சிலைகளை உடைக்குமாறு உத்தரவிட்டது சஹ்ரானே
சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க இப்ராஹிம் மெளலவிக்கு 20 இலட்சம் ரூபா பணமும் வழங்கினார்; சி.ஐ.டி. மன்றுக்குத் தகவல்
மாவனெல்லை நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களானது, உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் உத்தரவுக்கமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று முற்பகல் மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதான விசாரணை அதிகாரியான சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க இதனை நீதிவானுக்கு அறிவித்துள்ளார். இதன்போது இந்த சிலை உடைப்பு விவகாரத்தை பூரணமாக நெறிப்படுத்தியுள்ள சஹ்ரான், அதனை முன்னெடுத்த சந்தேக நபர்களுக்கு ‘நீங்கள் போய் சிலைகளை உடைத்துவிட்டு என்னிடம் வாருங்கள்’ என கூறியுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த சிலை உடைப்பு விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே விளக்கமறியலில் உள்ள 14 சந்தேக நபர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர். இதனைவிட சி.ஐ.டி.யின் பிடியில் இந்த விவகாரம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 சந்தேக நபர்களும் நேற்று விஷேட பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிவானின் மேற்பார்வைக்காக ஆஜர் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இதுவரை கைதாகியுள்ள சந்தேக நபர்கள் 34 பேராவர்.
இதன்போது நீதிமன்றின் பாதுகாப்புக்காக மேலதிகமாக இராணுவம் வரவழைக்கப்பட்டிருந்தமையும் விஷேட அம்சமாகும்.
இந் நிலையில் சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்திய பின்னர் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க மேலதிக விசாரணை அறிக்கையை முன்வைத்து விடயங்களை தெளிவுபடுத்தினார்.
அதன்படி, புத்தர் சிலைகளை தகர்க்கும் மேற்படி செயற்பாடுகள் பயங்கரவாதி சஹ்ரானின் பூரண மேற்பார்வை மற்றும் உத்தரவின் கீழ் இடம்பெற்றுள்ளதாக சி.ஐ.டி. அதிகாரி நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தில் கைதாகி விளக்கமறியலில் உள்ள இப்ராஹிம் மெளலவி என்பவரது வீட்டில் இந்த சிலை உடைப்புக்கான வகுப்புக்கள் சஹ்ரானினால் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வகுப்பின் முடிவில் சிலைகளை உடைத்துவிட்டு நீங்கள் மீண்டும் என்னிடம் வாருங்கள் என சஹ்ரான் அங்கிருந்த தனது சகாக்களுக்கு கூறியுள்ளதாகவும் சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டினார்.
இதனைவிட சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேக நபர்கள் சிலர் சில நாட்களில் கைதான நிலையில் அந்த சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துக்கொள்ள சட்டத்தரணிகளுக்கு வழங்குமாறு கூறி சஹ்ரான் 20 இலட்சம் ரூபா பணத்தை இப்ராஹிம் மெளலவி எனும் சந்தேக நபருக்கு கொடுத்துள்ளமை தொடர்பிலும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அந்த அதிகாரி நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்கள் 14 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் உப்புல் ராஜகருணா, தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்கள் 20 பேரையும் மீள நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரிக்கவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி அவர்களை மேற்பார்வைக்காக மீள நீதிமன்றில் ஆஜர் செய்யவும் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.
அத்துடன் இந்த விவகார விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை அழிக்க, கேகாலை அதிரடிப்படை கட்டளைத் தளபதிக்கும் இதன்போது நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பித்தது.
-Vidivelli