ளக்கி தேவை­யான சாமானும் அரிசி சாமனும் அனுப்­பி­னாங்க. அதுல எனக்கு அனுப்­பின உடுப்­புல ஒரு கவுன்தான் இது. பொட­வதான் அனுப்­பி­னாங்க. நான்தான் தெச்சேன்.

பொறவு, அதே கவுன திருப்­பியும் மாத்­திட்டு வர சொன்­னாங்க. “நான் உடுத்­தி­ருந்த கவு­னுக்கு மேலேயே உடுத்­துக்­கு­றேன்டு” சொன்னேன். அந்த கவுன போட்டு போட்டோ எடுத்­தாங்க. அந்த ஷோல் எல்லாம் வெலக்­கிட்டு என்­னய போட்டோ எடுத்து (அழு­கை­யுடன்) பேஸ்­புக்ல போட்­டி­ருந்­தாங்க. நான் ரிமான்ட்ல ஈந்து வந்­துதான் அத பாத்தேன்.

அன்­டக்கி முழுக்க பங்­கு­லயே வெச்­சி­ருந்­தாங்க. எல்­லாரும் கேட்டு கேட்டு ஒவ்­வொன்டு எழு­தி­னாங்க. எழுதி சைன் ஒன்று எடுத்­தாங்க. எதுக்­குன்டு தெரி­யாது எனக்கு சிங்­களம் வாசிக்க தெரி­யாது. உசா­விக்கு போட்டு தான் வெளியே எடுக்க வேனும்டு சொன்­னாங்க. அதுக்கு பொறவு ராவு 1 மணிக்கு தான் மகள் கோல் பன்னி சொல்லி என்ன பாக்க ஏன்ட மாப்ள வந்­தாரு.

அவர் கொழும்­புல மேசன் பாஸ்க்கு கைவேல செஞ்சி குடுக்­கு­ர­வரு. அவரும் அங்க எவ­ளோவோ கேட்­டாரு. அழு­தாரு. ஆனாலும் என்ன உடல்ல, ரிமான்ட் பன்­னு­வேன்டு தான் சொன்­னாங்க. விடிய 9 மணிக்கு மஹி­யங்­கன கோர்ட்­டுக்கு கொண்டு போர நேரமும் பொம்­பு­ளயோல் யாரும் வரல்ல. எல்லாம் ஆம்­பு­ளகள் தான். ரிமான்ட் பன்­னி­ன­வங்க பின்­னுக்கு இருந்­தாங்க. நான் நடு­வுல இருந்தேன்.

ஏண்ட மாப்ள 2000 ரூபா கட்டி லோயர் ஒருத்­தர புடிச்­சி­ருந்­தாரு. போர நேரமே பெரி­ய­தொர (ஓ.ஐ.சி) “உன்ன வெளிய எடுக்க ஏலாது. நல்லா இறுக்­கிதான் வெச்சி ஈக்­கிறேன். நீ தெரிஞ்­சிதான் தர்­மச்­சக்­க­ரத்த உடுத்­தீ­கிறாய்” ன்டு சொன்­னாரு. நான் திரும்­பியும் “எனக்கு தர்­மச்­சக்­க­ரமே தெரி­யாது” ன்டு சொன்னேன். அதுக்கு பிறகும் 27 ஆம் திகதி வரைக்கும் விளக்­க­ம­றி­யல்ல வெக்க சொன்­னாங்க. பது­ளைக்கு கொண்டு போற நேரமும் பொம்­பு­ளகள் இருக்­கல்ல. பொலிஸில் ரென்டு பேரும் டிரை­வரும் மட்டும் தான். இடம் கிட்­ட­வா­கிதான் ஒரு மிஸ் ஏறினா.

அங்க போனதும் நான் நோம்பு! சாப்­பா­டல்லாம் தந்­தாங்க. அதெல்லாம் எனக்கு தின்­னேலா. நான் ஸகர் நேரம் சாப்­பு­டா­மத்தான் நோம்­பெல்லாம் புடிச்சேன். 27 ஆம் திகதி மையங்­க­னைக்கி கொண்டு வந்­தாங்க. நான் நெனச்சேன்! என்ன வெளிய எடுப்­பாங்­கன்டு. கொழும்­புல இருந்து ரெண்டு லோயர்மார் வாராங்­கன்டு சொன்­னாங்க. ஸரூக் சேரும் அவர்ட வைப்பும் தான் வந்­தாங்க.

என்ன 17 ஆம் திகதி கைது செஞ்­சாங்க. பிறகு 27 ஆம் திகதி வழக்கு பேசி 7 நாள் வெச்­சாங்க. மறுகா 6 ஆம் திகதி தான் ஸரூக் சேரும் அவர்ட வைப்பும் என்ன வெளிய எடுத்­தாங்க. நான் அவங்­க­ளுக்கு தான் நன்றி சொல்­லனும். வேற யாருக்கும் இல்ல.

நானும் கூலி வேல செய்றன். உடுப்பு தெப்பேன். ஊடெல்லாம் பெரிசா இல்ல. பின்­னுக்கு ஊடு இருந்­துச்சு,  அத மகள் கல்­யாணம் முடிச்ச பொறவ் அவங்­க­ளுக்கு குடுத்­துட்டோம். சின்ன கட காம்­புரா ஒன்று உடுப்பு தெக்­கி­ற­துக்­காக கட்­டினோம். இப்ப அது­லதான் ஈக்­கிறோம். பின்­னுக்கு பொலித்தீன் கவ­ரால மூடி அது­லதான் ஆக்­குறோம்.

எனக்கு பிரஸர் இருக்கு, எழப்பு (களைப்பு) வரும். அதுக்கு கேஸ் (Gas) எல்லாம் தந்­தி­ருக்கி. அதுக்கு கிளினிக் போறேன். முழங்கால், படிக்­கட்டு எல்லாம் ஏற ஏலா. வருத்தம் எனக்கு வந்த நிலம வேற யாருக்கம் வரக்­கூ­டாது. இருக்­கிற முஸ்­லிம்­க­ளுக்கும் வரக்­கூ­டாது. நான் எவளோ கஷ்­டப்­பட்டேன். நான் முஸ்லிம் சுட்­டிதான் என்ன கைது செஞ்­சாங்க. அவங்­கட ஆள்க்­க­ளன்டா புடிக்க மாட்­டாங்க” என்று கண்ணீர் மல்க கூறினார்.

மஸா­ஹி­மாவை கைது செய்த நேரம் அவ­ரு­டைய கணவர் முனாப் கொழும்பில் இருந்தார். தனது மனை­விக்கு நடந்த அநீதி குறித்து அவர் இவ்­வாறு தெரி­விக்­கிறார்.

” எனது மனைவி கைது செய்­யப்­பட்ட விப­ரத்தை எனது மகள் தொலை­பேசி மூலம் தெரி­வித்தார். எனது கையில் 1000 ரூபாய் தான் இருந்­தது. அதையும் எடுத்துக் கொண்டு இரவு 1 மணி­ய­ள­வி­லேயே மஸா­ஹி­மாவை பார்க்கப் போனேன்.

அடுத்த நாள் பது­ளைக்கும் போனேன். இலங்­கை­யி­லுள்ள பலர் உத­வு­வ­தாக சொன்­னார்கள். பலர் என்னை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு பேசி­யதால் கொஞ்சம் தைரியம் ஏற்­பட்­டது. ஸரூக் சேரும் அவ­ரது மனை­வியும் தான் உத­வி­னார்கள்.

எங்­க­ளுக்­காக அவர்கள் பேசி­னார்கள். எங்­க­ளது ஏழ்­மையை புரிந்து கொண்டு எந்தக் கூலியும் இல்­லாமல் எங்­க­ளுக்­காக பேசி­னார்கள். பல சட்­டத்­த­ர­ணிகள் பேசி­னார்கள். ஆனால் வர­வில்லை. ஸரூக் சேரும் அவ­ரு­டைய மனை­வியும் தான் எங்­க­ளுக்கு உத­வி­னார்கள்.

எனக்கு மஸா­ஹி­மாவை வீட்டில் தனியே விட்டுச் செல்ல முடி­யா­துள்­ளது. அவர் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்ளார். வாகன சத்தம் ஒன்று கேட்டால் கூட பயப்­ப­டு­கிறார். எனக்கு தொழி­லுக்கு செல்­லவும் முடி­யா­துள்­ளது. கன­விலும் பயப்­ப­டு­கிறார்.

மஸா­ஹி­மா­வுக்கு சட்ட ரீதி­யாக யாரும் உதவ முன்­வ­ராத நிலையில் சட்­டத்­த­ரணி ஸரூக் மற்றும் அவ­ரது மனை­வி­யான சட்­டத்­த­ரணி நுஸ்ரா ஆகியோர் உதவ முன்­வந்­தனர். எந்­த­வித எதிர்­பார்ப்பும் இன்றி இல­வ­ச­மாக மஸா­ஹி­மா­வுக்­காக இரு­வரும் நீதி­மன்­றத்தில் வாதா­டி­யுள்­ளனர்.

மஸா­ஹி­மா­வு­டைய தர்­மச்­சக்­கர விவ­காரம் குறித்து சட்­டத்­த­ரணி ஸரூக் இவ்­வாறு தெரி­விக்­கிறார்.

” மே 27 ஆம் திகதி நாங்கள் இரு­வரும் மஹி­யங்­க­னைக்குச் சென்று அந்த வழக்கில் ஆஜ­ரா­கினோம். பொலிஸார் ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் தண்­டனைச் சட்­டத்தின் கீழ் மஸா­ஹி­மா­வுக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்­தி­ருந்­தனர்.

குறித்த ஆடையில் இருந்­தது தர்­மச்­சக்­கரம் அல்ல. இது கப்­ப­லு­டைய ‘சுக்கான்’ என்ற விட­யத்­தையே நாங்கள் வாதிட்டோம். இது போன்று கோல் மார்க் எனும் பிரித்­தா­னிய பெண்­ணுக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட வழக்கின் முடி­வு­களை நாங்கள் முற்­ப­டுத்­தினோம். இது தர்­மச்­சக்­க­ரமா இல்­லையா என்­பது தொடர்­பாக ஆராய பௌத்த ஆணைக்­கு­ழு­வுக்கும் தர­நிர்­ணய சபைக்கும் இந்த ஆடையை அனுப்பி வைக்க பொலிஸார் அனு­மதி கேட்­டார்கள். நீதவான் அதற்கு அனு­மதி வழங்­கினார். இந்த அறிக்கை வரும்­வரை (14 நாட்கள்) மீண்டும் மஸா­ஹி­மாவை சிறை­யி­ல­டைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. நாங்கள் நீதி­மன்­றத்தில் வாதாடி அதை 7 நாட்­க­ளாகக் குறைத்தோம்.

மீண்டும் ஜூன் 3 இல் வழக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது தர்­மச்­சக்­க­ரத்தின் வடிவம் தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் காணப்­ப­டு­வ­தாக புத்­த­சா­சன அமைப்பின் தரப்­பி­லி­ருந்து தெரி­விக்­கப்­பட்­டது. தர்­மச்­சக்­க­ரத்தின் வடி­வத்தை இனங்­காணும் திறம் கூட எதிர்த்­த­ரப்பில் இல்லை என்ற விட­யத்தை நாம் சுட்­டிக்­காட்­டினோம். வழக்கை சட்­டமா அதி­ப­ருக்கு மாற்­று­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து அதற்கு நாம் எதிர்ப்புத் தெரி­வித்தோம்.

அதனைத் தொடர்ந்தே மஸா­ஹி­மாவை 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடு­வித்­தார்கள். இந்த வழக்கை நவம்பர் 4 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

நவம்பர் 4 ஆம் திக­தியில் அந்தப் பெண்­ணுக்­கான நட்ட ஈட்டை எடுத்துக் கொடுக்­க­வி­ருக்­கின்றோம். ஒரு மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் 1 இலட்சம் ரூபா வரை நட்டஈட்டை பெற முடியும். மேலும் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றைத் தொடுக்க அனைத்து ஆவணங்களையும் செய்து வைத்திருக்கின்றோம். இத்தனையையும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியவர்களாகத்தான் செய்கிறோம். வேறு எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லை” என்றார்.

இதற்கிடையில் மஸாஹிமாவை அநியாயமாக கைது செய்தமை தொடர்பில் ஊடகங்களில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கமை ஹஸலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன நிஷாந்த குருநாகல் பொலிஸ் நிலையத்திற்கு சாதாரண கடமைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.