நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் இனவாதத்தை – மதவாதத்தை தூண்டி அதனை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை சகல இன மக்களும் இணைந்து தோற்கடிக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
‘ரன் மாவத்’ வேலைத்திட்டத்தின் கீழ் மாவனெல்லை, உயன்வத்த – வெலேகட வீதி அபிவிருத்தி பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சர்வதேச தீவிரவாத பின்னணியில் இடம்பெற்றுள்ளது. இது எமது நாட்டுக்கோ – சமூகத்துக்கோ பொருத்தமான ஒன்றல்ல. அவர்கள் தீவிரவாதிகள்! அதனால்தான் அவர்களது உடல்களை முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்யப்போவதில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்தது.
எமது மார்க்கத்தில் அப்பாவி உயிர்களை கொலை செய்ய எங்கும் கூறப்பட்டில்லை. எனவேதான் சமூகம் என்ற ரீதியில் நாங்கள் சுயவிமர்சனம் செய்து இந்த தீவிரவாதம் வளர ஏதுவான காரணிகளை கண்டறிந்து அதனை மாற்றியமைக்கத் தீர்மானித்தோம். அதனடிப்படையில் சில சில மாற்றங்களை செய்து கொள்ளவும் நாங்கள் தயாராகியுள்ளோம்.
இராணுவத்தினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்கள். குறிப்பாக மாவனெல்லை மக்கள் இராணுவத்தை அணுகி தகவல்களை வழங்கி வருகின்றனர். சந்தேக நபர்கள் எவரேனும் இருந்தால் அவரை காண்பித்து தங்களது பொறுப்பினை அவர்கள் நிறைவேற்றுகின்றனர். சில பெற்றோர் தனது சொந்த பிள்ளைகளையே பாதுகாப்புத் தரப்புக்கு ஒப்படைத்துள்ளனர்.
நாம் முதலில் தாய் நாடு தொடர்பிலேயே சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இது மிகவும் கஷ்டமான – நெருக்கடியான காலமாகும். ஒரு சிலரின் தீவிரவாத செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் விரல் நீட்டுகின்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், கணிசமான முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக செய்ய வேண்டிய அர்ப்பணிப்புக்களை எந்த நாளும் செய்துள்ளார்கள்.
யுத்த காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் அதிகளவான முஸ்லிம்கள் பணியாற்றினார்கள். அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். கேர்ணல் முத்தலிப் போன்ற பெருமளமானவர்கள் தங்களது உயிர்களையே நாட்டுக்காகத் தியாகம் செய்துள்ளனர்.
அதேபோல், சுதந்திரப் போராட்டத்திலும் பல அர்ப்பணிப்புக்களை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது. அக்காலத்தில் சிங்களத் தலைவர்களுக்கு எந்தவித கோரிக்கைகளுமின்றி ஆதரவு வழங்கியிருந்தோம். நாங்கள் இன்றும் நாட்டுக்காக அர்ப்பணிப்புக்களை செய்யத் தயாராகவே உள்ளோம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. சிலர் இதனைப் பயன்படுத்தி இனவாதத்தை – மதவாதத்தை தூண்டி விட முயற்சிக்கின்றனர்.
நான் இன்று சிங்கள பிரதேசமொன்றுக்கு செல்லவிருந்த நிலையில் அங்கு எனக்கு செல்ல இடமளிப்பதில்லை என்று சிலர் கூறியிருந்தார்கள். எனினும், நான் அங்கு சென்று நான் முஸ்லிம் என்றாலும் நான் முதலில் இலங்கையர். இங்கு என்னைவிட பௌத்த மதத்துக்கு உதவி செய்துள்ள ஒருவரை காண்பிக்குமாறு கூறினேன். சகல மதத்தையும் ஒரே மாதிரி கவனிக்குமாறு கூறியே எனது பெற்றோர் என்னை வளர்த்துள்ளார்கள்.
என்னிடம் இனவாதம் கிடையாது. இனவாதம் என்பதே எனக்கு உணர்வதில்லை. எமது உடலில் உள்ளது ‘சிங்கள லே’ (சிங்கள இரத்தம்). எங்களது தாய்மார்களை எவரும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரவில்லை. ஆகவே, இனவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துபவர்களை தோற்கடிக்க நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
-Vidivelli