ஜம்இய்யத்துல் உலமா தன்னால் சுமக்க முடியாத பாரத்தை சுமக்கிறது
யாப்பை திருத்தி புத்திஜீவிகளை உள்வாங்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில்
‘‘ஜம்இய்யத்துல் உலமாசபை தன்னால் சுமக்க முடியாத சுமையை தன் தோளில் சுமந்துகொண்டிருப்பதாகக் கருதுகிறேன். உலமா சபை தானாகவே இந்த சுமையைத் தன் தலையில் போட்டுக்கொண்டதா? அல்லது முஸ்லிம் சமூகம் அவர்களது தலையில் போட்டதா? அல்லது முஸ்லிம் சமூகப்பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு யாருமே இல்லையென்ற யூகத்தில் பொறுப்புகளை ஏற்க முன்வந்தார்களா? என்பது எனக்குத் தெரியாது…’’
இப்படி கவலை தோய்ந்த முகத்துடன் கருத்துத் தெரிவித்தார் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரும் பிரபல கல்விமானுமாகிய பேராசிரியர் ஏ.ஜி.ஹுஸைன் இஸ்மாயில்.
எங்களது சந்திப்பில் சமகால எரியும் பிரச்சினைகளே எமது பேசுபொருளாகின.
நேர்காணல்: எஸ்.ஐ.நாகூர் கனி
Q சென்ற வாரம் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சர் கபீர் ஹாஸிம், முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திருமதி பேரியல் அஷ்ரப், சட்டத்தரணி அலி ஸப்ரி ஆகியோர் கலந்துகொண்டு, ‘முஸ்லிம்கள் தற்போது தமது நிலைபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டனர். இது பற்றி உங்கள் கருத்தினை சொல்லுங்களேன்.
எந்தவொரு சமூகமும் தான் விட்ட தவறுகள் பற்றி பின்நோக்கிப் பார்க்காது, இருக்கின்ற அமைப்பையே கட்டிக்காக்க முன் வந்தால் அந்தச் சமூகம் முன்னேற மாட்டாது. அதனை ஒரு தேக்கமடைந்த சமூகம் என்றே குறிப்பிட வேண்டும். நம் அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது. ‘எந்தவொரு சமூகம் தனது நிலைபற்றி சந்தித்து, தன்னை மாற்றிக்கொள்ளாதவரை அச்சமூகத்துக்கு அல்லாஹ் உதவமாடடான்; அதாவது மாற்றத்தை ஏற்படுத்த மாட்டான்! ஆகவே சிந்திப்பதையும் அதன் மூலம் நாம் விட்ட தவறுகளையும் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை யாரும் மறுப்பார்களாயின் அன்னவர்கள் முஸ்லிம் சமூகத்தை எதிர்காலத்தில் அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்பவர்கள் என நான் நினைக்கிறேன்…
Q ஈஸ்டர் குண்டு வெடிப்பு அதனைத் தொடர்ந்து வடமேல் மாகாணத்தில் சுமார் 30 கிராமங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்கள் என்பன தொடர்பான பின்னணி – பின்விளைவுகள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
`ஈஸ்டர் குண்டுவெடிப்பு எதிர்பாராத ஒரு சம்பவம். அது சர்வதேச பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று. இருப்பினும் இலங்கை முஸ்லிம்களில் ஒரு சிறுகுழுவே அதனை நிறைவேற்றியது. இந்த பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதற்கு முஸ்லிம் சமூகம் பெரிதும் ஒத்துழைத்தது. இல்லாவிடில் இவர்களை இவ்வளவு விரைவில் கைது செய்யவோ – அழிக்கவோ முடிந்திருக்காது. இதனை பிரதமர் உட்பட பாராளுமன்ற உறுப்பினரும், பிவித்ருஹெல உருமய தலைவருமான கம்மன்பில பொலிஸ் பேச்சாளர் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். அது எமக்கு பெரியதொரு ஆறுதல். ஆனால், குண்டுவெடிப்பின் பின் இலங்கை முஸ்லிம்கள் மீதிருந்த நல்லெண்ணம் (Image) அழிந்து போயிற்று. இதனைத் திரும்பவும் கட்டியெழுப்புவது தற்போது நம்மீதுள்ள முக்கிய பொறுப்பாகும்.
குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை முஸ்லிம்கள் அல்ல எனப் பிரகடனப்படுத்துவதும், அவர்களது ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதைத் தடை செய்ததும் இழந்த நல்லெண்ணத்தை கட்டியெழுப்புவதற்கு போதுமானவை அல்ல. முஸ்லிம் சமூகம் தனது நடத்தைப் போக்குகளை மாற்றிக்கொள்வதன் மூலம் ஐந்து அல்லது பத்து வருடங்களில் இது சாத்தியமாகலாம். இதற்கு எம்மிடம் சிந்தனைத் தெளிவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் வரவேண்டும்.
வடமேல் மாகாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு ஈஸ்டர் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒரு உடனடிக்காரணம் மட்டுமேயாகும். முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு பெரும்பான்மை சமூகத்திற்குள் நீண்டகாலமாக வளர்ந்துவரும் வெறுப்புணர்வே முக்கிய காரணமாகும். இந்த வெறுப்புணர்வு பெரும்பான்மை பெளத்தர்களிடம் வளர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ‘தீவிரவாத குழுக்கள்’ வன்செயல்களில் ஈடுபட்டன. ஆனால், பெரும்பான்மைச் சமூகத்திடம் முஸ்லிம்கள் மீது அண்மையில் வெறுப்புணர்வு வளர்ந்து வருகிறது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
Q அண்மைக்காலங்களில் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு வளர்வதற்கான காரணங்கள் எவை?
`இதற்கு ஒரு சில முக்கிய காரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
(அ) அண்மைக்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் உடைக் கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றம். பெண்கள் கறுப்பு ஹிஜாப், நிகாப், புர்கா அணிவது. ஆண்கள் ஜுப்பா அணிவது இவை சவூதி கலாசாரம் என்பதும் கடந்த 1000 வருடங்களாக முஸ்லிம்கள் இந்த உடைகளை அணியவில்லை என்பதால், அரபு நாடுகளின் ஊடுருவல், இலங்கை நாட்டுக்குள் புகுந்துவிட்டதோ என்ற ஓர் அச்சம் இதனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இந்த உடைகளை அணிந்தோர் பயங்கரவாத செயல்கள், களவு, கொள்ளை, மனிதப் படுகொலைகள் புரிதல் என்பனவற்றில் ஈடுபடுவதை அவர்கள் ஊடகங்களில் பார்ப்பதால் இந்த அச்ச உணர்வு மேலும் வலுப்பெற்று வருகிறது.
(ஆ) முஸ்லிம் சமூகத்தில் ‘ஒரு சிறு குழுவினர்’ உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியமை. இது அரசு செயல்படுத்த வேண்டிய ஒரு நடைமுறை. இலங்கையில் முஸ்லிம் கலாசார அமைச்சு அல்லது முஸ்லிம் அறிஞர்களது ஆலோசனைப்படி இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிர்ணய சபை இதனை விநியோகித்திருந்தால் பெரும்பான்மை மக்களிடம் இதற்கான எதிர்ப்பு வளர்ந்திருக்காது. இதில் வியாபார நோக்கமும் இருந்ததாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
எது எப்படி இருப்பினும், அரசாங்கத்திற்கு செல்லவேண்டிய வருவாய் தனிப்பட்ட ஒரு சிலரிடம் குவிவதை எந்த நல்ல குடிமகனும் சகிக்கமாட்டான். நிலைமை பூதாகரமாக மாறி நாட்டில் இனக்கலவரங்கள் வரும் சூழ்நிலையிலே இந்தக் குழு ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்திக்கொண்டது.
சென்ற பல நூற்றாண்டுகளாக இலங்கை முஸ்லிம்கள் ஹலாலான உணவுகளையே புசித்து வந்தனர். இதற்குப் பெரும்பான்மை பெளத்த மக்களிடம் எந்த எதிர்ப்பும் காணப்படவில்லை. அரச அதிகாரத்தை உள்வாங்கி வருமானம் பெறும் நோக்குடன் ஒரு சிலர் செயற்பட்டதாலே பெரும்பான்மை மக்கள் அதனை எதிர்த்தனர். பெரும்பான்மை மக்கள் நாங்கள் ஹலால் உணவுகள் உண்பதற்கு எந்தத் தடையும் போடவில்லை…. என்பதை முஸ்லிம்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
தற்போது ஹலால் வழங்கும் நடைமுறையை வேறு வடிவங்களில் முஸ்லிம்களில் சிலர் மேற்கொள்வதாக நாம் அறிகிறோம். சமூகத்தின் எதிர்கால நன்மை கருதி, பிரச்சினை வளர்வதற்குமுன் அதனைக் கைவிட்டு விடுமாறு அன்னவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அரச நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த சான்றிதழ்களை விநியோகிப்பது புத்திசாதுரியமான ஒரு செயலாகவே அமையும்.
(இ) இறைச்சிக்காக முஸ்லிம்கள் மாடுகளை அறுப்பது, இது இந்து நாடான இந்தியாவிலும் வன்செயல்களுக்குக் காரணமாக உள்ளது. பெளத்த சமயம் உயிர்களை (பறவை – ஊர்வன) கொல்வதைத் தடை செய்கிறது. இந்து மதத்தில் மாடு கடவுகளின் வடிவமாகவும், கற்பகதருவாகவும் கருதப்படுகிறது. வட மாகாணத்தில் மாடுகளை அறுப்பதை நீதிமன்றம் தடைசெய்திருந்தது. ஆகவே, முஸ்லிம்கள் ஏனைய மதக்கோட்பாடுகளை மதிக்கவேண்டும்.
(ஈ) முஸ்லிம் மக்கள் நாட்டின் சட்டங்களை மதிப்பதில்லை என்ற அபிப்பிராயம், பெரும்பான்மையினரிடம் எம்மீது வெறுப்புணர்வு வளர்வதற்கு மற்றொரு முக்கிய காரணம். எல்லா சமூகங்களிலும் சட்டத்தை மதிக்காதவர்கள் உள்ளனர். ஆனால், அத்தகையோர் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுகின்றனர். ஆனால், ஒரு சில முஸ்லிம்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது, முஸ்லிம்கள் தாம் அதிகமாக சட்டத்தை மதியாதோர் என்ற உணர்வைத் தோற்றுவித்துள்ளது.
ஓர் உதாரணத்தை மட்டும் இங்கு கூறிட விரும்புகிறேன். நம் நாட்டின் பாதுகாப்பு நிலை மோசமாக இருப்பதால் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து பெளத்த விகாரைகள், ஹிந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலங்களில் பல சமய நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டன. முஸ்லிம் சமய, கலாசார அமைச்சர்கூட ஊடகங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு நிலைமையை பொறுத்து பள்ளிவாசல்களில் அதிகமானோர் கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டினார்.
ஒரு சிலர் மட்டுமே இதற்கு செவிசாய்த்தனர். ஜம்இய்யதுல் உலமாவும் மெளனம் சாதித்தது. வழமைபோல் ஜும்ஆ, தராவீஹ் தொழுகைகள் கூட்டாகப் பல பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டன. இதன்மூலம் முஸ்லிம்கள் சட்டத்தை மதிப்பதில்லை என்பதைக் காட்டினார்கள். மறுபுறம் பயங்கரவாதிகளால் ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அச்சுறுத்தல். முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற பிழையான எண்ணத்தை மற்றைய சமூகத்தினரிடையே இவர்கள் வளர்த்தார்கள். இது பாரதூரமான ஒரு செயற்பாடு என்பதை இன்னும் இலங்கை முஸ்லிம்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
சென்ற மே 18, 19 ஆகிய இரு தினங்களில் (வெசாக் தினங்கள்) பெளத்த விகாரைகளிலிருந்து ஒலிபரப்பான சுமார் ஒன்பது சமய உரைகளை நான் வானொலியில் கேட்டேன். அந்த உரைகளின் பின் பொதுமக்கள் சில வினாக்களையும் எழுப்பினர். அவர்களில் ஒருவர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.
‘நாங்கள் இன்று எமது வெசாக் நிகழ்வுகளை விகாரைகளுக்குள் மட்டுப்படுத்தி யுள்ளோம். மற்றவர்கள் சுதந்திரமாக வழமைபோல் சமய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பெளத்தர்களாகிய நாம் இப்போது அடிமைகளாகிவிட்டோமா?’ என வினவினார். இவ்வினாவுக்கு பெளத்த குரு மிக புத்திசாலித்தனமாகவும், நிதானமாகவும் பதில் கூறினார். இது அவரது அறிவு முதிர்ச்சியைக் காட்டுகிறது.
Q இந்த வெறுப்புணர்வுகளை நீக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
(1) இந்தக் கேள்விக்கு முதலில் ஆடைக்கலாசாரத்தை எடுத்துக்கொள்வோம். தான் விரும்பும் உடையை அணிவது அவரவர்க்குரிய உரிமை. உடைகளைத் தெரிவுசெய்யும்போது சமூக சூழ்நிலைகளைப் பற்றிச் சிந்திப்பது நமது கடமை. எந்தச் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்.
முகத்தை மூடுவது, மக்களின் பாதுகாப்புக்கு பெரியதொரு அச்சுறுத்தல் என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் காலம் மட்டுமல்ல, அது நீக்கப்பட்ட பின்னரும் முகம் மூடுவதை தடை செய்வது அவசியம்.
“முகத்தை மூடுவது முஸ்லிம்களுக்குரிய உரிமை” எனக் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. நாங்கள் இந்த உரிமையை இழந்து விட்டோம் எனக் கூறுவது, முஸ்லிம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அவர்களைப் பிழையான வழியில் திசை திருப்புவதற்கு எடுக்கின்ற ஒரு முயற்சியாகும் என்பேன்.
ஜம்இய்யதுல் உலமா ‘உடைக்கலாசாரம்’ பற்றி சிங்களத்தில் வெளியிட்டுள்ள ஒரு கைநூலில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. அதில் “முஸ்லிம் பெண்களின் உடையைப் பொறுத்தவரை பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் அபிப்பிராயம், பெண்கள் முகம், மணிக்கட்டுக்கு வெளியே உள்ள பகுதிகளை தவிர, ஏனைய பகுதிகளை கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ஒரு சில மார்க்க அறிஞர்கள் முகத்தையும் மறைக்க வேண்டும் என அபிப்பிராயப்படுகின்றனர். இங்கு நாம் பெரும்பான்மை மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டு, முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பதை தவிர்த்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தற்போது ‘காதை திறப்பது’ பற்றியும் மற்றொரு சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் காதை மூடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நானும் இருக்கிறேன். இதில் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் காதை திறப்பதையும் கறுப்பு நிற ஹபாயா அணிவதையும் ஒன்றாக இணைத்து சிலர் பிரச்சினையை சிக்கலாக்கியுள்ளனர். சல்வாரி உடை உடுத்து, தலைக்கு ‘ஸ்காப்’ கட்டுவதன் மூலமும் காதை மறைக்கலாம். மணிக்கட்டு வரை சட்டை அணிந்து, சாரியுடன் தலையில் ‘ஸ்காப்’ கட்டுவதன் மூலமூம் காதை மறைக்கலாம். இது போன்று மாற்று உடைகள் பல உள்ளன.
“காதை மூட கட்டாயம் கறுப்பு ஹபாயா அணிய வேண்டும் என்பதில்லை. ஹபாயாக்கள் பர்தா என்ற தோரணையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது ஒரு பெரிய வியாபாரமாக இப்போது மாறிவிட்டது. ஒரு ஹபாயா இப்போது 3000 ரூபா முதல் 25000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே காதை மூடுவதற்கான அனுமதியை கேட்பதுடன் நாம் நின்று விடவேண்டும். அதுவன்றி ஹிஜாப் – ஹபாயா விற்பனை செய்யும் வர்த்தகர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. நான் மற்றொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். சில சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவை காரணமாக, காதைத் திறக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். அத்தகைய வேளைகளில் நாம் விட்டுக் கொடுத்து பிடிவாதம் பிடிக்காமல் நடந்து கொள்ளவேண்டும். உடலியல் (Physiology) வரைவிலக்கணத்தின்படி முகம் என்பதில், காது உட்பட, நான்கு புலன்கள் அடங்குகின்றன. காதில் சில துல்லியமான கருவிகளை வைப்பதன் மூலம் வெளியிலிருந்து தகவல்களைப் பெற முடியும். அத்துடன்
பரீட்சை மண்டபங்களிலும் இவ்வாறான சில விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகவே பொதுப்பரீட்சை எழுதுவோர் காது உட்பட, முகத்தை கட்டாயம் திறக்க வேண்டும் எனப் பரீட்சை விதிகள் குறிப்பிடுகின்றன. எனவே, பரீட்சை மண்டபத்தில் நுழைந்தவுடன் காதை திறந்து விடுவதும், பரீட்சை முடிந்த பின் காதை மூடிக் கொள்ளுமாறும் பெண் பரீட்சார்த்திகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்வரும் ஆகஸ்டில் க.பொ.த (உயர்தரம்) பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவியர் இவ்வாறு நடந்து கொள்வது, பரீட்சை மண்டபத்தில் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலிலிருந்து விடுபடுவதற்கு உதவும். அத்துடன் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு ஏற்படும் வெறுப்பையும் குறைக்கமுடியும். சென்ற க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையின் போது ஒரு சில முஸ்லிம் மாணவிகள் ‘முகத்தை திறக்க முடியாது’ என அடம்பிடித்ததால், அவர்களது விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை எனவும் அறிகிறோம். மேலும், முதுகுவரை தொங்கும் பெரிய தலைக் கவசங்களைத் தவிர்த்து, தலைக்கு ‘ஸ்காப்’ கட்டிக் கொள்வதால், பரீட்சை மண்டபங்களில் ஏற்படும் சில அசௌகரியங்களை தவிர்க்க முடியும்.
(2) அடுத்து நாம் இறைச்சிக்காக அல்லது குர்பானிக்காக மாடு அறுப்பதை எடுத்துக் கொள்வோம். மாட்டிறைச்சி சாப்பிடுவது இஸ்லாத்தில் பர்ளோ – சுன்னத்தோ அல்ல. அல்லாஹ் நமக்கு அனுமதித்துள்ளான் என்பதற்காக, அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற நியாயம் இல்லை. இலங்கை ஒரு பௌத்த நாடு, ஹிந்துக்கள் அதிகம் வாழும் நாடு. ஆகவே, மாடு அறுப்பதைத் தவிர்த்து, ஆடுகளை அறுப்பதற்கு நாம் முன்வரவேண்டும். “ஆடு விலை கூடியது; மாட்டை ஏழுபேர் சேர்ந்து குர்பான் கொடுக்கலாமே” என்று சிலர் வாதிடுகின்றனர்.
ஜம்இய்யதுல் உலமா மாடு அறுப்பது பற்றி ஒரு கைநூல் வெளியிட்டுள்ளது. அது நாம் ஏன் மாட்டிறைச்சி சாப்பிடுகிறோம் என்பதை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. சமூக – வர்த்தக – பொருளாதார ரீதியில் நல்ல நியாயங்களை அந்நூல் முன்வைக்கிறது.
ஆனால், அறிவுரீதியாக நாங்கள் செய்வதை சரி காண்பது இங்கு முக்கியமல்ல. ஏனைய சமயத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், அவர்களது மதக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிப்பதும், அதற்கேற்ப எம்மை மாற்றிக்கொள்வதும் தான் முக்கியம். தாம் செய்வதை சரி கண்டு நியாயப்படுத்தும் மனப்போக்கை முஸ்லிம்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிடில் மேலும் பயங்கரமான பின்விளைவுகளை நம் சமூகம் சந்திக்க வேண்டிவரும்.
“இது ஒரு பௌத்த நாடு. அரசாங்கத்திற்கு மாடு அறுப்பதைத் தடைசெய்ய முடியும். ஆனால் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களிடையே விட்டுக்கொடுக்கும் மன நிலையை இன்னும் எதிர்பார்க்கின்றனர். ஆகவே ஜம்இய்யதுல் உலமா ஹஜ் பெருநாளைக்கு முன் இவ்விடயத்தில் முன்கூட்டியே செயற்படுவது நல்லது.
Q இப்போது பெரும்பான்மை மக்களின் மனங்களில் சிதைந்து போயுள்ள முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்தை ஜம்இய்யதுல் உலமா சபையால் கட்டியெழுப்ப முடியுமா?
“ஜம்இய்யதுல் உலமா சபை, தன்னால் சுமக்க முடியாத ஒரு சுமையை தன் தோளில் சுமந்து கொண்டிருப்பதாக’’ நான் கருதுகிறேன். ஜம்இய்யதுல் உலமா தானாகவே இந்த சுமையை தன் தலையில் போட்டுக்கொண்டதா? அல்லது முஸ்லிம் சமூகம் அவர்களது தலையில் போட்டதா?
முஸ்லிம் சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு யாருமேயில்லை என்ற யூகத்தில் பொறுப்புக்களை ஏற்க முன்வந்தார்களா? என்பது எனக்குத் தெரியாது.
தற்போது நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முஸ்லிம் புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஜம்இய்யதுல் உலமா சபைக்கு உதவ முன்வரவேண்டும். ஜம்இய்யதுல் உலமா சபை இத்தகையோரின் ஆலோசனைகளை உள்வாங்க வேண்டும். முஸ்லிம் அறிவுஜீவிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தற்போதைய ஜம்இய்யதுல் உலமா சபையின் யாப்பில் சில திருத்தங்களைச் செய்யவேண்டிய தேவை உள்ளது”
“நான் சுனாமி அனர்த்தத்தின் பின் இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே பிராந்தியத்திற்குப் போயிருந்தேன். அந்தப் பிராந்தியத்தின் உலமா சபையின் உப தலைவராக சமகொலா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பேராசிரியர்) இருந்தார். அவர் அப்போது முஸ்லிம்களது விவாகங்களை அரச காரியாலயங்களில் பதிவு செய்வது தொடர்பாக உலமா சபைக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் பற்றி என்னிடம் பேசினார். இலங்கை ஒரு சிறிய நாடு. முஸ்லிம் சிறுபான்மையாக வாழும்நாடு. இருப்பினும் இந்த பிரச்சினையை நாங்கள் சுமுகமாகத் தீர்த்துள்ளோம் என அவரிடம் விளக்கினேன். அதன் பின் அரசாங்கத்திற்கும் (முஸ்லிம் நாடு) உலமாக்களுக்கும் இடையில் நிலவிய முரண்பாடு தவிர்க்கப்பட்டது. ஆகவே இங்கையிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜம்இய்யதுல் உலமா சபைக்கு புத்திஜீவிகளின் பங்களிப்பு அவசியமானது.
Q இலங்கையில் இனப்பிரச்சினை தீரவேண்டுமாயின் இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி சிங்களமாக மாறவேண்டுமென பேருவளை நகர சபைத் தலைவர் குறிப்பிடுகிறார். இது குறித்து உங்களது கருத்துகளை அறிய விரும்புகின்றேன்.
“இலங்கையிலுள்ள சகல முஸ்லிம்களும் சிங்கள மொழி கற்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். 1951 ஆம் ஆண்டு அப்போதைய நகர சபைத் தலைவர் மர்ஹும் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் ‘‘முஸ்லிம் பாடசாலைகளில் போதனா மொழி சிங்களமாக இருக்கவேண்டும்’’ என்றவொரு பிரேரணையைக் கொண்டு வந்தார். இது தீர்க்கதரிசனமான ஒரு முன்மொழிவு. அப்போது முஸ்லிம்கள் இதை அலட்சியம் செய்தார்கள்.
முஸ்லிம்களின் போதனா மொழியாக – சிங்கள மொழியாக மாற்றுவது காலம் கடந்த ஒரு முயற்சி. இது இப்போது சாத்தியமில்லை. ஏனெனில் தற்போது 750 க்கு மேற்பட்ட தமிழ்மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் தமிழ்மொழிக்கு எதிரான போராட்டம் ஏற்பட்டபோதும் முஸ்லிம்கள் தமது தமிழ்மொழி மூலப் பாடசாலைகளைப் பாதுகாத்துக் கொண்டனர். பெரும்பான்மை சிங்கள சமூகம் இதனை எதிர்க்காமல் தொடரவிட்டது. இப்போதைக்கு போதனாமொழி மாற்றம் அவசியமற்றது. ஆனால் முஸ்லிம் பாடசாலைகளில் சிங்கள மொழி பிரிவுகள் ஆரம்பிக்கலாம்.
“பாடசாலைக்கு வெளியிலும் சிங்கள மொழியை வாலிபர், முதியோர் கற்பதற்கான ஒழுங்குகளைச் செய்யமுடியும். மத்ரஸாக்களில் கூட பௌத்த குருமார்களைக் கொண்டு சிங்கள மொழி கற்பிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல முயற்சி.
“ஆனால் நாம் ஒரு விடயத்தை மறந்து விடக்கூடாது. வடக்கு –கிழக்கில் வாழும் முஸ்லிம்கள், நாம் சிங்களவர்களுடன் நெருங்கி வாழ்வது போலவே தமிழ் மக்களுடன் நல்லுறவுகளை வளர்க்க வேண்டியுள்ளது. தமிழ்மொழிதான் இவர்களை இணைக்கும் பாலம். தந்தை செல்வநாயகம் போன்றோர் தமிழர் என்ற சொல்லை பிரயோகியாது ‘தமிழ் பேசும் மக்கள்’ என்றே உபயோகித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் பேசும் மக்களின் சார்பில் மர்ஹும் எம்.இஸட்.எம்.மசூர் மௌலானாவை ‘செனெட்டர்’ஆக நியமித்தது.
“விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக இந்த உறவு முறிவடைந்தது. அத்துடன் அண்மையில் முஸ்லிம் மக்களிடையே அறிமுகமான கலாசார ஊடுருவல்களும் முஸ்லிம்களை தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தியது. இதனால் இரு சமூகங்களும் தனித்தனி நிகழ்ச்சி நிரல்களின் கீழ் செயற்படுகின்றன. இது வரவேற்கத்தக்க விடயமல்ல. தொடர்ந்தும் வடக்கு –கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி போதனா மொழியாக அமைவதுடன் முறிந்துபோன உறவுகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
-Vidivelli