கெக்கிராவை மடாட்டுகமயில் இயங்கி வந்த சிறியதோர் பள்ளிவாசல் கடந்த புதன்கிழமை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தமிழ்ப் பத்திரிகைகளும் இவ்வாறே செய்தியைப் பிரசுரித்திருந்தன.
தௌஹீத் பள்ளிவாசல் இன நல்லிணக்கத்துக்குப் பாதகமாக இருக்கிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மடாட்டுகமைக்கு மேலதிகமாக ஒரு பள்ளிவாசல் தேவையில்லை என்று ஊர் மக்களே பள்ளிவாசலை உடைத்து தரைமட்டமாக்கியதாக செய்திகள் வெளியாகின. உண்மையில் அப்பள்ளிவாசல் முழுமையாக தரை மட்டமாக்கப்படவில்லை. அதன் குபா வடிவிலான முகப்பு மாத்திரமே அகற்றப்பட்டது.
முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு முஸ்லிம்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்பட்டுவரும் இந்த சூழலில் முஸ்லிம் சமூகத்துக்குள் கொள்கை ரீதியான பிளவுகளை வலுப்படுத்தும் முயற்சியையே தற்போது ஊடகங்கள் அரங்கேற்றி வருகின்றமையை இதனூடாக அறியமுடிகிறது.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் இல்லங்களாகவே கௌரவப்படுத்தப்படுகின்றன. புனிதம் பேணப்படுகின்றன. முஸ்லிம்கள், அவர்கள் எந்தக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் பள்ளிவாசல்களை தங்கள் உயிரிலும் மேலாகவே கருதுகிறார்கள். இவ்வாறான நிலையில் ஏன் அந்தப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டது என நாம் ஆராய்ந்தோம். மடாட்டுகம பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரை தொடர்பு கொண்டோம். அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து மடாட்டுகம முஸ்லிம்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள். பொலிஸ் அதிரடிப்படையினர் அடிக்கடி இங்கு வருகிறார்கள். தௌஹீத் ஆதரவாளர்கள் இருக்கிறார்களா? என்று விசாரிக்கிறார்கள். விசாரணைகளுக்காக அழைத்துச் செல்கிறார்கள்.
இங்குள்ள தௌஹீத் பள்ளிவாசல், பொலிஸார் எங்கள் மீது சந்தேகப்படுவதற்குக் காரணமாக இருந்தது. இன்றைய நாட்டின் நிலைமையினைக் கருத்திற்கொண்டு மடாட்டுகமயில் மேலதிகமாக ஒரு பள்ளிவாசல் தேவையில்லை எனத் தீர்மானித்தோம். அதன் பின்பே பள்ளிவாசலின் முகப்பினை உடைத்து அப்புறப்படுத்தினோம் என மடாட்டுகம ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம். அக்பர் கான் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
மடாட்டுகம கிராமம்
கெக்கிராவை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள மடாட்டுகமயில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராவே வாழ்கிறார்கள். மடாட்டுகம ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வழங்கிய தகவல்களின்படி 168 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் மடாட்டுகமயைச் சூழவுள்ள பகுதிகளில் 1000 க்கும் மேற்பட்ட பெரும்பான்மைக் குடும்பங்கள் வாழ்கின்றன. இங்குள்ள முஸ்லிம்கள் கூலி வேலைகள் செய்தே தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். முச்சக்கர வண்டி செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். மடாட்டுகம நகரில் பெரும்பான்மையினத்தவர்களதும் முஸ்லிம்களதும் கடைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படாவிட்டாலும் ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களையடுத்து பெரும்பான்மையின மக்கள் முஸ்லிம் கடைகளைப் புறக்கணித்துள்ளதாக முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.
அத்தோடு முஸ்லிம்களுக்கு கூலிவேலை வழங்குவதைத் தவிர்த்துள்ளதாகவும் முஸ்லிம்களின் முச்சக்கரவண்டி பயணங்களைப் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தௌஹீத் பள்ளிவாசல்
மடாட்டுகமயில் சமகி மாவத்தையிலே இந்த தௌஹீத் பள்ளிவாசல் இயங்கி வந்துள்ளது. கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு சிறுவர் வாசிகசாலையொன்றினை நிறுவுவதற்காக காணியொன்றினை ஏ.சி. பதுரியா உம்மா என்ற பெண் வழங்கினார். இக்காணியில் நூலகம் என்ற அமைப்பில் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவங்களின் உதவியுடன் கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்பு அக்கிராமப் பிள்ளைகள் தொடர்ந்தும் வாசிகசாலையாக அதனைப் பயன்படுத்தாமை காரணமாக கிராமத்தைச் சேர்நத சிலர் தொழுவதற்கு அக் கட்டடத்தைப் பயன்படுத்தியுள்ளனர். நாளடைவில் அது தௌஹீத் பள்ளிவாசலாக மாற்றமடைந்துள்ளது.
மடாட்டுகம ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஊர் ஜமாஅத்தாருடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாசலின் முகப்பு அப்புறப்படுத்தப்பட்டதாக ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அக்பர் கான் தெரிவித்தார். பள்ளிவாசல் முகப்பை உடைப்பது தொடர்பில் கெக்கிராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினால் கடிதமொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
மடாட்டுகமயில் கடந்த 63 வருடங்களாக ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்று இயங்கி வருகிறது. மேலதிகமான தௌஹீத் பள்ளிவாசலில் ஒரு சிலரே தொழுகை மேற்கொள்கின்றனர். அந்தப் பள்ளிவாசல் இதுவரை பதிவு செய்யப்படவுமில்லை. எமது பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் இந்தப் பள்ளிவாசல் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் செய்துள்ளதால் இப்பகுதியில் இனங்களுக்கு இடையில் சகவாழ்வினையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு பள்ளிவாசலின் முகப்பை அப்புறப்படுத்துவதை விட எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை எனவும் அக்பர் கான் தெரிவித்தார்.
இதேவேளை, எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் அல்லாஹ்வின் மாளிகையான பள்ளிவாசலை ஊர் மக்களால் நினைத்தபடியெல்லாம் உடைக்கமுடியாது என எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாஸா நிலையத்திற்கு சீல்
மடாட்டுகமயில் இயங்கிவந்த ஜனாஸா நிலைய கட்டடத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடாத்தியபோது அங்கு சந்தேகத்துக்கிடமான இரசாயனப்பொருள் இருந்ததாகக்கூறி அக்கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அக்கட்டடத்தில் புதிய தரை விரிப்பொன்று களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த தரை விரிப்பு சேதங்களுக்குள்ளாகாமல் இருப்பதற்காக இரசாயனப்பொருள் 168 கிராம் அங்கு தரை விரிப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இப்பொருள் மீது சந்தேகம் கொண்டே கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டதாக ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் தெரிவிக்கிறார். ஹிரு தொலைக்காட்சி 168 கிராம் இரசாயனப்பொருளை 168 கிலோ கைப்பற்றப்பட்டதாக திரிபுபடுத்தியே செய்தி வெளியிட்டது என்கிறார் அவர்.
பள்ளிவாசல் முகப்பை உடைத்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் எமது அரசியல் தலைமைகள் ஜனாஸா கட்டடம் சீல் வைக்கப்பட்டமை, ஹிரு தொலைக்காட்சி தவறான செய்திகளைப் பரப்பியமை தொடர்பில் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை என்கிறார் அவர்.
தௌஹீத் பள்ளிவாசலின் முகப்பு உடைத்து அப்புறப்படுத்தப்பட்டதன் பின்பு பள்ளிவாசலாக இயங்கிய அக்கட்டடத்தில் காணி உரிமையாளரான ஏ.சி.பதுரியா உம்மாவின் குடும்பம் குடியமர்த்தப்பட்டுள்ளது. பதுரியா உம்மா இதுவரை காலம் தனது மகளின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பள்ளிவாசலை உடைக்கலாமா?
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் மாளிகை எந்தச் சோதனைகள் வந்தாலும் பள்ளிவாசலை உடைத்து அப்புறப்படுத்த முடியுமா? என்ற வினா தற்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
பள்ளிவாசலை பகுதியாகவோ, முழுமையாகவோ அப்புறப்படுத்துவதென்றால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
ஆனால், மடாட்டுகம தௌஹீத் பள்ளிவாசல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டிராதுவிடினும் பள்ளிவாசலாக நீண்டகாலம் இயங்கி வந்துள்ளது.
முஸ்லிம்களாலே பள்ளிவாசல் ஒன்று உடைக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் முஸ்லிம் சமூகம் இவ்வாறான செயற்பாட்டுக்கு தள்ளப்படுமளவுக்கு அவர்கள் அச்ச நிலையில் வாழ்கிறார்கள். தௌஹீத் என்றாலே ஐ.எஸ். அமைப்பு என்று பெரும்பான்மையினர் அச்சம் கொள்ளுமளவுக்கு நிலைமை பூதாகரமாகியுள்ளது.
ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்குப் பின்பு மடாட்டுகம போன்ற எத்தனையோ கிராம முஸ்லிம்கள் பல்வேறு சவால்களுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் ஈடுபடாது களநிலைமைகளை ஆராய்ந்து தீர்வுகள் காணவேண்டும். இல்லையேல் மடாட்டுகம போன்ற நிகழ்வுகள் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறலாம்.
-Vidivelli