ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் முஸ்லிம்களுக்குப் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளன. முஸ்லிம் பெண்களின் கலாசார உடையை அடிப்படைவாதிகளின் சின்னமாகக் கருதிய பேரினவாதிகள் பலத்த எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
புர்கா மற்றும் நிகாபுக்கு மாத்திரமல்ல அபாயாவுக்கும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. நாட்டில் அபாயா தடை செய்யப்படாத விடத்தும் அரச அலுவலகங்கள், வைத்திய சாலைகள், பாடசாலைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளில் அபாயாவுக்குத் தடை விதிக்கப்பட்டது. அபாயா அணிந்து சென்ற பெண்கள் அபாயாவைக் களையுமாறு உத்தரவிடப்பட்டார்கள்.
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடைக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து புர்காவைத் தடைசெய்து ஜனாதிபதி 2019.4.29 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டார். 2121/1 ஆம் இலக்க குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானி முகத்தை மூடி ஆடை அணிவதற்கு தடை விதித்தது. முழு முகம் என்பதற்கு ஒருவரின் இரு காதுகளும் மறைக்கப்பட்டிருக்கக் கூடாது என்று வரை விலக்கணம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனால் பெண்கள் அபாயா அணியவும் முடியாதவாறு சர்ச்சை உருவாகியது. பின்பு உலமா சபை, முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி தான் வெளியிட்ட வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்து 2019.5.13 ஆம் திகதி 2123/4 எனும் இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானியொன்றினை வெளியிட்டார். இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி பெண்கள் இரு காதுகளையும் மறைத்து ஆடை அணியலாம். இந்த வர்த்தமானி அறிவித்தலே தற்போது அமுலில் உள்ளது.
இதேவேளை, பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள், ஆசிரியைகள் சாரி அணிந்து வருமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். இதற்கு எதிராக முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிட்டனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே கடந்த மாதம் 29 ஆம் திகதி பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்தச் சுற்று நிருபம் இன்று திங்கட்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் இந்தச் சுற்று நிருபத்தை அமுல்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து சுற்றுநிருபம் இடைநிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின்படி அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமைக்காக அலுவலகத்துக்குள் வரும்போது பெண் உத்தியோத்தர்கள் சேலை அல்லது ஒஸரி (கண்டியச் சேலை) அணிந்திருத்தல் வேண்டும். ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருக்க வேண்டும்.
குறித்த சுற்றுநிருபம் தொடர்பில் இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எட்டப்படும் என பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்று நிருபத்தில் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் அபாயா அணிந்து கடமைக்குச் செல்லும் வகையில் திருத்தங்களைச் செய்யும்படி முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சுற்று நிருபத்தில் திருத்தங்கள் செய்யப்படாதவிடத்து முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாவார்கள். எனவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது விவகாரத்தில் ஒன்றிணைந்து விரைந்து செயற்பட வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் அபாயா அணிந்து கடமைக்குச் செல்லும் வகையில் சுற்று நிருபத்தை வரைந்திருந்தபோதும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிரி அதற்கு மாற்றமாக சுற்று நிருபத்தைத் தயாரித்து அதில் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சுற்று நிருபத்துக்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கையொப்பமிடப் பட்டுள்ளது. அவர் 29 ஆம் திகதியிட்டே கையொப்பமிட்டதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரச உயரதிகாரிகள் இவ்வாறு ஒரு சமூகத்தின் கலாசார உடைக்குத் தடையேற்படும் விதத்தில் குறித்த சமூகத்துடன் கலந்துரையாடாது சுற்று நிருபங்களை வெளியிடுவது அனுமதிக்கப்பட முடியாததாகும். சமூகத்தின் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து குறிப்பிட்ட சுற்று நிருபத்தில் திருத்தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
-Vidivelli