அண்மையில் குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களில் நோன்புப்பெருநாள் தொழுகையை நடாத்துவதற்கு முடியாத நிலைமை காணப்பட்டால் தொழுகைக்கான மாற்று இடங்களை அரச செலவில் ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெருநாள் தொழுகைக்கான மாற்று இடங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளுமாறும் இன்றேல் அரச செலவில் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறும் அமைச்சரவை அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமை வேண்டியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்களினால் 27 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சமய கிரியைகளை நடத்துவதில் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பள்ளிவாசல்கள் தாமதமின்றி புனரமைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்வரும் நோன்புப் பெருநாளுக்கு முன்பு பள்ளிவாசல்கள் புனரமைக்கப்படாவிட்டால் பெருநாள் தொழுகைக்கு மாற்று இடங்களை அரச செலவில் வாடகைக்கு பெற்றுக்கொள்ளுமாறும் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பணித்துள்ளார்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்கிடம் வினவியபோது அவர் விடிவெள்ளிக்கு பின்வருமாறு தெரிவித்தார்.
வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு நோன்புப்பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் தொடர்பில் விபரங்களைத் திரட்டி வருகிறோம். கிடைக்கப்பெறும் விபரங்களை அடிப்படையாகக்கொண்டே அரச செலவில் நோன்புப் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
-Vidivelli