- அலி றிசாப்
உடத்தலவின்னை
இப்போதுதான் நகரங்கள் மீண்டும் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. சிங்கள-–தமிழ் புத்தாண்டுக்குப் பூட்டிய கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. வியாபாரங்கள் இப்போதுதான் விழிக்கத் தொடங்கியிருக்கின்றன. கடந்த ஒரு மாதத்துக்குள் எதுவெல்லாம் நடக்க நாம் விரும்ப மாட்டோமோ அவைகள் எல்லாம் நடந்தேறி விட்டன. மீண்டும் வழமைக்குத் திரும்பி முன்பைவிட வேகமாகவும் புத்தி சாதுர்யத்தோடும் செயற்பட வேண்டிய ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம் அல்லது அவ்வாறு செயற்பட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். இப்போது சகவாழ்வு பற்றி நிறையப் பேசப்படுகின்றது. அதற்காக எத்தனையோ முன்னெடுப்புக்கள் மேற்கொள்கின்ற போதும் அவைகளில் பெரும்பாலானவைகள் போலித்தனமாக இருக்கின்றது. காரணம் சகவாழ்வு என்பது வெறும் சீசன் சுலோகமல்ல. அது பரம்பரையாக உணர்த்தப்பட வேண்டிய மற்றும் கட்டியெழுப்பப்பட வேண்டிய விடயம். நம் முன்னோர்கள் அந்நிய மதச் சகோதரர்களுடன் இருந்த அந்நியோன்யமான உறவு தற்போது முகநூலுடனும் வாட்ஸ்அப் உடனும் சுருங்கிவிட்டது. நாம் சகவாழ்வுக்காக பெரிதாக ஏதும் செய்ய வேண்டிய அவசியமில்லை. சிறு சிறு விடயங்கள் கூட நிலையான சகவாழ்வுக்கு உறுதியான அத்திவாரமாக அமையும். அவ்வாறு செயற்பட வேண்டிய சில விடயங்களை உங்கள் முன் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
மாற்றம் பெற வேண்டிய
மனப்பாங்கு:
இஸ்லாமிய சமூகம் அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஒரே சமூகம். இவ்வுலகம் அவர்களாலேயே நல்வழிப்படுத்தப்படல் வேண்டும். நன்மை பெறல் வேண்டும். மற்றும் இவ்வுலகம் செழிப்பாக்கப்படல் வேண்டும். ஒரு முஸ்லிம் இவ்வுலகம், மறுமை இரண்டையும் அழகாக்குவதற்காகவே படைக்கப்பட்டுள்ளான். மாறாக இவ்வுலகை வெறுத்து அதைச் செழிப்பாக்காமல் மறுமையை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுபவன் உண்மை முஸ்லிமாக இருக்கமாட்டான். அவ்வாறானவர்கள் வெளித்தோற்றத்தில் தக்வாதாரிகளாகத் தோற்றமளித்தாலும் அல்லாஹ்விடத்தில் எவ்வித பெறுமதியுமற்றவர்கள். மறுமையை மட்டும் நோக்காகக் கொண்டு இவ்வுலகில் செயற்படல் வேண்டும் என்று மூளைச் சலவை செய்யப்பட்டவர்களால் ஏப்ரல் மாதத்தில் ஏற்படுத்திய பேரழிவினால் தற்போது இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது இன்னல்களில் மாட்டிக் கொண்டுள்ளது. தானும் வாழ்ந்து அடுத்தவர்களையும் வாழவைக்கப் பழகுங்கள். இவ்வுலகைச் செழிப்பாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்வோம். அந்நிய மதச் சகோதரர்கள் எதுவும் அறியாதவர்கள். அவர்களுக்கு எங்களைப் பற்றி புரியவைக்க வேண்டியது நம் கடமை. எமது அழகான பண்பாடுகளின் ஊடாக எமது மார்க்கத்தைப் புரிய வையுங்கள். எமது மார்க்கத்தின் அழகைப் புரிந்துகொண்டால் அவர்களே எமக்கு ஒத்தாசையாக மாறுவார்கள். வெளிநாட்டுக்கு தஃவா பணி செய்ய செல்ல செலவழிக்கும் கால நேரங்களை மற்றும் பணத்தை புதிய எமது நாட்டின் அந்நிய மதச் சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப் புரிய வைக்க முயற்சிகளை மேற்கொள்ளவும் அதற்காக புதிய தஃவா நுட்பங்களின் அபிவிருத்திக்காகவும் பயன் படுத்துவதே காலத்தின் அவசியமாகும்.
கண்ணியமான சகவாழ்வு
தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் சகவாழ்வு நாடக அரங்கேற்றங்களைப் பார்க்கும்போது அதில் ஒரு போலித்தனம் இருப்பதைத் தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது. அந்நிய மதச் சகோதரர்களே இவர்களின் போலித்தனமான செயற்பாட்டைப் பார்த்து விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த வாரம் முகநூலில் சிங்கள சகோதர் ஒருவர் இவ்வாறு எழுதி இருந்தார் “நாங்கள் உங்களை மன்னித்து விட்டோம். நீங்கள் எங்கள் மதக் கடமைகளைச் செய்யப்போய் பாவிகளாகி விடாதீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் போலியாகச் செயற்படுகின்றோம் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். நாம் முஸ்லிம்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தொப்பிகளை அணிந்து கொண்டு வெசாக் கொடிகள் கட்டுவதை கடந்த காலங்களில் காணக் கூடியதாக இருந்தது. இந்த போலித்தனமான செயற்பாடுகள் எமது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. மாறாக நாம் செய்ய வேண்டிய போலித்தனமற்ற சிறு சிறு விடயங்களை மேற்கொள்ளலாம்.
அவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்- “அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் சொல்லுவதே எமது கடமை” அதையும் புதியவர்களுக்குச் சொல்ல முற்படாதீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மற்றும் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளிலுள்ள உங்கள் அந்நிய மத சகோதர நண்பர்கள் மத்தியிலிருந்து ஆரம்பியுங்கள். அந்நிய மதச் சகோதரர்களுக்கு கடும்போக்குடைய ஒருசில அறிஞர்கள் சலாம் சொல்வது கூடாது என்றிருந்தாலும் நவீன இமாம்களின் கருத்துப்படி குறிப்பாக இமாம் அஸ்ரப் அலி அல்-தஹனவி அவர்களின் கருத்துப்படி அந்நிய மதச் சகோதரர்களுக்கும் சலாம் சொல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளார். நாம் சொல்லும் சலாம் அல்லாஹ்வின் அருளால் அவர்களின் மனதில் ஒரு சாந்தியை ஏற்படுத்த போதுமானதாக இருக்கும்.
நோன்பு காலத்தில் உங்கள் அயல் வீட்டார்கள் அந்நிய மதத்தவர்களாக இருந்தால் அவர்களுக்கும் ஒரு கோப்பைக் கஞ்சியைக் கொடுங்கள். பெருநாள் சாப்பாட்டுக்கு உங்கள் அந்நிய மத நண்பர்களையும் அயல் வீட்டார்களையும் அழைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் போது ஒன்றாக இருந்து சாப்பிடுங்கள் அல்லது சமைக்கும் பெருநாள் சாப்பாட்டில் அவர்களுக்கும் ஒரு பங்கை ஒதுக்கி வையுங்கள். 20 வருடங்களுக்கு முன் நான் இவ்வாறான உறவை நேரடியாக அனுபவித்திருக்கின்றேன். ஆனால் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. சில வீடுகளில் இப்படியும் கீழ்த்தரமான விடயங்கள் நடக்கின்றன. அந்நிய மதத்தவர் ஒருவர் எமது வீட்டில் பாவிக்கும் பாத்திரமொன்றில் தண்ணீர் குடித்துவிட்டால் அல்லது சாப்பிட்டுவிட்டால் அப்பாத்திரத்தை திரும்ப பாவிக்க மாட்டார்கள். அல்லது 07 முறை கழுவுவார்கள். இது மிகவும் அசிங்கமான பண்பு. மனிதனை மனிதனாக மதிக்கப் பழகுவோம். அல்லாஹ்வின் எப்படைப்புக்களையும் கீழ்த்தரமாக எண்ணுவதை அல்லாஹ் ஒருபோதும் விரும்பமாட்டான்.
அந்நிய மதச் சகோதரர்கள் எல்லோரும் எம்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அல்ல. 90சதவீதமான சகோதரர்கள் எம்மீது நல்லெண்ணத்தையே வைத்துள்ளார்கள். அவர்கள் நடாத்தும் ஹோட்டல்களுக்கும் கடைகளுக்கும் செல்லுங்கள். எப்போதும் போலவே போலித்தனம் இல்லாமல் அவர்களுடன் நடந்து கொள்ளுங்கள்.
பயணங்களின் போது இருக்கையை கொடுக்க வேண்டிய அந்நிய மத சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் உங்கள் அருகில் வருவார்களாயின் எவ்வித தயக்கமுமின்றி உங்கள் இருக்கையைக் கொடுப்பது இஸ்லாத்தின் அழகைக் காட்டும். உங்கள் பிள்ளைகள் மத்தியில் மற்றைய மதத்தவர்கள் மற்றும் அவர்களின் மத அனுஷ்டானங்களை மதிக்கும் பண்பை வளருங்கள். நாட்டில் தற்போதைக்கு நடக்கும் விடயங்களைப் பற்றி பிள்ளைகளின் முன்னால் கதைக்காதீர்கள். குறிப்பாக சிறியவர்கள் முன்பாக கதைப்பதை தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு கதைப்பது அவர்களின் மனதில் வன்மத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.
தனது ஊரில் உள்ள பன்சலையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதனூடாகப் பொதுவான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதுடன் அங்கு தர்மப் பாடசாலைகளுக்கு வரும் சிறு பிள்ளைகளுக்கு இந்நாட்டின் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்த அந்த விகாரையின் விகாராதிபதியின் அனுமதியுடன் முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிங்கள வரலாற்றுப் பாடநூல்களில் வரலாற்றுச் சான்றுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் 1000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களைப் பற்றி அறிந்து கொள்ளும் விடயங்கள் அவர்களின் பாடவிதானத்தில் இல்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாக இருக்கின்றது (அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களில் அதிகம் ஈடுபட்டவர்கள் 17 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் நம்பிக்கையுடன் நடந்து கொள்வதே ஒரு முஸ்லிமுடைய பண்பாக இருக்கும். இவ்விடயத்தில் எம்மவர்களில் ஒருசிலர் மிகவும் அசிரத்தையுடன் செயற்படுவது முழு முஸ்லிம் சமூகத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்துக்கு ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகின்றேன். “கடந்த வெசாக் தினத்தன்று பன்சலையொன்றில் பிக்கு ஒருவர் அவ்வாறானதொரு சம்பவமொன்றை நினைவு படுத்திப் பேசியுள்ளார். அதாவது கடுகஸ்தோட்டையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பேக்கரி ஒன்று இருந்ததாகவும் குறித்த பேக்கரிக்கு சிங்கள இன வாடிக்கையாளர் ஒருவர் சென்றபோது அவருக்குத் தேவையான கேக்கை காட்சிக்காக வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுத்துக் கொடுத்ததாகவும் அதேவேளை, ஒரு முஸ்லிம் வாடிக்கையாளர் வந்தபோது அதே கேக்கை உள்ளிருந்து எடுத்துக் கொடுத்ததாகவும் என்ற கதையை அல்லது சம்பவத்தை நாம் சில வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்டிருப்போம். அச்சம்பவத்தின் பின்புலம் என்ன என்பது எமக்குத் தெரியாது. ஆனால் அச்சம்பவத்தை அவர்கள் இன்னும் மறக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
மேலும் என் நேரடி அனுபவம் ஒன்றையும் சொல்கின்றேன். ஒரு சமூகவியல் ஆய்வொன்றுக்காக காலியிலுள்ள பன்சலையொன்றுகுச் சென்றபோது அங்கு கற்றுக் கொண்டிருக்கும் சிறிய வயதுடைய பிக்குகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய அவர்களின் மனோபாவம் மகிழ்ச்சியடையும் விதமாகக் காணப்படவில்லை. இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீதான காழ்ப்புணர்ச்சி ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு ஊட்டப்படுகின்றது. அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய போதிய தெளிவின்மை காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. அப்பன்சலையில் பணியாற்றும் தலைமைப் பிக்குவின் கருத்துப்படி தற்போது சிங்கள சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்காகவும் இடையிலான உறவு விரிசலடைந்து விட்டது. முன்பு போல் முஸ்லிம் சமூகம் எம்மோடு சேர்ந்து பொது விடயங்களில் ஈடுபடுவதில்லை எனக் குற்றம் சாட்டினார். இதன் மூலம் புலப்படுவது என்னவெனில் சகவாழ்வு விடயத்தில் எமது சமூகம் ஆரோக்கியமாக இயங்கவில்லை என சாட்சி பகர்கின்றது. எமது சமூகத் தலைமைகள் ஆரோக்கியமான சகவாழ்வு விடயத்தில் போதுமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளாவிடின் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் இலங்கையில் இன்னும் பயங்கரமானதாக இருக்கும் என்பதை எதிர்வு கூறமுடியும்.
சகவாழ்வு என்பது எமது மத உரிமைகளையும் அடையாளங்களையும் விட்டுக் கொடுப்பதல்ல. அப்படி விட்டுக் கொடுப்பது ஆரோக்கியமானதாக இருக்கவும் மாட்டாது. ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு அழகாக சுன்னத்தான முறையில் தாடி வைத்திருந்தவர்கள் தற்போது முகத்துடன் ஒட்டிய மாதிரி இருக்கின்றது. முகத்தை மறைப்பது மட்டுமே சட்டத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதே தவிர அபாயக்கள் மற்றும் ஹிஜாப் அணிவது தடை செய்யப்படவில்லை. ஆனால் எம்முடைய சில பெண்கள் உடனடியாக சாரிக்கு மாறியது தன் அடையாளங்களையே மாற்றிக் கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.
ஆகவே, புரிதலுடன் கூடிய சகவாழ்வே ஆரோக்கியமானதாக இருக்கும். அந்நிய சமூகத்தவர்களுக்கு எமது மத அடையாளங்களின் முக்கியத்துவம் புரியவில்லையாயின் அவர்களுக்குப் புரியவைப்பது எமது கடமை. அதற்காக அழகான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது நம்மவர்களின் கடமை.
-Vidivelli