நாட்டின் சில பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு மொழியிலான பெயர்ப் பலகைகள் மற்றும் பதாதைகளை உடனடியாக அகற்றுவதற்கு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பொதுக்கொள்கையின் அடிப்படையில் நாட்டில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்படும். இம்மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகளில் பெயர்ப் பலகைகள் அல்லது பதாதைகளைக் காட்சிப்படுத்த வேண்டுமாயின் அதற்கு விசேட அனுமதியினைப் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அரபு மொழியிலான பெயர்ப் பலகைகளும், பதாதைகளும் அந்தந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலய அதிகாரிகளினால் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.