கெக்கிராவை மடாட்டுகமயில் இயங்கி வந்த தௌஹீத் அமைப்பினரின் சிறிய பள்ளிவாசல் ஒன்றின் முகப்பினை பிரதேச முஸ்லிம் மக்கள் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் ஒத்துழைப்புடன் உடைத்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
மடாட்டுகம பகுதியில் பெரும்பான்மையினத்தவர்கள் முஸ்லிம்களுடன் முரண்படும் சூழ்நிலை உருவாகியிருந்த நிலையிலே அதனைத் தவிர்ப்பதற்காகவே பள்ளிவாசலின் முகப்பு உடைத்து அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நூலகமொன்றாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடமே பள்ளிவாசலாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் மேலதிகமாக தௌஹீத் பள்ளிவாசல் ஒன்று அவசியமற்றது என்பதால் பெரிய பள்ளிவாசல் செயற்குழு அதனை உடைக்கத் தீர்மானித்தது என பெரிய பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம்.அக்பர் கான் தெரிவித்தார்.
கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் பள்ளிவாசலை உடைப்பது தொடர்பில் அறிவிப்புச் செய்தபின்பே பள்ளிவாசலின் முகப்பினை அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தௌஹீத் பள்ளிவாசலுக்கு பெயர் சூட்டப்பட்டிருக்கவில்லை. இதில் தௌஹீத் ஜமாஅத்தினரே தொழுகை நடாத்தி வந்ததாக மடாட்டுகமையைச் சேர்ந்த எம்.அமீன் தெரிவித்தார்.
தௌஹீத் ஜமாஅத்தார் காரணமாக பிரதேசத்தில் வாழும் பெரும்பான்மை இனத்தவருடனான உறவுக்குப் பங்கம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்தப் பள்ளிவாசல் இரு நபர்களுக்கு வசிப்பதற்குரிய இடமாக ஊர்மக்களால் வழங்கப்பட்டுள்ளது.
-Vidivelli